சாவி்த்திரி (23)
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.வேதனைகள் வரும் போது, மயக்கத்தில் தன் மனதை வைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்ட சாவித்திரி, ஜெமினியின் நினைவுகளை மறக்க, சாப்பிடாமல், வெறும் வயிற்றில் இருப்பதை மறந்து, மதுவை குடிக்க துவங்கினார்.அவர் உடலில், சர்க்கரையின் அளவு, இன்சுலின் போட்டதாலும், எதுவும் சாப்பிடாததாலும், வெகுவாக குறைந்தது. மது உடலில் செல்லும் போது, சர்க்கரை அளவில் பத்து விழுக்காடு குறைத்து விடும். அதுவும் சாவித்திரிக்கு வில்லங்கமாய் போனது.நிலை தடுமாறி, கீழே சாய்ந்தார் சாவித்திரி. அவர் வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த சதீஷ், அலறியடித்து எழுந்தவன், தன் அம்மா கிடந்த கோலத்தைப் பார்த்து, 'அம்மா... கண்ணத் திறந்து பாரும்மா...' என சத்தமிட்டு, கூப்பிட்டுப் பார்த்தான்; சாவித்திரியிடம் எந்தச் சலனமும் இல்லை. இப்படி அவர் மயங்கி விழுவது, இது, மூன்றாவது முறை.சதீஷின் அலறலை கேட்டு ஓடோடி வந்த ஓட்டல் நிர்வாகத்தினர், உடனடியாக நடிகை சரோஜாதேவியிடம் நடந்த விஷயத்தைக் கூறினர்.அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவைத் தொடர்பு கொண்ட சரோஜாதேவி, சாவித்திரிக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு, கோரிக்கை வைத்தார்.சாவித்திரியை பெங்களூரு லேடி குருசன் மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷயம் தெரிந்து பாப்ஜியும், சாமுண்டீஸ்வரியும் சென்னையிலிருந்து பெங்களூரு விரைந்தனர். ஜெமினி வெளிநாட்டில் இருந்ததால், தகவல் கிடைத்தவுடன் பெங்களூரு கிளம்பினார். சாவித்திரியை பரிசோதித்த மருத்துவர்கள், சாவித்திரிக்கு ஏற்பட்டு இருப்பது, 'ஹைப்போகிளாசிமிக் கோமா' என்றனர்.பெங்களூரு வந்த ஜெமினி, மருத்துவமனையில் சாவித்திரியைப் பார்த்து, 'அம்மாடி...' என்று பழைய ஜெமினியாக அழைத்த போது, அதுவரை மனதுக்குள், 'ஈகோ'வில் தூங்கிய காதல் விழித்தது; ஆனால், உணர்வற்ற அந்த தேவதைக்கு, ஜெமினியின் காதல் உணர்வு எட்டியதா என, தெரியவில்லை.'அம்மாடி... என்று ஜெமினி அழைத்த போது, சாவித்திரியிடம் ஒரு மெல்லிய அசைவு தென்பட்டது...' என, அங்கிருந்த தாதியரில் ஒருத்தி, ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டு இருந்தாள்.நெஞ்சுக் குழியின் அடியில் நினைவுகளாய், ஜெமினியை தினம் தினம் தழுவியவர், சாவித்திரி. அவரால், சாவித்திரியை பிரிந்து இருப்பது போல நடிக்கத் தான் முடிந்ததே தவிர, மனதளவில் பிரிய முடியவில்லை.'அம்மாடி... ஒரே ஒரு கணம் கண் விழித்துப் பார்...' என, ஜெமினி தவிப்பில் உருகிய போது தான், அவரின் உள்ளத்து அன்பு தெரிந்தது.அசைவற்று வீழ்ந்த சாவித்திரி, நினைவை இழந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. சுயநினைவு வந்து விடும் என முயற்சித்த மருத்துவ நிர்வாகமோ, வேறு வழியின்றி கையைப் பிசைந்தது.சாவித்திரியின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ஜமுனா, ஆந்திர மாநில முதல்வரிடம் பேசி, சாவித்திரியை மேல் சிகிச்சைக்காக, அமெரிக்கா கொண்டு செல்ல முயற்சித்தார். சட்ட சிக்கல்கள் எழுந்ததால், அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால், சாவித்திரியை சென்னை கொண்டு வர, விரும்பினார், ஜெமினி. அதற்கான ஏற்பாடுகளை சரோஜாதேவியிடம் செய்யக் கோரினார்.சரோஜாதேவி முயற்சியின் காரணமாக, கர்நாடக முதல்வர் குண்டுராவ், சாவித்திரியை சென்னை கொண்டு செல்ல, தனி விமானத்தை ஏற்பாடு செய்தார்.பெங்களூரில் இருந்து, சாவித்திரியைக் கொண்டு வந்த விமானத்தில், ஜெமினி மற்றும் செவிலியர் அமல்குட்டி உடன் வந்தனர்.விமான நிலையத்தின் வெளியே பாப்ஜி மற்றும் ஜெமினியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.சாவித்திரியை நகரும் படுக்கையில் வைத்து விமானத்திலிருந்து இறக்கி, வெளியே கொண்டு வந்ததைக் கண்டு, பாப்ஜி கதறி அழுதது, தாய்மையின் வெளிப்பாடாகவே தெரிந்தது.தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊர்தியில், சாவித்திரியை ஏற்றி, லேடி வெலிங்டன் மருத்துவமனைக்கு விரைந்தார், ஜெமினி.ஜெமினியின் வீட்டிலிருந்து, ஐந்து நிமிட நடைபயண தூரத்தில் அமைந்திருந்தது, அந்த மருத்துவமனை. அப்போது, பிரபலமாக இருந்த மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று!மே 17, 1980ல் லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாவித்திரியை, பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் பி.ராமமூர்த்தி தலைமையிலான மருத்துவர் குழு ஆய்வுக்குட்படுத்தி, சிகிச்சையை ஆரம்பித்தது.சாவித்திரியின் உடம்பில் அவ்வப்போது ஏற்பட்ட சில அசைவுகள், மருத்துவ குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதால், 'சாவித்திரியை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடலாம்...' என நம்பினர்.— தொடரும்.ஞா. செ. இன்பா