அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 33 வயது பெண். திருமணமாகி, ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். சிறிய அளவில், 'எக்ஸ்போர்ட்' பிசினஸ் செய்யும் கணவர், அடிக்கடி வெளியூர் சென்று வருவார்.என் மீது அன்பாக இருப்பார். அதனால், அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் வந்தது இல்லை. ஆனால், கணவருக்கும், வெளியூர் ஒன்றில் வசிக்கும், இவரை விட நான்கு வயது அதிகமான ஒரு பெண்மணிக்கும் தொடர்பு இருப்பது, உறவினர் ஒருவர் மூலம் தெரிய வந்தது.முதலில் இதை நம்பவில்லை. ஆனால், சில நாட்களிலேயே அவரது போன் அழைப்புகள் மற்றும் மெசேஜ் மூலம் உண்மை தெரிய வந்தது. அதன்பின், தினம் தினம் எங்களுக்குள் சண்டை வர ஆரம்பித்தது.எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதாலேயே, அப்பெண்ணை, எங்கள் ஊரிலேயே ஒரு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.இந்த விஷயம் என் பெற்றோருக்கு தெரியாது. அவர்கள் மனம் சங்கடப்படுவரே என்று மறைத்து விட்டேன்.தினமும், தோட்டத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பேன். இது, என் பக்கத்து வீட்டில் இருக்கும் கம்பெனியின் மேலதிகாரி ஒருவர் கவனித்திருக்கிறார்.ஒருநாள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தினமும் அழுவதால் உடல்நலம் தான் பாதிக்கும் என்று ஆறுதலாக பேசினார். எப்பவாவது சிறிது நேரம் இப்படி பேசி ஆறுதல் கூறுவார்.அவரது ஆதரவான பேச்சில், மன பாரம் சற்று குறைய ஆரம்பித்தது. தினமும் அவருடன் பேச மாட்டோமா என்று மனம் ஏங்க ஆரம்பித்தது. என் மகளிடமும் பாசமாக நடந்து கொள்வார்.நாளடைவில், என் துக்கத்தை மறந்து, அவருடன் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.வீடு, கோவில் என்று அவ்வப்போது சந்தித்து பேச ஆரம்பித்தோம். நாளடைவில், அவர் கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டு வர முயற்சிப்பது தெரிந்து, விலக ஆரம்பித்தேன்.இந்நிலையில், அவருக்கு வேறு ஊருக்கு, பணி மாறுதல் கிடைத்து, சென்று விட்டார். வெளியூர் சென்ற பின்னரும், தினமும் போனில் பேச ஆரம்பித்தார். என்னால் அவரை மறக்க முடியவில்லை. போன் செய்து, 'உன்னை பார்க்க ஊருக்கு வருகிறேன். இந்த இடத்தில் எனக்காக காத்திரு...' என்று கூறுவார்.அவரது செயல் எல்லை மீறுவதாக தோன்றுகிறது. அவர் பேச்சை கேட்காவிட்டால், கணவரிடம் ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவரிடமிருந்து தப்பிப்பது எப்படி?ஆலோசனை கூறுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —கணவன் துரோகம் செய்து விட்டதாக கூறும் சில பெண்கள், தோள் சாய்வது அம்மாவிடமோ, தோழியிடமோ, சகோதரிகளிடமோ இல்லை;- இன்னொரு திருமணமான ஆண் மீது தான்.எந்த தப்பை கணவன் செய்தான் என குற்றம்சாட்டுகின்றனரோ, அதே குட்டையில், சில பெண்களும் அமிழ்ந்து கிடப்பர். திருமண பந்தம் மீறிய உறவில் சிக்கலோ, ஆபத்தோ ஏற்படும் போது தான் கணவனை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபடுவர்.மனைவியைத் தவிர, உலகின் எல்லா பெண்களுக்கும் ஆறுதல் கூறும் பரமாத்மாக்கள், ஆண்கள். உன் பக்கத்து வீட்டு ஆண், இதே வகை தான். அவரது கட்டுப்பாட்டுக்குள் உன்னை கொண்டு வர முயற்சிப்பதாக எழுதியுள்ளாய். எனக்கு புரியவில்லை, கணவனை விட்டு ஓடி வந்து விடு சேர்ந்து வாழலாம் என்கிறாரா...நீ, உன் கணவனை விவாகரத்து செய்து விட்டு வா. நான், என் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருகிறேன். இருவரும் சட்டபடி சேர்ந்து வாழ்வோம் என்கிறாரா... உன் நகை, பணம் சேமிப்பை கொடு என்கிறாரா... நீயும், அவரும் சேர்ந்திருப்பதை வீடியோ எடுக்கிறாரா... முதலில் பசப்பு வார்த்தைகள் பேசியவர், படிப்படியாக இறங்கி இப்போது உன்னை அடிமையாக நடத்துகிறாரா?கணவன் ஒரு பக்கம்,- நீ ஒரு பக்கம்,- பக்கத்தது வீட்டு கம்பெனி மேலதிகாரி ஒரு பக்கம், அவரின் மனைவி ஒரு பக்கம் (?) திருமணபந்தம் மீறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளீர்கள். இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...உன் திருமண பந்தம் மீறிய உறவை, முதலில் தலை முழுகு. கணவனிடம் மேலதிகாரி சொல்லி விடுவாரோ என பயப்படாதே. 'இனி, என்னை தொந்தரவு பண்ணினால், உன் துர்நடத்தை பற்றி கணவனிடம் கூறி விடுவேன் அல்லது உன் மீது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன். உன் மனைவியிடம் சொல்லி விடுவேன்...' என மிரட்டு. அவன் ஓடி விடுவான். உன் மொபைல் போன் எண்ணை மாற்று.நீ என்ன படித்திருக்கிறாய், வேலைக்கு செல்கிறாயா, உன் பெற்றோரின் ஆதரவு உனக்கு உண்டா, நீ சொந்தக்காலில் நிற்க உனக்கு வாய்ப்பு வசதிகள் உண்டா... கணவன், திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டாலும் அவன் மூலம் உனக்கு தொடர்ந்து தாம்பத்யம் கிடைக்க விரும்புகிறாயா?உன்னை சுய அலசல் செய்து, உன் தேவையை, இருப்பை அவதானி. பின், கணவனுடன் மனம் விட்டு பேசு. சமாதான உடன்படிக்கைக்கு கணவன் ஒத்து வந்தால் சரி, இல்லையென்றால் அவனை முறைப்படி விவாகரத்து செய்து, மகளுடன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடை. எதிர்காலத்தை ஆற அமர பின்னர் யோசித்துக் கொள்ளலாம்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.