ஆடிபெருக்கு ஸ்பெஷல்!
புளி சாதம்!தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், புளி - எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி - தலா அரை தேக்கரண்டி, வெல்லம் - ஒரு துண்டு, வேர்க்கடலை - ஒரு தேக்கரண்டி, நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 4, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், எள் - தலா ஒரு தேக்கரண்டி, மிளகு, தனியா - அரை தேக்கரண்டி, சிறிதளவு கறிவேப்பிலை.செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து தட்டில் கொட்டி ஆற வைக்கவும். வெறும் வாணலியில் வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து, கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து, வடிகட்டவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு வெடித்ததும், அரைத்த பொடியை போட்டு கிளறி, மஞ்சள் துாள், புளி கரைசல், உப்பு சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும், வெல்லம் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், கறிவேப்பிலையை போட்டு இறக்கவும்.புளி காய்ச்சலுடன் வேர்கடலை சேர்த்து கிளறி, ஆற வைத்த சாதத்தில் கலந்து, பரிமாறவும்.தேங்காய் சாதம்!தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், தேங்காய் துருவல் - அரை மூடி, மிளகாய் வற்றல் - 2, பெருங்காயம் - அரை தேக்கரண்டி, கடுகு - ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - இரண்டு தேக்கரண்டி, முந்திரி பருப்பு - 5, கறிவேப்பிலை, நெய், எண்ணெய், உப்பு தேவையான அளவு.செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து, தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெயும், நெய்யும் ஒன்றாக காய்ந்ததும், கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு சிவந்ததும், முந்திரி போட்டு வறுக்கவும். அத்துடன் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவலை போட்டு சிறிது வாசம் வரும் வரை வதக்கி, உப்பு சேர்க்கவும். பின், சாதத்தில் கலந்து பரிமாறவும்.வெல்ல சாதம்!தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப், பெரிய தேங்காய் - 1 மூடி, வெல்லம் - 250 கிராம், முந்திரி - 5, திராட்சை - 10, பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை, நெய் மற்றும் ஏலக்காய் சிறிதளவு.செய்முறை: அரிசியை சாதமாக வடிக்கவும். வெல்லப் பாகு வைத்து, தேங்காயை துருவி கலந்து, கெட்டி பூரணமாக கிளறி இறக்கவும். அதில், ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சாதத்தை தாம்பாளத்தில் போட்டு, பூரண கலவையை கலக்கவும். சிறிது நெய் விட்டு, பச்சை கற்பூரத்தை பொடித்து போட்டு கிளறி பரிமாறவும்.எலுமிச்சை சாதம்!தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப், எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி, மஞ்சள் துாள், பெருங்காய துாள் - தலா அரை தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 கீறியது, இஞ்சி -1 துண்டு துருவியது, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.வறுத்து பொடிக்க: மிளகாய் வற்றல் - 4, கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி, தனியா - அரை தேக்கரண்டி.தாளிக்க: கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, தேவையான அளவு எண்ணெய்.செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆற விடவும். பொடிக்க வேண்டிய பொருட்களை வாணலியில் சிவக்க வறுத்து, பொடிக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பருப்புகளை போட்டு சிவக்க வறுபட்டதும், மஞ்சள் துாள், உப்பு, எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி, பொடித்த பொடியை சேர்த்து சாதத்தில் கலந்து, வேர்க்கடலை அல்லது முந்திரி வறுத்து போடவும்.எள் தீபம் ஏற்ற...ஆடி மாதம், காற்று அதிகமாக வீசும். இது, தொற்றுநோய்களை பரவச் செய்து விடும். இதைத் தடுக்கும் ஆற்றல், எள் எண்ணெய் தீபத்துக்கு உண்டு. எள் எண்ணெயில் இரும்புச் சத்து உள்ளது. எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும்போது அது சூடாகி, பிராண சக்தியை அதிகப்படுத்தும். இந்த பிராண சக்தி, தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு தரும். எனவே, ஆடி மாதம், அடிக்கடி எள் தீபம் ஏற்ற வேண்டும்.மருந்து கஞ்சி!பண்டை காலம் முதல், ஆடி மாதத்தில் மருந்துக் கஞ்சி தயாரித்து குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதி மதுரம், சீரகம், வெங்காயம், திரிகடுகம், திப்பிலி, குன்னிவேர், ஊழிஞ்சை வேர், சிற்றாமுட்டி மற்றும் கடலாடி வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து, துணி பையில் கட்டுவர். இதை பழைய அரிசியில் போட்டு கஞ்சி வைத்து, துணி பையை பிழிந்து பின் அருந்துவதே, மருந்து கஞ்சி.ஆடி காற்று காரணமாக இருமல், மூச்சு முட்டுதல் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெற, இந்த மருந்து கஞ்சி உகந்தது.