அன்புடன் அந்தரங்கம்!
அன்பு அம்மா — இல்லத்தரசி, வயது: 28. எம்.எஸ்சி., பிசிக்ஸ் படித்து முடித்தவுடன் எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர், பெற்றோர். திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆகின்றன. ஒரு தனியார் வங்கியில் கேஷியராக பணிபுகிறார், கணவர். எங்களுக்கு இரு பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு வயது 4. இளையவளுக்கு வயது 2. நாங்கள் சென்னை புறநகர் அபார்ட்மென்ட்டில் மூன்றாவது மாடியில் வசிக்கிறோம்.திருமணமான முதல் ஆறு மாதம் அமைதியாக கணவருடன் குடும்பம் நடத்தினேன். மூத்தவளை கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்தில் ஒரு கெட்ட கனவு வந்தது. கனவில் ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறார், கணவர். பதைபதைத்து எழுந்து அமர்ந்தேன். பக்கத்தில் நிம்மதியாக துாங்கிக்கொண்டிருக்கும் கணவரை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டேன். அன்றிலிருந்து ஆரம்பித்தது, எனக்கு கெட்ட காலம்.சாப்பாட்டில் பல்லி விழுந்து கணவர் இறந்து விடுவாரோ என பயந்து, சாப்பாட்டை வெறித்தனமாய் ஆராய்வேன்.கணவர் வேலைக்கு செல்ல பயன்படுத்தும் ஸ்கூட்டர், 'பிரேக்' பிடிக்கிறதா என, வாரம் இருமுறை மெக்கானிக்கை விட்டு சோதனை செய்வேன். மணிக்கு, 30 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என, கணவரிடம் சத்தியம் வாங்கியுள்ளேன். 'ஹெல்மெட்' கணவன் தலையை பாதுகாக்குமா என, தினம் காலையில் பரிசோதிப்பேன். காலையில் பத்திரமாக வேலைக்கு போய் சேர்ந்து விட்டாரா என, தினம் காலை, 10:10 மணிக்கும், மாலையில் வீட்டுக்கு கிளம்பி விட்டாரா என, மாலை, 5:10 மணிக்கும் போன் செய்வேன். ஸ்கூட்டர் ஓட்டும்போது பிரதமரே போன் பண்ணினாலும், எடுத்து பேசக் கூடாது என, கட்டளை பிறப்பித்துள்ளேன்.கணவன் தலையில் கருடன் எதாவது ஒரு விஷ பாம்பை தவறவிட்டு விடுமோ, கணவன் படுக்கைக்கு அடியில் தேள் ஒளிந்திருந்து கடித்து விடுமோ, குளித்து பாத்ரூமிலிருந்து வரும் கணவர் வழுக்கி விழுந்து விடுவாரோ, தலைக்கு மேல் சுழலும் பேன் அறுந்து கணவர் தலையில் விழுந்து விடுமோ, கணவர் உபயோகிக்கும் எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸில் மின்கசிவு ஏற்பட்டு, 'ஷாக்' அடித்து விடுமோ, 'வாக்கிங்' செல்லும்போது, கணவரை தெரு நாய் கடித்து விடுமோ, என்ற பயம்.தெருவில் நடக்கும் இரு நபர் சண்டையை விலக்கப் போய் கணவர் கத்திக்குத்து வாங்கிடுவாரோ, புற்றுநோய் வந்து விடுமோ, 'ஹார்ட் அட்டாக்' வந்துவிடுமோ?இப்படி தினம் நொடிக்கு நொடி, கணவருக்கு எதாவது ஆகி இறந்து விடுவாரோ என பயந்து சாகிறேன். கணவருக்கு, இடுப்பிலும், புஜத்திலும், மணிக்கட்டிலும் மந்திரித்த கயிறுகள் கட்டி உள்ளேன். கணவரை தவிர்த்து, குழந்தைகளுக்கோ, பெற்றோருக்கோ, மாமனார் - மாமியாருக்கோ, உறவினர் நட்பு வட்டத்துக்கோ எதாவது ஆகிவிடும் என, நான் பயந்ததே இல்லை. தினமும் கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்; குளியலறையை தேய்த்து கழுவுகிறேன்; படுக்கையை தட்டி போடுகிறேன். எலக்ட்ரீஷியன் வைத்து, மின் உபகரணங்களை சோதிக்கிறேன். தினம் சாமி படம் முன் நின்று, கணவருக்காக கும்பிடுகிறேன். வாரம் ஒரு முறை கோவிலுக்கு போகிறேன்.என் செயல்கள் கண்டு என்னை, 'பயந்தோளி பாப்பா' என, கிண்டல் செய்கிறார், கணவர்.என் பயம் அர்த்தமற்றதா, கணவரை, 100 வயது வரை பாதுகாப்பாய் வாழ வைக்க நான் வேறென்னென்ன செய்ய வேண்டும் என, பட்டியலிடுங்கள் அம்மா.— இப்படிக்கு,அன்பு மகள். அன்பு மகளுக்கு — உனக்கு இருக்கும் மனநல பிரச்னையை, 'ஆன்ஸைட்டி டிஸாடர்' என்பர். தமிழில், 'பதகளிப்பு கோளாறு' என மொழிபெயர்ப்பர். அமெக்காவில், இப்பிரச்னை உள்ளவர்கள் மிக அதிகம். இந்தியாவில், 5.8 சதவீதம் பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களை விட பெண்கள் இப்பிரச்னையால் அதிகம் அவதியுறுகின்றனர்.படித்தும், வேலைக்கு போகாத இல்லத்தரசி. பொருளாதாரம் மற்றும் தாம்பத்ய ரீதியாய் கணவனை முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறாய். கணவன் இல்லாத, மனைவியர் வாழ்க்கை பாழ் என்கிற பொய்புனைவு உன்னைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. கணவன் இல்லாவிட்டால் எப்படி இரு மகள்களை வளர்த்து படிக்க வைத்து, ஆளாக்கி மணம் செய்து கொடுப்பேன் என்ற பயம் பூதாகரமாய் உன் முன் நின்று பீதியூட்டுகிறது. இந்த மனநல பிரச்னை, உன்னை போன்ற லட்சக்கணக்கான தமிழக தாய்மார்களுக்கு இருக்கிறது. ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தால் அவன் பாதுகாப்பை பற்றி அதீதமாய் கவலையுறுவது இயல்பே.உன் பிரச்னைக்கான தீர்வை கீழ்க்கண்டவைகளில் விளக்கமாக கூறியிருக்கிறேன் மகளே. * பிறப்பும், இறப்பும் நம்மை கேட்டு நடப்பதில்லை. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை பற்றி மிகையாய் கவலைப்படுவது அனாவசியம். அதே சமயம் விபத்துகளிலிருந்தும், நோய்களிலிருந்தும், விஷக்கடியிலிருந்தும் முடிந்த வரை நம்மை தற்காத்துக் கொள்வோம்* யோகா, தியானம் கற்றுக்கொள். இசை கேள். சரிவிகித உணவு உண். நகைச்சுவையை ரசி. வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகு. லாஜிக் இல்லாத பயங்களை வெறுத்து ஒதுக்கு* மனநல மருத்துவரை பார். கடைசியாக ஒரு விஷயம்... இவ்வுலகிற்கு தனியாக வந்தோம், தனியாக இறக்க போகிறோம். மனித உறவுகள் இடையில் வந்து இடையில் போகும். மகளே, மரணத்தை தத்துவார்த்தமாக எடுத்து கொள். யார் இருந்தாலும், இறந்தாலும் இவ்வுலகம் தொடரும்.வழிப்போக்கர்களாய் வாழ்வோம் மகளே! — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.