களங்கமில்லா மனசு!
வேப்ப மர நிழலில் படுத்திருந்த வேணு, கண் விழித்து பார்த்த போது, எதிரே சித்தப்பா நின்றிருந்தார்.''எப்ப வந்தீங்க, சித்தப்பா?''''இப்பதான் வந்தேன், வேணு. ஆமா... வெளியே, 'மாணிக்கம் பவன்'னு எழுதி மாட்டிருக்கிறியே... எனக்கு தெரிந்து, நம் குடும்பத்தில அப்படி யாரும் கிடையாதே?'' என்றார்.''அதையேன் கேட்கிறீங்க, சித்தப்பா... காரணம் இருக்கிறது.''''சொல்லேன்... நானும் தெரிஞ்சுக்கிறேன்.''''நானும், மாணிக்கமும், ஒரே பள்ளிகூடத்தில் படித்தோம்; எப்போதும் சேர்ந்தே இருப்போம். குடும்ப சூழ்நிலை காரணமாக, கொஞ்ச நாளில் படிப்பை பாதியிலே நிறுத்தி அவன், விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டான்.''நான், படிப்பை முடித்து, தற்போது, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, பரம்பரை வீட்டில் இருப்பது, உங்களுக்கு தெரிந்தது தானே, சித்தப்பா...''''அதற்கும், வீட்டுக்கு வைத்திருக்கும் பெயருக்கும் என்ன தொடர்பு?'' என்றார்.கொஞ்ச நாள் முன் நடந்த சம்பவத்தை, நினைவு கூர்ந்தான், வேணு.அன்று, அவனது நண்பன், மாணிக்கம் வந்திருந்தான்... 'ஏம்பா, வேணு... எப்படி இருக்கே... உன்னிடம், ஒரு உதவி...' என்றான்.'என்ன... சொன்னாதானே தெரியும்...' என்றான், வேணு.'வீட்டிற்கு விருந்தாளிங்க வர்றாங்க... என் வீடு, அவ்வளவு பெரிசு இல்லை; உனக்கே தெரியும். கீழத்தெருவில் இருக்கே, உன் வீடு, பூட்டிதானே கிடக்கிறது... இரண்டு நாளைக்கு தாயேன்...' என்றான்.'வரக்கூடியவர்கள், வீட்டை குப்பையாக்கி, சுத்தம் செய்யாமல் போய் விடுவர்... பிறகு, நான் தான் எல்லாம் சரி செய்ய வேண்டும்...' என, நினைத்து கொண்டவன்... 'இல்லை, மாணிக்கம்... அங்கே, வீட்டு வேலை இன்னும் பாக்கி இருக்கிறது...' என, பொய் சொன்னான்.'சரி... பரவாயில்லை, நான் வேற எதாவது வீடு கிடைக்குமா பார்க்கிறேன்...' என்றான். ஆறு மாதம் கழித்து, மீண்டும் வந்தான், மாணிக்கம்.'வேணு... எனக்கு, அவசரமாக, 5,000 ரூபாய் வேண்டும்... கொடுக்க முடியுமா?' என்றான்.பணம் இருந்தும் கொடுக்க மனமின்றி, 'அடடா... நேற்று தானே சீட்டு கட்டினேன்...' என, வடிகட்டின, இரண்டாவது பொய் கூறினான். 'பரவாயில்லை, வேணு... வேறு எங்கேயாவது புரட்ட முடியுமா பார்க்கிறேன்...' என்று கூறி, போய் விட்டான், மாணிக்கம். 'கிட்டதட்ட ஒரு வருஷமாக, மாணிக்கத்தை காணவில்லையே...' என, வேணு நினைத்திருந்த போது, திடீரென வந்து நின்றான்.'வா, மாணிக்கம்!''வேணு... உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது...' என்று கூறி, மடியிலிருந்து நகை ஒன்றை எடுத்து கொடுத்தான்.'இதை வைத்து, 10 ஆயிரம் ரூபாய் தாயேன்...' என்றான்.'மாணிக்கம்... தப்பா எடுக்காதே, நான் வெளியூர் போறேன்... வீடு பூட்டியிருக்கும்... காலம் சரி இல்லை, பார்த்தியா...' என்றான், வேணு.'வேறு எங்கேயாவது, பணம் புரட்ட முடியுமான்னு பார்க்கிறேன்...' என்று கூறி, கிளம்பி விட்டான், மாணிக்கம்.இரண்டு நாட்களுக்கு பின், மதுரையில் நடக்கவிருக்கும் கவி அரங்கத்திற்கான அழைப்பிதழ், தபாலில் வந்தது. கிளம்பி சென்றான், வேணு. பேருந்து நிலையத்தில் கூட்டம். முண்டியடித்ததில், கால் தடுமாறி விழுந்தது தான் தெரியும்... வேணு, கண் விழித்து பார்த்தபோது, மருத்துவமனையில், அவன் பக்கத்தில் இருந்தான், மாணிக்கம்.'என்ன ஆச்சு?' எனக் கேட்டான், வேணு.'அவசர வேலையாக, திருச்சிக்கு போக, பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, நீ கூட்ட நெரிசலில் தடுமாறி விழுவதை பார்த்தேன். பயணத்தை பாதியிலேயே நிறுத்தி, மருத்துவமனையில் உன்னை சேர்த்தேன்... வந்ததற்கு, இப்போ எவ்வளவோ பரவாயில்லை...' என்றான், மாணிக்கம்.'நிறைய செலவாகி இருக்குமே... உனக்கு, எவ்வளவு தரவேண்டும்?' 'அவசரப் படாதே... முற்றிலும் குணமானவுடன், செலவான தொகையை வாங்கிக்கிறேன்...' எனக் கூறினான், மாணிக்கம்.நடந்ததை நெகிழ்ச்சியுடன், சித்தப்பாவிடம் கூறி முடித்தான், வேணு.''அவசர தேவைக்காக, யாரிடமும் போகாமல், உரிமையுடன் என்னிடம் வந்து, மாணிக்கம் உதவி கேட்ட போது, பள்ளி நண்பன் என்றும் பார்க்காமல், மனசறிந்து பல பொய்களை சொன்னேன்... ''ஆனால், திருச்சிக்கு போக இருந்தவன், பயணத்தை தொடராமல், என்னை காப்பாற்றி, கூடவே இருந்து பார்த்துக் கொண்டான்,'' என, கண்ணீர் வடித்தான். ''நீ, பொய்யையும், பணத்தையும், வசதியையும் அளவாய் எடுத்தாய்... ஆனால், உன் நண்பனோ, உயிரை அளவீடாக எடுத்தான். இதுதான், வித்தியாசம். வீட்டிற்கு, நீ வைத்திருக்கும் பெயர், மிகவும் பொருத்தமானதே,'' என, தீர்க்கமாக சொன்னார், சித்தப்பா.வேணுவின் மனதை தொட்டு நின்றான், களங்கமில்லாத நண்பன், மாணிக்கம்.'இனி, நட்பில் தொய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்...' என, சபதம் எடுத்து கொண்டான், வேணு.- ந. சுந்தரா