உள்ளூர் செய்திகள்

சமூக சேவகி, தயா பாய்!

குதிரை மீது இருப்பவர், மத்திய பிரதேசத்தில் உள்ள, பிரபலமான சமூக சேவகி, தயா பாய். குதிரையின் பெயர், சாந்தினி. கேரள மாநிலம், கோட்டயம், பாலாயில் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து, கன்னியாஸ்திரியான, மெர்சி மாத்யு தான், இந்த தயா பாய்.கன்னியாஸ்திரியான பின், அவர் ஆதிவாசிகள் வாழ்க்கை பற்றி அறிய, மத்தியபிரதேசத்தில் உள்ள கிராமத்திற்கு போனார். அங்கு கண்ட சோக காட்சிகள் அவரை வேதனை படுத்தியது. மும்பை திரும்பி, தன்னை, ஆதிவாசிகள் சேவைக்காக அனுப்பும்படி கெஞ்சியும், சபை அதற்கு அனுமதிக்கவில்லை. லட்சியத்தில் உறுதியாக இருந்த, மெர்சி, தன் சீருடைகளை கழற்றி எறிந்து, ஆதிவாசிகளுக்கு சேவை செய்ய புறப்பட்டார். படிப்பறிவு இல்லாத, சுகாதார விழிப்புணர்வு இல்லாத அவர்களுக்கு கல்வி அளித்து, 'நாங்களும் மனிதர்கள் தான்...' என்று, அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். ஆனால், இது அங்குள்ள நில உரிமையாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் பேச்சைக் கேட்டு, தயா பாயை வேட்டையாட துவங்கியது, போலீஸ். அழகாக இருந்த அவரது பற்களை உடைத்தனர், போலீசார். இதற்கெல்லாம் அஞ்சாமல் சேவை செய்தார்.தந்தை மறைந்ததும், குடும்ப பங்கிலிருந்து கிடைத்த பணத்தில், மத்திய பிரதேசத்தில் உள்ள காட்டில், 4 ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் குளங்கள் தோண்டி, மரங்கள் நட்டு செழிப்பான பூமியாக்கி, அப்பகுதியை சேர்ந்த அனைத்து ஆதிவாசிகளுக்கு பயன்படும்படி செய்தார்.இப்போது, வயது முதிர்வால் சோர்வடைந்த நிலையில், நிலத்தை சமூகசேவை அமைப்புக்கு கொடுத்து விட்டு, தன் குதிரையுடன், கேரளா திரும்பியுள்ளார். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !