நான் சுவாசிக்கும் சிவாஜி (18) - ஒய்.ஜி. மகேந்திரன்
பலருக்கு தெரியாத சிவாஜியே பகிர்ந்து கொண்ட, செய்தி இது: நிறைய இயக்குனர்கள், சிவாஜியின் படங்களை இயக்கி இருந்தாலும், எந்த காட்சிக்கு, எப்படி நடிக்க வேண்டும் என்று, சிவாஜிக்கு நடித்துக் காட்ட கூடிய இயக்குனர்கள் எல்.வி.பிரசாத், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் டைக்டர் ஸ்ரீதர் மட்டும் தான்! செல்வம் படத்தில், 'அவளா சொன்னால் இருக்காது...' என்ற பாடல் காட்சியில், மாடிப்படிகளில் இறங்கி வரும் போது, அவர் எப்படி இறங்கி வந்தால், பொருத்தமாக இருக்கும் என்று, இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் நடித்துக் காட்டினார். சிவாஜியும் அவ்வாறே செய்தார். இருவர் உள்ளம் படத்தில் இயக்குனர் எல்.வி.பிரசாத், ஒரு காட்சியை விளக்கி கொண்டிருந்தார். 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று சிவாஜி அவரிடம் கேட்டார். சிவாஜியை தனியாக கூப்பிட்ட, எல்.வி.பிரசாத், 'நீங்கள் கோபித்து கொள்ளக் கூடாது. இக்காட்சியில் நீங்கள் ஒன்றுமே செய்யக்கூடாது. இந்த காட்சியில், சரோஜா தேவி தான், ஸ்கோர் செய்ய வேண்டும். சரோஜா தேவி பேசும் டயலாக்கால் உங்க மேல் சிம்பதி வந்து, படமே நிற்கும்...' என்றார் எல்.வி.பிரசாத். மனோகரா படத்தில் சிவாஜிக்கு முழு சுதந்திரம் கொடுத்து, ஆவேசமாக நடிக்க வைத்த, அதே எல்.வி.பிரசாத் தான், இருவர் உள்ளம் படத்தில் அவரை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார். சிவாஜியின் நடிப்பில், ஒவ்வொரு கால கட்டத்திலும் முக்கிய மாறுதல் தெரியும். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறமை அவரிடம் நிறைய இருந்தது. 1952ல் பராசக்தி படத்தின் கிளைமாக்சில் நீண்ட நீதிமன்ற காட்சி வரும். எதுகை மோனையுடன், கவிதை நயத்துடன், கருத்து சொரியும் வசனங்கள் இருக்கும். இக்காட்சியில், அவர் நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்திற்கு பெரிய ப்ளஸ் பாயின்ட் ஆயின. அதன்பின், 11 ஆண்டுகள் கழித்து, 1963ல் வெளியான, இருவர் உள்ளம் படத்திலும் கிளைமாக்ஸ் கோர்ட் சீன் தான்; இதிலும், வசனம் கருணாநிதிதான். இருவர் உள்ளம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு முழு காரணமும் இயக்குனர் எல்.வி.பிரசாத் தான் என்று பெருந்தன்மையாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி. 1970ல் வெளியான கவுரவம் படத்தில் வரும் கோர்ட் சீனில் அடுக்கு மொழி வசனமில்லாமல், தன்னுடைய ஸ்டைலை மாற்றி நடித்தார் சிவாஜி. எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழு சார்பில், 'அந்த ஏழு ஆட்கள்' என்ற நாடகத்தை, 1991ல் அரங்கேற்றினோம். அந்த நாடகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதுவரை தமிழ் நாடக மேடையில் யாரும் செய்யாத அளவில், ஏழு மாறுபட்ட பாத்திரங்களை நானே ஏற்று நடித்தேன். ரவுடி, டாக்டர், சமஸ்கிருத பேராசிரியர், வருமானவரி அதிகாரி, சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர், குள்ள சாமியார் மற்றும் டைரக்டர் ஒய்.ஜி..மகேந்திரா என்ற ஏழு பாத்திரங்கள். குள்ள சாமியார் வேடத்திற்கு, ஸ்பெஷலாக ஷூக்கள் மற்றும் டிரஸ் தைக்க, என் நெருங்கிய நண்பர்களான கமலஹாசனும், பாண்டியராஜனும் நிறைய உதவி செய்தனர். இந்த நாடகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தபோது சிவாஜியிடம் பேசினேன். 'ஏன் சார்... ஏழு வேடங்கள் மட்டும் போடறீங்க, இன்னும் இரண்டு சேர்த்தால் நவராத்திரிக்கு சமமாக ஆயிடுமே...' என்று, தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார். முதலில் கிண்டல் அடித்துவிட்டு, பிறகு மிகுந்த ஆர்வத்துடன், அக்கறையாக அந்த ஏழு கேரக்டர்கள் பற்றிய முழு தகவல்களையும் கேட்டு அறிந்தார். அப்போது, அவர் கூறியது...'ஒவ்வொரு பாத்திரத் திற்கும் டிரஸ் மற்றும் மேக் - அப்பில் வித்தியாசம் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கண்களில், பேசுகிற விதத்திலே, நடையில், உடல் அசைவில், குரலில் மாற்றங்களை காண்பித்தாலே, பிரமாதமாக அமையும்.'நான் நடித்த, உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடங்கள்; பார்த்திபன் ஹீரோ, விக்கிரமன் வில்லன். இரண்டு பேருக்கும் புறத்தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், பார்த்திபனிடத்தில் நேர்மை, பணிவு, கனிவு, நடையில் தனி பாணி இருக்கும். விக்கிரமனிடம் ராஜகம்பீரம், அகம் பாவத்தின் உச்ச கட்டமான பேச்சு காணப்படும். படத்தின் ஒரு காட்சியில், விக்கிரமன், பார்த்திபனாக வேடம் அணிந்து, பத்மினியிடமிருந்து ஒரு முக்கிய ரகசியத்தை அறிய முயலுவார்.'விக்கிரமன் நூறு சதவீதம் பார்த்திபனாக ஆகிவிட முடியாது. வந்திருப்பது விக்கிரமன் தான் என்பது ஆடியன்சுக்கு தெரிய வேண்டும். பார்த்திபன் கண்களில் காதல்; விக்கிரமனுக்கோ கண்களில் காமம். அதேபோல், பார்த்திபன், விக்கிரமனாக வெளியே செல்லும்போது, அவர் கண்களில் ஒரு சாதுத்தனம் தெரியும்.'இது தான் இரட்டை வேடம் போடுவதின் ரகசியம். கேரக்டருடைய உள்நோக்கத்தை வெளியே கொண்டு வரணும். இரட்டை வேஷம்கிறது வெறும் மாறு வேடப் போட்டி இல்லை...' என்றார் சிவாஜி.'அந்த ஏழு ஆட்கள்' நாடகத்தை இருநூறு தடவைகளுக்கு மேல் மேடை ஏற்றியிருக்கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்சு, வளைகுடா என்று உலகமெங்கும் பல நாடுகளில் நடித்து, நிறைய பாராட்டுகள் பெற்றிருக்கிறோம். அந்த ஏழு கேரக்டர்களிலும் நான் வெற்றி பெற்றதற்கு மூல காரணம், சிவாஜியின் ஆலோசனை தான்.இதே டெக்னிக்கை பின்பற்றித் தான், 2009ல், யு.ஏ.ஏ., குழு சார்பில், நான் மூன்று வேடங்களில் தோன்றும், 'வெங்கடாத்ரி' என்ற நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகமும், பெரிய வெற்றி அடைந்தது.சிவாஜியின், 'தேன் கூடு' என்ற மேடை நாடகத்தில், ஒரு த்ரில்லிங்கான காட்சி... கூட்டுக் குடும்பத்தில் அண்ணனாக வரும் சிவாஜி, மெக்கானிக்காக வருவார். வாக்குவாதத்தில் அவருடைய தம்பியாக நடித்த தங்கராஜ் கை நீட்டி, அண்ணன் நெஞ்சிலே குத்தி விடுவார். அண்ணன் பாத்திரத்திற்கு ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம் உண்டு. நெஞ்சில் குத்து பட்டதும், மேடை ஓரத்தில் சுருண்டு கீழே விழுந்து விடுவார். சிறிது நேரத்திற்கு பின், சிவாஜி எழுந்து கொள்வார். அதிர்ச்சியான அமைதி நிலவும். தம்பியை நோக்கி இரண்டு அடி எடுத்து வைப்பார். தம்பியை விளாசப் போகிறார் என்று ஆடியன்ஸ் எதிர்பார்ப்பர். அப்படியே நெஞ்சுவலி பொறுக்காமல் மீண்டும் கீழே விழுந்து விடுவார். வாயிலிருந்து ரத்தம் சொட்டும்.'நடிப்புங்கிறது, மேஜிக் மாதிரி. ஆடியன்சை நம் பக்கம் கொண்டு வந்து, கடைசியிலே எதிர்பாராதவிதமாக ஏமாற்றுவது தான் நடிப்பு...' என்பார் சிவாஜி. சிவாஜி வாயில் ரத்தம் ஒழுக, மேடையில் விழுந்திருக்கும் போது, இடைவேளை என்று, அறிவிப்பர். இடைவேளை அறிவித்ததை கூட உணராமல், அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருப்பர் ஆடியன்ஸ்.'வியட்நாம் வீடு' நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், குடும்பமே அவரை சுற்றி இருக்கும். இதய ஆபரேஷன் செய்து, வீட்டுக்குத் திரும்புவார். எமோஷனலாக உணர்ச்சி வசப்பட்டு, வசனம் பேசி, கீழே விழுகிற சீன். உடன் இருக்கும் மூன்று நடிகர்களிடம் சிவப்பு நிற திரவம் தோய்த்த பஞ்சை கொடுத்து வைத்திருப்பர். கண் இமைக்கும் நேரத்தில், எந்தப் பக்கம் சாய்கிறாரோ, அந்தப் பக்கம் இருக்கும் நடிகரிடமிருந்து பஞ்சை வாங்கி வாயில் போட்டு, கடித்து, ரத்தம் சிந்துவதுபோல, 'எபெக்ட்' கொடுத்து கீழே விழுவார். ஆடியன்ஸ் ஸ்தம்பித்து போவர்.சிவாஜிக்கு நான் செய்யும் காணிக்கையாக, அவர் நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை எங்கள் யு.ஏ.ஏ., குழு சார்பில் மீண்டும் மேடையேற்றி நடித்தோம். பஞ்சை வாயில் அடக்கி கடித்து, ரத்தம் வரும் எபெக்டை உண்டாக்கும் விதத்தை, வியட்நாம் வீடு சுந்தரமிடமிருந்து அறிந்தேன். அந்த டெக்னிக்கை நான் பின்பற்றினேன். எனக்கும் அதே இடத்தில், கைதட்டல் கிடைத்தது.சிவாஜியின் வழியை பின்பற்றினால் பாராட்டு கிடைப்பது உறுதி!— தொடரும். தொகுப்பு: எஸ்.ரஜத்