இனிப்பு விரதம்!
விரதம் என்றாலே, பட்டினி கிடந்து கடவுளின் அருளைப் பெற முயற்சிக்கும் வழிமுறை என்று, நினைக்கிறோம். ஆனால், 'எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், தீபம் ஏற்றுவதும், இனிப்பு உண்பதும் கூட விரதம் தான். இதன் மூலமும், கடவுள் அருளைப் பெறலாம்...' என்கிறார், சனாதனர் என்ற முனிவர். இந்த விரதத்தைத் தான், நாம் தீபாவளி என்கிறோம்.வேத காலத்தில் வசித்த வத்சயன் - மமதா என்ற தெய்வத் தம்பதியின் புதல்வர், தீர்க்கதமஸ்; பிறவியிலேயே பார்வையற்றவர். ஆனால், வேத ஞானம் உள்ளவர். ரிக் வேதத்தின் சூக்தங்களை தொகுத்தவர். பார்வையற்றவராக இருந்தாலும், இவரது வேத அறிவு கண்டு மகிழ்ந்து, திருமணம் செய்து கொண்டாள், ப்ரத்வேஷு என்ற பெண். வாழ்க்கை முழுக்க இருளில் தவித்தவர், 'இனியும் இப்படி ஒரு நிலை எனக்கு ஏற்படக் கூடாது. அதற்கு இனி வரும் பிறவிகளிலாவது ஊனமின்றி பிறக்க வேண்டும்...' என, விரும்பினார்.இந்தச் சூழலில், பிரம்மாவின் மகனான, சனாதனர் முனிவர், இவரது ஆஸ்ரமத்துக்கு வந்தார். தீர்க்கதமஸ் மற்றும் ப்ரத்வேஷு இருவரும், அவரிடம் ஆசி பெற்றனர்.'ஐயனே, நான் இருள் சூழ்ந்த உலகத்தில் வாழ்கிறேன். நானும் பல நாள் உண்ணாவிரதமிருந்து, கடவுளை வணங்கி விட்டேன். பார்வை கிடைக்கவில்லை. மறுபிறப்பிலாவது நான் ஒளியைக் காண்பேனா?' என கேட்டார், தீர்க்கதமஸ்.'முனிவரே, உடம்பை வருத்தி விரதம் இருந்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும் என்பதில்லை. ஐப்பசி மாதத்தின் தேய்பிறை திரயோதசி திதியன்று, மாலை பிரதோஷ வேளையில், நீங்கள் நந்தி தேவரை வணங்கி, சிவ பூஜை செய்யுங்கள். மறுநாள், சதுர்த்தசியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து, நீர் நிலையில் நீராடுங்கள்.'அன்றைய தினம், கங்காதேவி, உம் வீட்டு தீர்த்தக்குடத்தில் கூட வாசம் செய்வாள். இந்தக் குளியலை, 'கங்கா ஸ்நானம்' என்பர். அத்துடன் உங்கள் ஆஸ்ரமத்திலும், சுற்றுப்புறங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றுங்கள். இதை, எம தீபம் என்பர். எமனுக்கு ஏற்றப்படும் இந்த தீபம், அகால மரணத்தையும், ஊனங்களையும் தவிர்க்கும்.'இனிப்பு, பலகாரங்கள் செய்து சாப்பிடுங்கள். அன்று ஆஸ்ரமத்திற்கு வரும் அனைவருக்கும் அவற்றை தானமிடுங்கள். உமது பாவங்கள் நீங்கி, இனி வரும் பிறவியெல்லாம், ஒளிமிக்க வாழ்வைப் பெறுவீர்கள்...' என்றார், சனாதனர்.அவ்வாறே செய்தார், தீர்க்கதமஸ். இதனால் தான், பாவம் தீர, கங்கையில் நீராடச் செல்கின்றனர், மக்கள். காலப்போக்கில், ஐப்பசி சதுர்த்தசி தினத்தில், தீபாவளி என்ற திருவிழாவே ஏற்பட்டது. தீபாவளி என்றால், 'தீப வரிசை' என, பொருள்.தீபாவளி என்பது, கடவுள் நமக்கு கரும்பும் கொடுத்து, அதைத் தின்ன கூலியும் தந்துள்ள விரதம். இந்த இனிப்பு விரதத்தைக் கடைப்பிடித்து, எளிதாக இறையருள் பெறுவோம். தி. செல்லப்பா