செஞ்சோற்றுக் கடன்!
''சுரேஷ்... என்னாச்சு, ஏன் ஒரு மாதிரியா இருக்கே...'' என்று கேட்டவாறு, தனியாக உட்கார்ந்திருந்த சுரேஷை, நெருங்கினான் மணி.''ஒண்ணுமில்லே...'' என்றான்.''ஒண்ணுமில்லன்னு உன் உதடு தான் சொல்லுது; முகம் சொல்லலயே... உன் சுபாவம் என்னன்னு எனக்கு தெரியாதா... சில்லரை சிதறினாப்புல, எப்போதும், 'கலகல'ன்னு இருப்ப. இப்ப சத்தமில்லாம, ஓரமா ஒதுங்கி உட்கார்ந்திருக்கியே என்ன விஷயம்,'' என்று கேட்டவன், ஏதேச்சையாக அவன் பாக்கெட்டில் துருத்தியபடி இருந்த கவரைப் பார்த்து, ''என்ன இது...'' என்று உரிமையுடன் எடுத்தான்.விரித்து படித்தவன் திகைப்புடன், ''என்ன சுரேஷ்... நாலு லட்சம் ரூபாய் கடனை கட்டச் சொல்லி, பைனான்ஸ் கம்பெனியில இருந்து நோட்டீஸ் வந்திருக்கு... எப்ப, எதுக்கு வாங்கின...'' என்றான்.''நான் வாங்கல... சுந்தரபாண்டியன் வாங்கின கடன். ஷுரிட்டி கையெழுத்து போட்ட பாவத்துக்கு, என் தலையில வந்து விடிஞ்சிருக்கு,'' என்றபடி, காகிதத்தை வாங்கி மடித்து, பழையபடி பாக்கெட்டில் வைத்தபடியே, ''சுந்தர நீ கூட பாத்திருப்பே... கேரம் போர்டு டோர்னமென்ட்டுக்கெல்லாம் வருவான்...''''ஓ... அந்த சுருள் முடி சுந்தரா...''''அவன் தான்; ரெண்டு வருஷம் முன்ன, ஒருநாள் என்னை அவசரமா கூப்பிட்டான். அன்னைக்கு, நான் லீவு; வீட்டில் தான் இருந்தேன். படத்துக்கோ, பார்ட்டிக்கோ கூப்புடறான்னு நினைச்சு கிளம்பினா, அவன் என்னை நேரா பைனான்ஸ் கம்பெனியில கொண்டு போய் மேனேஜர் எதிர்ல, உட்கார வச்சுட்டான். அவருகிட்ட என் வேலை, வருமானம், வசதி பத்தியெல்லாம் அவிழ்த்து விட்டான். ஏன் இப்படி பேசறான்னு புரிய ஆரம்பிச்சதுமே, என் முன் ஒரு கட்டு அப்ளிகேஷனை வச்சிட்டாங்க...''''நீயும் கையெழுத்து போட்டுட்டே...''''வேற என்ன செய்யச் சொல்றே... 'ஒரு கையெழுத்து போடு சுரேஷ்... மத்ததெல்லாம் வெளியில போயி பேசிக்கலாம்'ன்னு சொல்லி, என் கையில பேனாவ திணிச்சான். என் கையை பிடிச்சு, அவனே கையெழுத்து போடக் கத்துக் குடுக்குறவன் மாதிரி போட வச்சான்.''வெளியில வந்ததும், 'நண்பா... நீ மறுக்க மாட்டேங்கற நம்பிக்கையில் தான், இந்த காரியத்தை செய்துட்டேன். மாமியார் வீட்ல, ஒரு மாதிரியா பேசிட்டாங்கடா... சம்பாதிக்க லாயக்கில்லாத ஆள்; உட்கார்ந்து தின்னு, உடம்ப வளர்க்கத் தான் தெரியுது அப்படி இப்படின்னு... நான் ஒண்ணும் கையாலாகாத ஆளில்லன்னு காட்டணுமில்ல. அதான், லோன் எடுத்து, கார் வாங்கி டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு எடுத்தேன். கியாரண்டிக்கு ஆள் கேட்பாங்களேன்னு யோசிச்சப்ப, உன் ஞாபகம் வந்தது. கையெழுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றி'ங்கிறான்...''சொன்னது போலவே கார் எடுத்து, ஓட்டிக்கிட்டிருந்தான். அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல; நானும் இடம் மாறி வந்துட்டேன். கிட்டத்தட்ட மறந்தே போய்ட்டேன்னு வை. நாலு நாட்கள் முன்னாடி தான், அவன் ஞாபகம் வந்து, பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைக்கறேன்... நோட்டீஸ் வருது...''''போய் பாத்தியா... என்ன சொன்னான்...''''போனேன்... வீட்ல அவன் மாமியார் மட்டும் தான் இருந்தாங்க. மத்த யாரையும் காணோம். அவங்ககிட்ட, சுந்தரை பாக்கணும்ன்னு சொன்னேன். 'நாங்க பார்த்தே நாலு மாசமாச்சு'ன்னாங்க. ஏதோ பிரச்னைன்னு மட்டும் புரிஞ்சுது. அவசரமா அவனை பாக்கணும்ன்னு சொல்லி, எனக்கு வந்த நோட்டீசை காட்டினேன். 'அவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை'ன்னாங்க. 'இப்படி சொன்னா எப்படிங்க; இப்ப, நானும் நெருக்கடியான நிலையில இருக்கேன். நாலு லட்சம் ரூபாய் கட்டச் சொல்லி, எனக்கு நோட்டீஸ் வந்திருக்கு. கட்டலன்னா, நான் உள்ள போக வேண்டியிருக்கும். சுந்தரோட அத்தைங்கற முறையில, கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லுங்க'ன்னு சொன்னேன்.''''அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?''''சொல்லல... செஞ்சாங்க. கட்டிப் போட்டிருந்த நாயை அவிழ்த்து விட்டாங்க.''''அடப்பாவி... சும்மாவா வந்தே...''''வேற என்ன செய்ய முடியும். மீறிப் பேசினா, ஆண் துணை இல்லாத வீட்டுல வந்து கலாட்டா செய்றான்னு கூப்பாடு போடலாம்... ஏன் கைய புடிச்சு இழுத்தேன்னு கூட புகார் கொடுக்கலாம்... அப்புறம் சுந்தரப் பற்றி வெளியில விசாரிச்சேன். கடன் தொல்லை; தொழிலில் வருமானமும் கட்டுபடியாகல. அதனால, வந்த விலைக்கு காரை வித்துட்டு, தலைமறைவாயிட்டான்,'' என்ற சுரேஷை, பரிதாபமாக பார்த்து, ''ஏண்டா இப்படி இருக்க... முன்ன ஒரு தரம் பாலான்னு ஒருத்தனுக்கு, டூ வீலர் வாங்க கையெழுத்து போட்டே! அவன் டிமிக்கி கொடுக்க, நீ தானே உன் ரெண்டு வருஷ சம்பளத்தை தாரை வார்த்தே... அடி பட்டும் உஷாராக வேணாமா... உன்னை பைனான்ஸ் கம்பெனியில வச்சு கையெழுத்து போடச் சொல்லி கட்டாயப்படுத்தினப்போ, முடியாதுன்னு சட்டுன்னு எழுந்து வந்திருக்க வேணாமா... பைக் கடன், சில ஆயிரம்; கார் கடன், பல லட்சமாச்சே...'' என்றான் ஆற்றாமையுடன் மணி.''அது தான் என் கவலை... எனக்கே இப்ப பண நெருக்கடியா இருக்கு; இந்த நிலையில இப்படி ஆயிடுச்சு. இப்ப என்னால ஒரு லட்சம் ரூபா வரை புரட்ட முடியும். அதை போய் கட்டிட்டு, மீதித் தொகைய, கொஞ்சம் கொஞ்சமா கட்டுறேன்னு தவணை கேட்டு வாங்க வேண்டியது தான்,'' என்றான் சுரேஷ்.''என்னடா தலையெழுத்து...'' சட்டென்று சீறினான் மணி.''வேறென்ன செய்றது...''''ஸ்டேஷனுக்கு போ; நானும் வர்றேன். இன்ஸ்பெக்டர்கிட்ட நடந்ததை சொல்லி, அவங்ககிட்ட உதவி கேட்போம். அவங்க ஏதாவது நடவடிக்கை எடுப்பாங்க; இல்லன்னா சட்டப்படி அந்த பைனான்ஸ் கம்பெனிக்கு பதில் நோட்டீஸ் அனுப்ப முடியுமான்னு பாப்போம்,'' என்றான் மணி.''இதையெல்லாம் நான் யோசிக்காமலா இருப்பேன்...''''அப்படின்னா நீ போலீஸ்ல புகார் கொடுத்துட்டியா...''''அவனே தலைமறைவா இருக்கான். போலீச விட்டு தேட விட்டா, அது, வேற மாதிரி போயி, அவன் வாழ்க்கை மொத்தமா பாழாயிடுமோன்னு இருக்கு,'' என்றான் சுரேஷ்.''இது என்னடா அநியாயம்... உன்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காம, சிக்கல்ல மாட்டி விட்டு, உன்கிட்ட, இதுபத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிருக்கான். அவனுக்கு போயி பரிதாபப்படுறே...''''என்ன செய்யட்டும்... அவன் யாரோ, எவரோ இல்லயே... பாலாவும், இந்த சுந்தரபாண்டியும் ஒரு நேரத்தில, எனக்கு செய்த உதவி, உனக்கும் தெரியும் தானே...''போக திசை தெரியாம, ஆதரிக்க ஆளில்லாம, அனாதையா நின்னப்ப, கூப்பிட்டு சோறு போட்டவங்க. அப்பாவுக்கு என்னை ஏனோ பிடிக்காது. நான் எது செஞ்சாலும் திட்டு, அடி தான்; விசாரணையே கிடையாது. அப்படியொரு ஹிட்லர் அவதாரம். ஒருமுறை, செய்யாத தப்புக்கு, என்னை அடி அடின்னு அடிச்சு, தூக்கி தெருவுல வீசிட்டாரு... ஊரே நின்னு என்னை வேடிக்கை பார்த்துச்சு. அப்பாவுக்கு பயந்து, சொந்தக்காரங்க கூட என்னை காப்பாத்த முன் வரலை.''என் விளையாட்டு தோழர்களான இந்த சுந்தரும், பாலாவும் தான் என்னை தூக்கிகிட்டு போனாங்க. 'இனி, எங்க வீடு தான் உன் வீடு; இங்க தான் சாப்பிடணும், எங்க கூடத்தான் இருக்கணும்'ன்னு சொல்லி, எனக்காக அவங்க பெத்தவங்க கிட்ட கெஞ்சி, சம்மதம் வாங்கி காப்பாத்தினாங்க. ஒருநாள், ரெண்டு நாளில்ல; ஆறு மாசம் அவங்க சாப்பாட்டிலிருந்து, டிரஸ் வரைக்கும் பங்கு வச்சு, என்னை கவனிச்சாங்க. அப்புறம், அப்பா மனசு மாறி, என்னை கூட்டிக்கிட்டாரு.''இன்னைக்கு, நானும் ஒரு குடும்பஸ்தனா, ஒரு வேலையில சேர்ந்து, சொந்தக்கால்ல நிக்கறேன்னா, அது யாரால... அன்னைக்கு அவங்க என்னை கவனிக்கலன்னா, என் கதி என்னாகியிருக்கும். ஆத்திரத்துல, கோபத்துல நான் எங்காவது குளம், குட்டைன்னு தேடிப் போகாம தடுத்தது அவங்க தானே! அதை நினைக்கணும்ல,'' என்றான் சுரேஷ்.மணிக்கு மனம் கனத்து போயிற்று. அவன் தலையை வாஞ்சையுடன் தடவி, ''முதல் நாள் செய்த உதவிய, மறுநாளே மறந்து போகிற இந்த உலகத்துல, சின்ன வயசில் உதவிய நண்பர்களுக்காக, நன்றி மறக்காம, அவங்களுக்காக பெரிய சுமைய, தலையில் போட்டுக்கற பாரு... நீ நல்லாயிருப்படா,'' என்றான்.''என் நண்பனையும், சேர்த்து வாழ்த்து; அவனும் நல்லா இருக்கணும்ல,'' என்றவாறு வேலையில் ஆழ்ந்தான் சுரேஷ்.மாலை வீடு திரும்பிய போது, சுரேஷின் மனைவி ஒரு கடிதத்தை கொடுத்து, ''கொரியரில் வந்தது,'' என்றாள்.பிரித்து பார்த்ததில், அவன் பெயருக்கு, 50,000 ரூபாய்க்கு ஒரு டிராப்ட்டும் கூடவே, ஒரு கடிதமும் இருந்தது.அன்புள்ள சுரேஷ்,ஒரு இக்கட்டான நிலையில், யாருக்கும் சொல்லாமல் தலைமறைவாகி விட்டேன். உன்னை சிக்கலில் மாட்டி விட்டேனே என்று, எனக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். இத்துடன், ஒரு தொகைக்கு டி.டி., அனுப்பியுள்ளேன்; மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி, கடன் வாயிலிருந்து விலகிய பின், உன்னை வந்து சந்திப்பேன்.— இப்படிக்கு,சுந்தரபாண்டியன்.கடிதத்தை படித்த சுரேஷின் விழிகள், கண்ணீரை உதிர்த்தது.படுதலம் சுகுமாரன்