உள்ளூர் செய்திகள்

அக இருளை நீக்கும் மகான்கள்!

நவாபுகள் ஆண்ட காலம் அது. ஹைதராபாத் கோட்டையில், நவாபின் அரண்மனையில் போத்தலுாரி வீரப்பிரம்ம சுவாமிகள் எனும் மகான் அமர்ந்திருந்தார். அவர், அங்கே மாணவர்கள் - நவாபு ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். 'நவாபு அவர்களே, மாலை நேரத்தில் பூஜை செய்வது என் வழக்கம். ஆகையால், அதற்கான ஏற்பாடுகளை செய்து தாருங்கள்...' என்றார், மகான். 'அப்படியே செய்து தருகிறேன்...' என்றார், மன்னர்.மகானின் நற்குணங்கள், நல்லொழுக்கம், தவத்தின் மூலம் பெற்ற சித்துக்கள் அனைத்தையும் அடுத்தவர்களின் நல்வாழ்விற்காகவே பயன்படுத்தியது- மன்னருக்கு தெரியும். ஆதலால், மகானின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார், மன்னர். ஆனாலும், இவரைக் கொஞ்சம் சோதித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது, மன்னருக்கு.உடனே, தன் ஏவலாளர்களை அழைத்து, 'சுவாமி, பூஜை செய்யப் போகிறார். விளக்கேற்றும் எண்ணெயைத் தவிர, மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டு வாருங்கள்...' என உத்தரவிட்டார், மன்னர்.ஏவலர்களும் அப்படியே கொண்டு வந்து வைத்தனர்.ஒரு சொம்பில் எண்ணெய்க்கு பதில் தண்ணீரை தயாராக வைத்திருந்தார், மன்னர். பூஜைக்கான ஏற்பாடுகளையெல்லாம் பார்த்த மகான், மனதார மன்னரை பாராட்டினார். 'இவ்வளவு ஏற்பாடுகளை செய்த நீங்கள், கூடவே இன்னொரு சின்ன உதவியையும் செய்ய வேண்டும். பூஜைக்கான விளக்கையும் நீங்களே ஏற்றித் தாருங்கள்...' என்றார். திடுக்கிட்டார், மன்னர்.'என்னடா இது, எண்ணெய்க்கு பதில் தண்ணீரை வைத்து, இவர் எப்படி விளக்கேற்றுகிறார் பார்க்கலாம் என்று நினைத்தால், பிரச்னையை நம் பக்கமே திருப்பி விட்டாரே...'தவறுதலாக தண்ணீரை வைத்து விட்டனர் என்று, பழியை பணியாளர்கள் மீது போட்டு விடலாம்...' என்ற எண்ணத்தில், விளக்குகளில் திரியை போட்டு தண்ணீரை ஊற்றி, ஒன்றும் தெரியாதவரை போல, விளக்குகளை ஏற்றினார். என்ன அதிசயம்! விளக்குகள் எல்லாம், 'பளிச்'சென்று சுடர் விட்டு பிரகாசித்தன; ஆச்சரியப்பட்டார், மன்னர்.மகானின் செயல் தான் இது என்று நினைத்து, தன் செயலுக்கு, அவரிடம் மன்னிப்பு கேட்டார், மன்னர்.போத்தலுாரி வீரப்பிரம்ம சுவாமிகள் வாழ்வில் நடந்த, இந்த நிகழ்ச்சியைப் போலவே, வள்ளலார், -சீரடி சாய்பாபா, நமிநந்தி அடிகள் ஆகியோர் வாழ்விலும் நடந்திருக்கிறது. புற இருளை மட்டுமல்ல; அக இருளையும் போக்கக் கூடியவர்கள் மகான்கள் என்பதை விளக்கும் நிகழ்ச்சிகள் இவை.பி.என்.பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !