உள்ளூர் செய்திகள்

அண்ணி!

அண்ணி என்பவள் இன்னொரு தாய்உறங்கிக் கொண்டிருந்த கண்ணன், விழித்து விடக்கூடாது என்ற பயத்தோடு மெல்ல எழுந்தாள், கல்யாணி. தலையணையை காலுக்கு அடியில் கொடுத்து, அவன் தலையை வருடி, நெற்றியில் முத்தமிட்டு, தன் புடவைத் தலைப்பை பிடித்திருந்த அவன் கைகளை விலக்கினாள்.''கல்யாணி...'' உள்ளே இருந்து அத்தையின் குரல். இங்கிருந்து பதில் குரல் கொடுத்தால், கண்ணன் விழித்து விடப் போகிறானே என்று சத்தம் போடாமல், புடவையை சரி செய்தபடி வெளியே நடந்தாள். ''கல்யாணி... மூச்சு முட்டுது, அந்த இருமல் சிரப்பை எடுத்துக் கொடுத்துட்டு போயேன்,'' என்றாள், அத்தை.''அத்தை, நானே வாயில விடுறேன். புடவை மேல சிந்திப்பீங்க,'' என்றாள்.அத்தை வாய் திறக்க, மருந்தை விட்டு, துண்டால் வாயை துடைத்து, போர்வையை கழுத்து வரை போர்த்தினாள்.''அத்தை... பேனை, 'ஸ்பீடு' பண்ணட்டுமா?'' ''வேண்டாம்மா... இதுவே குளிருது. சரி, நீ போய் படு. மணி, 12:00 ஆக போகுது. நான் வேற கல்யாணி, கல்யாணின்னு கூப்பிட்டு கழுத்தறுக்கிறேன்,'' என்றார்.சமையலறையில் எல்லா வேலைகளும் சரியாக செய்து விட்டோமா என்று சரி பார்த்து, தாழ் போட்டு, இவள் தன் அறைக்குள் நுழைந்தபோது, எரிச்சலுடன் காத்திருந்தான், விஜய்.''கல்யாணி... இத்தனை நேரம் என்ன பண்ணினே? ராத்திரி, 12:00 மணி ஆகுது?'' ''என்னங்க இது, கண்ணன் துாங்க வேண்டாமா... அவனுக்கு கதை சொல்லி துாங்கப் பண்ணினேன்.''''என் தம்பி பையன் தானே... அவங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு... அவனை துாங்க பண்ணி, அவங்க அறையிலே விட்டுட்டு நீ வரதுக்குள்ள, நானே துாங்கிடுவேன்.''''நான் எழுப்பறேன்.'' ''ஆமாம், சுப்ரபாதம் தான் பாடணும்.'' ''கோவிச்சுக்காதீங்க... நமக்கு கல்யாணமாகி, 10 வருஷம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. உங்க தம்பிக்கு, கல்யாணம் ஆன அடுத்த வருஷமே கண்ணன் பிறந்துட்டான்.'' ''சரி சரி... இப்படியே பேசி பாக்கி பொழுதை கழிக்காதே.'' அதற்குள் வெளியே சத்தம். துாக்க கலக்கத்தில் வந்த கண்ணன், ''என்ன பெரியம்மா... பாதி கதையில நிறுத்திட்டே... முழு கதையைச் சொல்லு பெரியம்மா...'' என்றான்.எட்டு மணி நேர வேலைக்கு பின்னும், ஓய்வு கேட்காத உண்மை தொழிலாளி. தன் வியர்வை பூக்களை, புன்னகைப் பூக்களாக்கியவள். வரமாகி வந்ததொரு வடிவமானவள். நேற்றும், நாளையும் மறந்து, இன்று மட்டுமே வாழ்கிறவள். இதனால்தான் இவள் ஓரகத்தி லட்சுமிக்கும், மைத்துனனுக்கும் குழந்தை பற்றிய கவலை இல்லாமல் இருந்தது. அன்று கல்யாணியின் அறை தேடி வந்தாள், லட்சுமி.''அண்ணி... ஒரு ரெக்வஸ்ட்...''''சொல்லும்மா என்ன வேணும்...'' பூ தொடுத்தபடியே கேட்டாள், கல்யாணி. லட்சுமிக்கு ஒரே ஆச்சரியம். அண்ணிக்கு எப்படி இத்தனை அழகாக பூ தொடுக்க முடிகிறது... இவள் தொடுத்தால், அத்தனை பூக்களும் சிதறி காம்பு உடைந்து, கசங்கி போகும். 'போறும், நீ பூ தொடுத்தது. எல்லாமே கசங்கி போச்சு...' என்று, தானே தொடுப்பாள், கல்யாணி.''அண்ணி... டவுன்ல ஒரு கண்காட்சி நடக்குது. அதுல ஏகப்பட்ட ஐட்டங்கள், வீட்டுப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் கூட இருக்காம். நானும், இவரும் போயிட்டு வரட்டுமா?'' என்றாள்.''போயிட்டு வாங்க... இது என்ன கேள்வி?'' ''இல்ல, கண்ணன், சும்மாவே ஒரு இடத்தில் இருக்க மாட்டான்; சுத்திட்டே இருப்பான். அவனையும் பார்த்துட்டு, அந்த பொருட்களை எல்லாம் சரியா பார்க்கவே முடியாது. அதனாலதான், கண்ணனை உங்ககிட்ட விட்டுட்டு போகலாமான்னு.''''இது என்னம்மா கேள்வி... கண்ணனை நான் பார்த்துக்கறேன். நீங்க, கடை கடையா நல்லா பார்த்துட்டு வாங்க. தாமதமானாலும், கவலை இல்லை. நான் இருக்கேன்ல?'' என்றாள்.''இல்ல... காலையில போனா, எல்லாத்தையும் பார்த்துட்டு வரத்துக்கு சாயங்காலம் ஆயிடும்... அங்கேயே நாங்க சாப்பிட்டுக்கிறோம்; நீங்க சாப்பாடு செய்ய வேண்டாம்.''''பரவாயில்ல... கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டி, எல்லாம் பண்றேன். நீங்க, நிம்மதியா போயிட்டு வாங்க.''அவர்கள் கிளம்பினர். சிரித்தபடி அவர்களுக்கு, 'டாடா' சொன்னான், கண்ணன்.''அம்மாவோட தொந்தரவு இருக்காது. 'ஹாய் ஜாலி' பெரியம்மாவோட நிறைய பேசலாம்.'' ''சமத்தா, ஜாக்கிரதையா இருக்கணும் என்ன?'' என்றாள், லட்சுமி.''நான் சமத்தா இருக்கேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க,'' என்றான், கண்ணன்.அவர்கள் சிரித்தனர். பிற்பகல் வீட்டு வேலைகளை முடித்து, அத்தையை குளிப்பாட்டி, உடை மாற்றி, சோற்றைப் பிசைந்து, ஸ்பூன் போட்டு கொடுத்தாள். அத்தை சாப்பிட்டபின், முகம் துடைத்து, கை கழுவி அவரை படுக்கையில் விட்டு வந்த போது, நிறைய நேரம் ஆகிவிட்டது. கண்ணனுக்கு, கிண்ணத்தில் சோற்றைப் பிசைந்து, ஹாலுக்கு வந்தாள்.''கண்ணா...'' கூப்பிட்டாள். பதில் இல்லை.'என்ன ஆயிற்று... இங்குதானே, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தான். 'சீக்கிரமா வா பெரியம்மா... எனக்கு கதை சொல்லணும்...' என்று கூட கத்தினானே. வெளியே எங்கும் போகாமல் சமத்தா இருக்கணும் என்று கூட சொன்னேனே... எங்கு போனான்...'மீண்டும், ''கண்ணா... கண்ணா...'' கூப்பிட்டாள். பதில் இல்லை. பயந்து போனவள், 'கடவுளே... இது என்ன சோதனை...' என, நினைத்தபடி, வீடு முழுதும் தேடியும், கண்ணனை காணவில்லை. மரத்தடி, தண்ணீர் தொட்டி, வாசல் சாக்கடை, கிணறு என்று, எல்லா இடத்திலும் தேடியும், கண்ணனைக் காணவில்லை.'தெருக் கோடியிலே ஆழ்துளை கிணறு தோண்டுகின்றனர். ஒருவேளை, அங்கு போய் இருப்பானோ...' பயந்தபடியே அங்கே ஓடினாள். அன்று, ஞாயிற்றுக்கிழமை யாருமே இல்லை.''கண்ணா...'' கத்தினாள். 'ஆமா... ஒரு சின்ன பையன் இங்க சுத்திட்டு இருந்தான். நாங்க பார்த்தோம். அப்புறம், எங்க போனான்னு தெரியலையே...' என்று, அங்கிருந்தவர்கள் கூறினர். இவள் பயந்து, ''கண்ணா...'' என்று கதறியபடியே, மயங்கி விழுந்தாள்.கண் விழித்தபோது, தன் அறையில் படுத்திருக்க, அவள் எதிரில், கவலையுடன், கணவன் விஜய். அவனருகில், காணாமல் போன கண்ணன். ''கண்ணா... நீ எங்கே போனே...'' அவனை கட்டி அணைத்து, முத்தமிட்டு, அழுதாள்.வெளியிலே ஏதோ வேலையாக போயிருந்தான், விஜய். இவன் வருவதற்குள் கல்யாணி, கண்ணனை காணாமல் கதறி, மூர்ச்சையானது, பெரிய கதை.ஆனால், கண்ணன் புத்திசாலித்தனமாக, மொபைலில் தன் பெரியப்பாவை கூப்பிட்டு, 'என்னை காணோம்ன்னு பெரியம்மா தேடினாங்களாம். ஆனா, அவங்களை காணோம்ன்னு நான் தேடினேன். பெரியம்மாவை பயமுறுத்த நான், பீரோக்குள்ளே ஒளிஞ்சிட்டு இருந்தேன், பெரியப்பா.'ஆனா, அது அவங்களுக்கு தெரியல. என்னைத் தேடி வெளியே போய்... எனக்கு பயமா போயிடுச்சு...' என, கண்ணன் கவலையுடன் கூறியதாக, நிகழ்ந்ததை வர்ணித்தான், விஜய். கண்காட்சிக்கு போனவர்கள் இன்னும் வரவில்லை. தன் தம்பியை மொபைலில் கூப்பிட்டான், விஜய். ஆனால், விஜய், மொபைலில் சொன்ன தகவலை தவறாக புரிந்து கொண்டாள், லட்சுமி. கண்ணன் காணாமல் போய்விட்டதாக, தவறாக நினைத்து, ''பிள்ளை இல்லாத உங்ககிட்ட குழந்தையை ஒப்படைக்கிறோமே, சரியா பாத்துப்பாங்களான்னு நினைச்சது, சரியாப் போச்சு... பிள்ளை இல்லாத உங்களுக்கு குழந்தையோட அருமை என்ன தெரியும்... நான் அண்ணிகிட்டே கண்ணனை விட்டுட்டு போனது தப்பு...'' என, மொபைல் போனில் இன்னும் என்னென்னமோ பேசினாள், லட்சுமி.'என்ன பேசுகிறாள் இவள்... தப்பாக செய்தியைப் புரிந்து, தவறாக பேசுகிறாள். இவள் பெண் தானா... ஒரு தாய் தானா...' என, அதிர்ந்து, மொபைலை, 'ஆப்' செய்தான், விஜய். படுத்திருந்த கல்யாணி மெல்ல எழுந்து, ''என்னங்க... லட்சுமியா கூப்பிடறா... எனக்கு தெரியும், நான் மயங்கி விழுந்துட்டேன்னு தெரிஞ்சு பதறிப்போய் இருப்பா... நான் சுகமா, பத்திரமா இருக்கேன்னு தகவல் சொல்லிடுங்க,'' என்றாள். திகைத்தான், விஜய். இவள், அண்ணி இல்லை; தாய். தாய்மைக்குரிய கனிவும், பாசமும் இருக்கும் இவளிடம், பிள்ளை பெற்ற லட்சுமிக்கு உரிமை கொண்டாட என்ன இருக்கிறது?மனைவி கல்யாணியை கவலையுடன் பார்த்தான், விஜய்.''என்னங்க... அத்தைக்கு மருந்து தரணும். 'லேட்' ஆச்சு...'' என்றாள். அவளை அன்புடன் பார்த்தவன், 'வேண்டாம், இவளுக்கு குழந்தையே வேண்டாம். அவளுக்குள் இருக்கும் இந்த தாயே போதும்...' என. நினைத்துக் கொண்டான், விஜய். கண்ணனனை தன்னருகில் அமர்த்தி, மெல்ல கதை சொல்ல ஆரம்பித்தாள், கல்யாணி. யசோதையிடம் கதை கேட்ட கண்ணனை அங்கு பார்த்தான், விஜய்.வர்த்தினி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !