உள்ளூர் செய்திகள்

அந்த ரகசியம்!

அலுவலகத்தில் நுழைந்தவுடனே, தன் இதயத்துடிப்பு எகிறுவதை உணர்ந்தான் ராகவன்.'எல்லாம் அந்த பிரசாத் செய்கிற வேலை! மனிதனா அவன்... வார்த்தைகளில் தேளையும், நட்டுவாக்காலியையும் வைத்து, ஊழியர்களை கொட்டி எடுக்கிறான்...' என்று நினைத்தான்.இரவில், மகள் சொன்ன முதலை கதை, மொபைலில் வாசித்த காப்காவின் கவிதை, சாலையோர சுவரொட்டியின், 'பளிச்' ஓவியம், 'என்னுயிர் தோழி கேள் ஒரு சேதி...' காற்றில் கரைந்து வந்த சுசிலாவின் அமுத கானம் என்று எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, அலுவலகம் அவனை, தன் ராட்சத கரங்களால் அணைத்து கொண்ட வேளையில், எதிர்பார்த்த அந்த அழைப்பு வந்தே விட்டது.''மிஸ்டர் ராகவன்... என் அறைக்கு கொஞ்சம் வாங்க...'' இன்டர்காமில் அழைத்த பிரசாத்தின் குரலில், அந்த, 'மிஸ்டர்' சற்று நையாண்டி கலந்து ஒலித்ததை, உணர்ந்தான் ராகவன்.பிரசாத்தின் அறைக் கதவை மெல்ல தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனிடம், ''கீர்த்தி என்டர்பிரைசஸ்க்கு பேமென்ட் தரலயா... கிழிகிழின்னு கிழிச்சு மெயில் அனுப்பியிருக்கான்...'' என்றான் சிடுசிடுத்த முகத்துடன் பிரசாத்.''நாலு நாட்களுக்கு முன்பே பேங்க்ல கொடுத்தாச்சு சார்... இன்னும் போகலே போலிருக்கு,'' என்றான்.''இதப் பத்தி பேங்க்ல கேட்டீங்களா, இல்லயா?''''அவங்க லீஸ் லைன்ல பிரச்னையாம்... அதனால தான் பணம் போகலயாம். இதப் பத்தி கீர்த்தி கம்பெனிக்கு அன்னிக்கே சொல்லிட்டேன்; இருந்தும் ஏன் மெயில் செய்தாங்கன்னு தெரியல,'' என்றான் உண்மையான வருத்தத்துடன்!''இன்டர்நெட் பேங்கிங் இருக்கில்ல... அதுல செய்ய வேண்டியது தானே...''''சார்... பாஸ்வேர்ட் ப்ளாக் ஆகியிருக்கு,'' என்றான்.''ஷிட்... இப்படியா பொறுப்பில்லாம இருப்பீங்க... வாங்குற சம்பளத்துக்கு நேர்மையா இருக்க வேணாமா... பி.டெக்., பி.ஈ.,ன்னு டிகிரி மட்டும் போட்டுக்க தெரியுது; ஒரு மண்ணும் தெரியல. அந்த சிண்டால் குரூப்புக்கு அடுத்த ஆண்டுக்கான கான்டிராக்ட் ரெனியூவல் கொடுத்தாச்சா?''''நீங்க சொன்ன அன்னிக்கே ரெடி செய்து, உங்க டேபிள்ல வெச்சுட்டேன் சார்,'' என்றான் ராகவன்.''இத ஏய்யா என்கிட்ட சொல்லலே... லயன்ஸ் கிளப் விழா ஏற்பாடுகள்ல நான் பிசியா இருக்கேன்னு தெரியுமில்ல... சிப்ஸ் சாப்பிட்டு, காபி குடிச்சுட்டு, டேபிள தேய்க்கிறதுக்கா வேலைக்கு வரீங்க... பொறுப்பு வேணாம்... பணம் போட்டு கம்பெனி நடத்தறோம்யா... உன்னை மாதிரி ஆளுங்கள நம்பறேன் பாரு, என்னை சொல்லணும்,'' என்றான்.வார்த்தைகளுக்கு ஈடாக அந்த முகத்தின் சிவப்பும், சிடுசிடுப்பும், இதயத்தை சுட்டன.'இவன் மேஜையில் கிடக்கிற கோப்பு, இவன் கண்ணுக்கு தெரியாதாம்; நினைவுபடுத்தணுமாம். இதென்ன அடிமை ராஜ்ஜியமா... பல்வேறு கனவுகளுடன் இந்த தொழிற்படிப்பை கஷ்டப்பட்டு படிச்சு பட்டம் வாங்கியிருக்கேன்.'ஆட்டோ மொபைலில் தினம் தினம் வருகிற தகவல்கள், கண்டுபிடிப்புகள்ன்னு தேடிப் பிடிச்சு படிச்சு, அதை நிறுவனத்திற்கு பயன்படுத்துற என்னோட அத்தனை நல்ல முயற்சிகளையும், இப்படி அலட்சியமாக விளாசி தள்ளுகிற இந்த முதலாளித்தனத்தை, எப்படி எதிர்கொண்டு ஜெயிக்க முடியும்...' என்று மனம் கொந்தளிக்க, அமைதியாக தலை கவிழ்ந்து, நின்றான்.ராகவனின் தலை முடியை கோதியபடி, ''எதை வேணும்ன்னாலும் பொறுத்துக்கலாம்ங்க... ஆனா, இப்படி வார்த்தையாலயே கசையடி வாங்கறத பொறுத்துக்கவே முடியாது. என் நகைங்க இருக்கு, பத்தாதற்கு கிராமத்துல இருக்கிற நிலத்தை வித்து, சின்னதா தொழில் துவங்கலாம்... என்ன சொல்றீங்க?'' என்றாள் மனைவி.''அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லே. சொந்த தொழில் துவங்க சூழ்நிலை சாதகமா இல்ல. பெரிய பண முதலைகளே தலையில துண்டை போட்டுகிட்டு ஓடறாங்க... இதுல நாம எம்மாத்திரம். விடு... இது என் தலையெழுத்து,'' என்றான்.''ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க... ஆட்டோ மொபைல் படிப்புல பட்டம் வாங்கியிருக்கீங்க... ஊர் பூரா வண்டிங்க ஓடுது; ஸ்பேர்பார்ட்ஸ் வாங்கி வித்தா கூட போதுமே... அதுல கிடைக்கிற வருமானத்தை வச்சு கட்டுசெட்டா என்னால குடும்பம் நடத்த முடியும். தொழில் சூடு பிடிக்கும் முன் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லங்க... சமாளிச்சுக்குவோம்,'' என்றாள்.அவள் முகம் முழுக்க, அன்பு தெரிந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் மகள், தரையில் கவிழ்ந்து உட்கார்ந்து, நாய்க்குட்டி படம் வரைந்தபடியே, அவனை பார்த்து சிரித்தாள். 'இந்த வீடு வெறும் தரையின் மேல் நிற்கவில்லை; இந்த அற்புதப் பெண்களின் பண்புகளின் மேல் நிற்கிறது...' என்று நினைத்தான்.மனைவியின் கைபற்றி, ''உங்க ரெண்டு பேரையும் கண்போல பாத்துக்கணும்; அதுக்கு பணம் வேணும். பிரசாத் என்ன வேணா பேசட்டும்; காதை மூடிக்கிறேன். எல்லாத்தையும் விட, என் குடும்பம் தான் எனக்கு பெரிசு,'' என்றான்.கவலையுடன் அவனையே பார்த்தாள் ராகவனின் மனைவி.கடல் எப்போதும் போல், அலைகளை கரைக்கு அனுப்பி, மக்களை நலம் விசாரித்தபடி இருந்தது. சிறுவர்கள் சிலர் மணலில் வீடு கட்டியபடி இருந்தனர். அவர்கள் கட்டி முடிக்கும் முன் அது விழுந்தது. அதைப் பார்த்த ராகவன், நடையை நிறுத்தி, கொஞ்சம் கடல்நீர் எடுத்து வரக் கூறி, மணலை ஈரமாக்கினான். இறுக்கமாக பிசைந்து, உத்தரத்தில் வைத்து நீவினான். இப்போது, வீடு ஒரு கட்டமைப்புக்கு வந்தது; சிறுவர்கள் உற்சாகமாக கைதட்டினர்.'நீங்க இன்ஜினியரா அங்கிள்... சூப்பரா தளம் போட்டுட்டீங்க; தாங்க்ஸ்...' என்ற அவர்களின் நன்றி நவிலை, சிறு புன்னகையுடன் ஏற்று, தொடர்ந்து நடந்தான்.மொபைல் அடித்தது; எடுத்துப் பார்த்தான். பிரசாத்தின் அழைப்பு!''நாலு நாள் துபாய்க்கு டூர் போறேன். திடீர் ப்ளான் இது... வீரபாண்டியன் கான்டிராக்ட், பார்தி டேட்டாஸ், சுமுகி கியர்ஸ் வேலைகள இந்த வாரத்துல முடிச்சுடுங்க,'' என்றவனின் குரல், அரசாணை போல ஒலித்தது.''சார்... எங்க அம்மாவுக்கு வயித்துல கட்டின்னு இப்பத்தான் தெரிஞ்சது. அவங்கள இங்க கூட்டிட்டு வர நான் ஊருக்கு போகணும். அதனால, ஒரு நாள் லீவு வேணும்,'' என்றான் வேகமாக!''அதெல்லாம் நான் வந்த பின் பாத்துக்கலாம்... அதென்ன எல்.கே.ஜி., பிள்ளை மாதிரி, அம்மாவுக்கு காய்ச்சல், சளின்னு சாக்கு சொல்றீங்க; சம்பளம் வாங்கல... கம்பெனிக்காகவும் கொஞ்சம் வேலை செய்ங்க,'' என்று வழக்கமான கிண்டலுடன், தொடர்பை துண்டித்தான் பிரசாத்.'திருவல்லிக்கேணியின் இந்த கடற்கரை மணலில் தானே பாரதியும் நடந்திருப்பான்... 'மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்...' என்று அவன் எழுதினானே... நான், ஏன் இன்னொரு பாரதியாக இல்ல. எது என்னை தடுக்கிறது... சுயமரியாதை, உழைப்பு, விசுவாசம், நேர்மை என்று எல்லாவற்றையும் அடகு வைத்து வாழ்கிறேனே...' என்று நினைத்த போது நெஞ்சு வலித்தது.''ராகவன் சார்...'' என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். உயரமான இளைஞன் ஒருவன், சிநேகத்துடன் சிரித்தபடி நெருங்கினான். யாராக இருக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ''என்ன சார் அடையாளம் தெரியலயா... நான் தான் மார்த்தாண்டம் சேகர்; பீச்சுக்கு வந்தா எப்பவும் என்கிட்ட தானே சுண்டல் வாங்கி சாப்பிடுவீங்க...'' என்று கூறி சிரித்தான்.''அட சேகர் நீயா...'' என்று ராகவனுக்கு, அவனது தோற்றம் உண்மையிலேயே ஆச்சரியத்தை கொடுத்தது.ஐந்து ஆண்டுகளுக்கு முன், தினம், நடைப்பயிற்சிக்கு வரும் போது, குட்டிப்பையனாக, சுண்டல் வாளியுடன் ஓடி வருவான் சேகர். சிரித்த முகம், உற்சாகம், நேர்மையான பேச்சு என்று துருதுருவென்று இருக்கும் சேகரை, ராகவனுக்கு மிகவும் பிடிக்கும். தேர்தல், சினிமா, ஒலிம்பிக்ஸ் என்று தினம் ஒரு கேள்வி கேட்டு தெரிந்து கொள்வான். அந்த வயதிலேயே காலத்தின் அருமை தெரிந்த கடுமையான உழைப்பாளி. 'அவனா இப்படி யுவராஜன் போல கம்பீரமாக வளர்ந்து நிற்கிறான்...' என்று ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தான் ராகவன்.''என்ன ராகவன் சார் அப்படி பாக்கறீங்க... நல்லா இருக்கீங்களா...'' என்றான்.''நான் நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்கே, என்ன வேலை செய்ற?'' என்று ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.''அதே சுண்டல் வியாபாரம் தான் சார்!''''என்னப்பா சொல்ற... சுண்டலா?''''ஆமாம் சார்... ஆனா, இப்ப நான் சுண்டல் வியாபாரம் செய்கிற முதலாளி. என்கிட்ட, 10 பையன்கள் வேலை செய்றாங்க. ரொம்ப நல்லா போகுது பிசினஸ். தினம் மொரீஷியஸ், சீஷெல்ஸ்ன்னு ஏற்றுமதி செய்றேன்... அதுக்கு தனியா பேக்டரி ஓடுது,'' என்றான்.''நெஜமாவா...''''ஆமாம் சார்... இந்த, 10 பையன்களும் மீனவ சிறுவர்கள்; எல்லாருமே படிக்கிறாங்க; சாயங்காலம் மட்டும் சுண்டல் விற்கிறாங்க. நான் தான் படிக்க வைக்கிறேன். தொழில்படிப்பு மாதிரின்னு வெச்சுக்குங்களேன்,'' என்றான்.ஆச்சரியத்துடன், ''எப்படிப்பா... இப்படி ஜெயிச்சே... கேக்குறதுக்கே ரொம்ப அற்புதமா இருக்கு!''''தைரியம் தான் சார் மூலதனம்; எந்த வெற்றிக்கு பின்னாலயும், யாரோ ஒருத்தரோட தைரியம் இருக்குன்னு சொல்வாங்க இல்லயா... தவிர சுண்டல் பையந்தானேன்னு ஒவ்வொருத்தர் கிட்ட பட்ட அவமானம், அவமதிப்பு, மனவேதனை இதையெல்லாம் கூட, மூலதனமா போட்டேன். உங்கள மாதிரி, 'வாக்கிங்' வர்ற பேங்க் மேனேஜர் ஒருவர் தான், எனக்கு வங்கிக் கடன் கொடுத்தார்; அத வைச்சு, பாத்துடலாம் ஒரு கைன்னு இறங்கிட்டேன். சுவை, அணுகுமுறை, விலை, தரத்துல உறுதியா இருந்தேன்; இப்ப ஜெயிச்சுட்டேன். வாங்க சார்... உங்கள வீட்டுல இறக்கி விடறேன்,'' என்று தன் ஆடி காரை காட்டினான்.அவனையே விழிகள் விரிய பார்த்த ராகவனுக்கு, இதுவரை, மர்மமாக இருந்த திரைகள், சட்டென்று அவிழ்ந்து விழுந்தன. சில்லென்று சுதந்திரக் காற்று, நாசியை சுகமாக தீண்டியது. 'கோழைகளை தவிர, மற்ற அனைவருக்கும் இந்த பூமி சொந்தமானதே...' என்று, முதல் முறையாக தோன்றியது. சேகரின் கை பற்றி குலுக்கிய போது, அதில், நன்றியும், அன்பும் தவிர, புது ரகசியத்தை அறிந்து கொண்ட உற்சாகமும் கலந்திருந்தது.வானதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !