அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது: 38. என்னுடைய, 19வது வயதில் திருமணமானது. கணவர் குடிப்பழக்கம் உள்ளவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நான் பட்டப் படிப்பு படித்திருந்தும், வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டார். சந்தேகப் புத்தி உட்பட, அனைத்து தீய பழக்கங்களும் அவரிடம் உண்டு.ஆணாதிக்க மனப்பான்மை அதிகம் கொண்டவர். என் உணர்வுகளை துளியும் மதிக்க மாட்டார். பெண் என்பவள் ஆணுக்கு அடிமை என்ற எண்ணம் கொண்டவர்.அவருடனான வாழ்க்கை, நரகம் தான். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். இவரது கொடுமைகளை அறிந்து, எனக்கு ஆதரவாக பேச வந்தனர்.அவர்களை இழிவாக பேசி, 'இனி, எங்கள் வீட்டு படி ஏற வேண்டாம். உங்க வீட்டு பெண்ணை இப்போதே அழைத்துச் சென்று விடுங்கள்...' என்று கூற, அவமானப்பட்டு விலகிக் கொண்டனர், உடன்பிறப்புகள்.இந்நிகழ்விற்கு பின், என்னை, பிறந்த வீட்டுக்கு அனுப்பவில்லை. மீறி போனால், அங்கேயே தங்கிக் கொள் என்று உத்தரவு போட்டார். வேறு வழியில்லாமல், அவர் இல்லாத நேரத்தில் உடன்பிறப்புகளுடன் போனில் பேசுவேன்.எனக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். மகனை மென்மையானவனாக, பெண்களை மதிக்கக் கூடியவனாக வளர்க்க நினைத்தேன். ஆனால், அவன் வளர வளர, அப்பாவை போலவே நடக்க ஆரம்பித்தான்.'நீ ஆம்பிள சிங்கம்டா...' என்று சொல்லி சொல்லி, தன்னை போலவே வளர்த்தெடுத்தார், கணவர்.மகளுக்கு செய்வதை விட, ஒரு படி மேலாகதான் மகனுக்கு வாங்கிக் கொடுப்பார். மகள் ஏக்கத்துடன் பார்ப்பதை கண்டு மனம் வேதனைப்படும்.இப்போ தெல்லாம், 'பொம்பளைங்க எல்லாம் வேஸ்ட்; எதற்கும் லாயக்கில்லை, பொல்லாதவர்கள்... ஆண்கள் தான் பெஸ்ட்...' என்று கூற ஆரம்பித்துள்ளான், மகன்.'இதெல்லாம் தப்புடா... அக்காவுக்கு மரியாதை கொடுக்கணும்...' என்றால், எடுத்தெறிந்து பேசுகிறான். நாளை, என் மகனும், தன் மனைவியை அடிமையாக நடத்துவானோ என்று, இப்போதே மனம் பதைக்கிறது. கணவரால் நான் பட்ட துன்பத்தை விட, இது என்னை மிகுந்த வேதனைப்படுத்துகிறது.என் மகனை திருத்துவது எப்படி? அதற்கு முன், கணவருக்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.— இப்படிக்கு,பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.அன்பு மகளுக்கு —படிப்பறிவு, வாழ்க்கைக் கல்வி, தலைமைப் பண்பு இல்லாத, சொந்தக்காலில் நிற்காத, அடிமை வாழ்வு வாழும் பெண்களின் மீது தான், ஆணாதிக்கம் கோலோச்சும்.ஆணாதிக்கத்துக்கு மரபியல் ரீதியான காரணங்கள் உண்டு. இயற்கையே ஆணை அதிகாரம் செய்பவனாக, பெண்கள் அடங்கிப் போவதாக படைத்திருக்கிறது. ஆணாதிக்கத்துக்கு சில பெண்கள் உடந்தை. அந்த பெண்கள் பெரும்பாலும், அம்மா ஸ்தானத்தில் உள்ளவர்கள். அம்மாக்கள், மகன்களை தலைக்கு மேல் துாக்கி வைத்து கூத்தாடுவதற்கு அடிப்படை காரணம், அனிச்சையான எதிர்பாலின கவர்ச்சி.ஓர் ஆண், ஆணாதிக்கவாதியாக மாற பெற்றோர், வகுப்பாசிரியர், உடன் பிறப்புகள், உறவுகள், வகுப்பு தோழர்கள், தெரு நண்பர்கள் என, ஒட்டுமொத்த சமுதாயம், மீடியாக்கள் மற்றும் சினிமா போன்றவை கிரியா ஊக்கிகளாக அமைகின்றன.ஆணும், பெண்ணும் சமம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற பாடம், ஓர் ஆணின் அடிப்படை கல்வியில் இணைத்து சொல்லித் தரப்பட வேண்டும்.முதலில், கணவருக்கு பாடம் கற்பிப்பதை பற்றி பார்ப்போம்...நாய்கள் ஓட ஓடதான் விரட்டும். திரும்பி நின்று முறைத்தால், பம்மும் அல்லது பின் திசையில் ஓடி விடும். கணவரை எதிர்த்து பேச வேண்டாம். உள்நாட்டு கலகம் செய்ய வேண்டாம்.ஆணித்தரமான, அதே நேரம் அமைதியான குரலில், தன் தேவைகளை, உரிமைகளை, விருப்பங்களை கணவரிடம் அறிவித்து விட வேண்டும். சம முதலீடு போட்டிருக்கும் பங்குதாரர் என்ற பாவனையில், உடல் மொழியை அமைத்துக் கொள்ள வேண்டும். 'கணவரே... நீங்கள், 5 அடி என்னை நோக்கி வந்தால், நான், 10 அடி உங்களை நெருங்குவேன். அன்புக்கு அன்பு, வம்புக்கு வம்பு...' எனக் கூறு. மனைவி, 'உஷார் பார்ட்டி' என தெரிந்தால், வாலாட்டாமல் அடக்கி வாசிப்பார், கணவர். உரிமைகளை கணவரிடம் கேட்டு கெஞ்சக் கூடாது. நாமே நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். குடித்து விட்டு வரும் கணவரை, நாலு அறை விடு. உறவினர்களை, கணவர் அவமதித்தால், 'நாக்கை துண்டிப்பேன்...' என, குரல் உயர்த்து. மகனுக்கு சலுகைகளை கொட்டும் கணவர் முன், மகளை பாசமழையால் குளிப்பாட்டு. 'இளிச்சவாய்' என நெற்றியில் லேபிள் ஒட்டிய பெண்களின் முதுகில் தான், உப்பு மூட்டை ஏறுகின்றனர், ஆண்கள். 'உரிமை போராளி' என்ற லேபிள் இருந்தால், கும்பிடு போடுவார், கணவர்.உன் மகனை திருத்துவது எப்படி?'ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆணும், பெண்ணும். ஓர் ஆண், சகலவிதங்களிலும் ஒரு பெண்ணைத்தான் சார்ந்து நிற்கிறான். ஒரு பெண், உடல் பலத்தில் ஆணை விட, ஒரு புள்ளி குறைந்திருக்கலாம்.'ஆனால், மன பலத்தில், ஒரு ஆணை விட நுாறு மடங்கு வீரியமானவள். அப்பா உன்னை, 'ஆம்பிளை சிங்கம்' என்கிறார். அப்படி என்றால், நீ ஒரு மிருகமா, மனிதன் இல்லையா? முதலில் உன் அம்மாவையும், சகோதரியையும் மதி.'அதன்பின், மனைவியையும், சமூக பெண்களையும் மதிக்க கற்றுக் கொண்டு விடுவாய். தன் பலவீனங்களையும், குறைகளையும் மறைக்க, உன் தந்தை ஆணாதிக்க முகமூடி அணிகிறார். பலவீனங்களை களைந்தால், முகமூடி தேவை இல்லை.'பெண்களை கவராத எந்த உலக விஷயமும் ஜெயிக்காது. பெண்களின் இருப்பை அங்கீகரி. பெண்களை சக மனுஷி என்ற வாஞ்சையாய் பார்...' என, மகனுக்கு கூறு. இத்தனை கூறியும் மகன் திருந்தவில்லை என்றால், ஒன்றும் பிரச்னை இல்லை. அவனை விட்டு விடு. யாரையும் திருத்த நாம் பிறக்கவில்லை. நம் வாழ்க்கையின் நடப்பு நொடியை அனுபவித்து வாழ்வோம் என, அமைதி பெறு.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.