இது உங்கள் இடம்!
'பேஸ்புக்'கில் இருக்கும் பெண்களா நீங்கள்?பெரிய நிறுவனத்தில், உயர்ந்த பதவியில் இருக்கும் என் தோழி, 'பேஸ்புக்'கில் அக்கவுன்ட் வைத்திருக்கிறாள். ஆனால், அவளது, 'ப்ரொபைல்'லில் படித்த இடம், பிறந்த ஊர் போன்ற எந்த விவரமும் இருக்காது. பல்கலைக்கழகத்தின் பெயர் மட்டும் தான் இருக்கும். அவளுடைய புகைப்படமும் இருக்காது.'சாதாரணமா இருக்கிறவங்க கூட எல்லா விவரமும் போடுறாங்க; நீ ஏன் இப்படி?' என்று கேட்டதற்கு, 'காரணம் இருக்கு... நான் படிக்கும் போது சில பேர் என்கிட்ட, 'லவ் ப்ரபோஸ்' செய்தாங்க. என் குடும்ப சூழ்நிலை, படிச்சு வேலைக்கு போகணும்ன்னு இருந்ததால, அந்த காதல்களை எல்லாம் கண்டுக்கவே இல்ல. என் ஆசைப்படியே இன்னிக்கு நல்ல நிலைமையில இருக்கேன். நான் வேண்டாம்ன்னு சொன்னவங்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி, குழந்தைகளும் இருக்கும். ஆனாலும் கூட, நம்மளை கண்டுக்காம போனவ, இப்ப எப்படி இருக்கான்னு பாக்கத் தோணலாம். குறையா சொல்லல; ஆனா, மனுஷனோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது இல்லயா... 'பேஸ்புக்' மூலமா இப்ப யாரை வேணும்ன்னாலும் கண்டுபிடிச்சி, தொடர்பு கொள்ள முடியுமே!'நம்மை பத்தின எல்லா தகவல்களும் இருந்தா, ஈசியா நம்மை தொடர்பு கொள்ள முடியும். எதுக்கு வேலில போற ஓணான மடியில எடுத்துக் கட்டிக்கணும். ஆபிஸ் காரணங்களுக்காக, 'பேஸ்புக்'ல இருக்கேன் அவ்வளவு தான்! நம்மை பற்றிய சரியான தகவல் இல்லாததால, ஒரு சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அதனால என்ன... பக்கத்தில் இருக்கும் உறவுகள் கிட்ட, நாம நல்லவிதமா பழகினோலே போதும். சில பெண்கள், 'பேஸ்புக்'ல எல்லா விவரத்தையும் கொடுத்துட்டு, எப்படியெல்லாமோ கஷ்டப்படுறாங்க தெரியுமா...' என்றாள்.யோசித்து பார்த்தால், அவள் சொல்வது சரி தான் என தோன்றியது. பெண்கள் முன் இருந்ததை விட, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!— எம்.கவிதா, ஜமீன் பல்லாவரம்.மனிதாபிமானம்!ஓட்டல் நடத்தும் நண்பருடன் அவரது ஓட்டலில் அமர்ந்து சமீபத்தில், பேசிக் கொண்டிருந்தேன்.நான் அங்கிருந்த ஒரு மணி நேரத்தில், கைக்குழந்தையுடன் ஒரு பெண், 'பசிக்கிறது...' என்றும், இளைஞன் ஒருவன், 'ஏதாவது தர்மம் செய்யுங்க...' என்றும், வயதான ஒரு முதியவர், 'ஒரு டீயாவது குடுங்கப்பா...' என்றும் கேட்டு வந்தனர்.ஆனால், யாருக்கும் எதுவும் கொடுக்காமல் விரட்டி விட்டார் நண்பர். இதுபற்றி கேட்டதற்கு, 'இவங்க எல்லாம் இந்த ஏரியா தான்; தினமும் இதே தொந்தரவு...' என்று அலுத்துக் கொண்டார். அந்நேரத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தடியின் உதவியுடன் ஓட்டலுக்கு வந்து, 'ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் விக்குறோம்; ஏதாவது வாங்குங்க சார்...' என்று பணிவுடன் கேட்டனர்.உடனே, ஒவ்வொன்றிலும் ஐந்து பாக்கெட் தருமாறு கேட்டு வாங்கியதோடு, அவர்களுக்கு டிபன் கொடுத்து அனுப்பினார். 'இப்படி அவசரப்பட்டு வாங்கிட்டீங்களே... அந்த பொருட்களோட தரம் எப்படி இருக்குமோ...' என்றேன். 'கை, கால்கள் நல்லா இருந்தும், உழைத்து சாப்பிட மனம் இல்லாமல், ஓசியில் சாப்பிட நினைக்கும் சோம்பேறிகளை விரட்டினேன்; பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், உழைத்து சாப்பிடணும் என்று நினைக்கிற அவங்க நல்ல நோக்கத்தை உற்சாகப்படுத்தவே உதவி செய்தேன்...' என்று விளக்கமளித்தார். நண்பரை மனமார பாராட்டினேன்.— எஸ்.சிவகுருநாதன், அலிவலம்.திருட்டை தடுக்கும் மொபைல் போன்!அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நானும், என் மனைவியும், சென்னை அருகிலுள்ள மறைமலைநகரில், வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.சமீபத்தில், இரவு, 1:00 மணிக்கு, யாரோ பின்வாசல் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, விழித்துக் கொண்டேன். மனைவியை எழுப்பி விஷயத்தை சொன்னதுடன், முன் வாசல் வழியே வெளியில் வந்து, கூச்சல் போடாமல், எதிர் வீட்டினர், வீட்டு சொந்தக்காரர் மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு மொபைல் போனில் தகவல் கொடுக்க, அவர்கள் அனைவரும் வெளியில் வந்து, வீட்டைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டனர்.அத்துடன், பதற்றப்படாமல், 100 மற்றும் 108க்கு போன் செய்தேன். அவர்களும் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். வீட்டில் நுழைந்த இரண்டு திருடர்களும் பொறியில் சிக்கிய எலிகளாய் மாட்டிக் கொண்டனர். வீட்டில் சிறிதளவே இருந்த பணமும், நகையும் தப்பியது; அனைவரும் என்னைப் பாராட்டினர்!முதலில், மொபைல் போன் எண்ணை கொடுக்க மறுத்த அக்கம் பக்கத்தினருக்கு, இப்போது விஷயம் புரிந்தது. எனவே, அருகில் குடியிருப்போர் அனைவரும் அவரவர் வீட்டு மொபைல் போன் எண்ணைக் குறித்து கொண்டால், அவசரம் மற்றும் ஆபத்து நேரங்களில் உதவிகரமாக இருக்கும். சிந்திப்பரா?— ஆ.கண்ணன், மறைமலைநகர்.சொந்த இடத்தில் தான் மரம் நட வேண்டுமா?சமீபத்தில், நானும், நண்பரும் பலாப்பழ சுளைகளை சுவைத்துக் கொண்டிருந்தோம். பழத்தை சாப்பிட்ட பின், கொட்டையை தூரப் போடப் போனேன். ஆனால், நண்பர் அதைத் தடுத்து, 'மா, பலா போன்ற விதை உள்ள காய், கனிகளை உண்டபின், அதன் விதைகளை தூர எறியாமல், கழுவி, உலர்த்தி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால், பின், வெளியே வாகனத்தில் செல்லும் போது சாலை ஓரங்களிலும், காலி நிலங்களிலும் அவ்விதைகளை தூவலாம்; மழைக்காலங்களில் அவைகள் முளைக்கத் துவங்கும். நம் ஒவ்வொருவரின் முயற்சியாலும், ஒரே ஒரு மரம் முளைத்தாலும், அது நமக்கு வெற்றியே! நம் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சொத்து இதுதான்...' என்றார்.அருமையான யோசனை; எல்லாரும் இதைக் கடைப்பிடிக்கலாமே!— கு.அருணாசலம், தென்காசி.