உள்ளூர் செய்திகள்

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! - 14

முன்கதைச் சுருக்கம்: சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், இக்பால், ஜோஷ் மற்றும் தருணிடம், மிரட்டி விசாரிக்க, முகிலாவை கடத்தியதாக கூறினர். எதிர்பாரா தருணத்தில் இன்ஸ்பெக்டரை, கனமான பூ ஜாடியால் தாக்கினான், இக்பால் -தலையில் பீறிட்ட ரத்தத்தோடு எழுந்து நிற்க முயற்சித்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனை, தள்ளிவிட்ட தருண், அவரருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான். உதட்டின் கடைக்கோடியில் புன்னகையொன்று உற்பத்தியாயிற்று.''சாரி இன்ஸ்பெக்டர்... சில சமயங்கள்ல இப்படித்தான் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாம, ரத்தம் வர்ற மாதிரி அடிக்க வேண்டியதாயிடுது... இக்பால் கொஞ்சம் பலமாய்த்தான் அடிச்சுட்டான்னு நினைக்கிறேன். உங்க உடம்புக்குள்ளே இருக்கிற, 6 லி., ரத்தமும் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துடும் போலிருக்கே!''தருண் கிண்டலாய் பேசிக் கொண்டிருக்கும் போதே, மறுபடியும் இரு கைகளையும் ஊன்றி, பிரயாசைபட்டு எழ முயன்று முடியாமல் ஒரு பக்கமாய் சாய்ந்தார், முத்துக்குமரன். கண்களுக்குள் இருட்டு பாய்ந்து, தலை சுழன்றது.அருகே நின்றிருந்த ஜோஷ், அவருடைய தலை முடியைக் கொத்தாய் பற்றி உலுக்கினான். ''இந்த ராத்திரி நேரத்துல உக்கடம் துரையை தேடிக்கிட்டு வந்த நீ, அவன் கிடைக்கலைன்னா திரும்பிப் போக வேண்டியது தானே... இங்கே எதுக்காக வந்த... இப்படி எங்க கையில அடிபட்டு சாகவா?''ரத்தத்தில் நனைந்து கொண்டிருந்த முத்துக்குமரன், சிரமப்பட்டு கண்ணிமைகளைப் பிரித்து அவனைப் பார்த்தார். உதடுகளை மெதுவாய் அசைத்தார். கேலியாய் சிரித்தான், ஜோஷ்.''அட, சார் ஏதோ பேசறார்... என்னான்னு கேளு, தருண்.''அவரருகே குனிந்து, உதட்டருகே காதை கொண்டு போய் கேட்டான், தருண்.''சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.''''தண்ணி...'' இந்த மூன்று எழுத்துக்களை மூச்சிரைக்க பேசிவிட்டு, முத்துக்குமரன் கண்களை மூடிக்கொள்ள, ஜோஷை புன்சிரிப்போடு பார்த்தான், தருண்.''சாருக்கு தண்ணி வேணுமாம்... அந்த மினரல் வாட்டர் பாட்டிலை எடு, ஜோஷ். உயிர் போற நேரத்துல, தண்ணி குடுத்தா ரொம்பவும் புண்ணியமாம்.''டீபாயின் மேலிருந்த வாட்டர் பாட்டிலை ஜோஷ் எடுக்க முயல, சோபாவில் உட்கார்ந்திருந்த இக்பால், ''ஒரு நிமிஷம் ஜோஷ்,'' என, குரல் கொடுத்தான்.''என்ன?''''அவருக்கு அந்த பாட்டில் வேண்டாம்.''''அப்புறம்?''சோபாவில் கிடந்த, 'கோல்டன் ட்ராப்ஸ்' விஸ்கி பாட்டிலை எடுத்து ஜோஷிடம் கொடுத்தான், இக்பால்.''இன்ஸ்பெக்டர்... அந்தத் தண்ணியைத் தான் கேட்டார்,'' என்றான், ஜோஷ். ''இதுவும் தண்ணி தான். ரொம்பவும், 'காஸ்ட்லி' தண்ணி. 750 மில்லி இருக்கும். பூராவையும் ஊத்தி சாரோட வயித்தை ரொப்பிடு.''''தேவையில்லாம ரெண்டு லட்ச ரூபாய் விஸ்கியை எதுக்காக, 'வேஸ்ட்' செய்யணும்.''''இது, 'வேஸ்ட்' கிடையாது. நாம இனிமே பண்ணப் போற விஷயங்களில் இதுதான் பெஸ்ட்.''''எனக்குப் புரியலை.''தருண் குறுக்கிட்டு, ''இக்பால் சொல்றது எனக்குப் புரியுது. அந்த விஸ்கி பாட்டிலைக் கொண்டா, ஜோஷ்.''ஜோஷ் குழப்ப முகத்தோடு விஸ்கி பாட்டிலைக் கொடுக்க, தருண் வாங்கி, முத்துக்குமரனின் கன்னத்தைத் தட்டினான்.''சார்... கொஞ்சம் வாயைத் திறங்க.''சிரமமான சில விநாடிகளுக்குப் பிறகு முத்துக்குமரனின் உதடுகள் மெதுவாய் பிரிய, அந்த இடைவெளியில் பாட்டிலின் வாயை நுழைத்து கவிழ்த்தான். விஸ்கி துளிகள் தொண்டைக்குள் இறங்க, அவருடைய உடல் அதை ஏற்க மறுத்து திமிறியது.''ஜோஷ்... இன்ஸ்பெக்டரோட தலையை அசைய விடாம பலமாய் பிடிச்சுக்க.''அவன் பிடித்துக் கொள்ள, பாட்டிலில் இருந்த விஸ்கி, ஒவ்வொரு மில்லியாய் இறங்க ஆரம்பித்தது. சரியாய் ஐந்து நிமிடம்; பாட்டில் காலியாயிற்று.சோபாவிலிருந்து எழுந்து வந்தான், இக்பால். முத்துக்குமரனின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, தருணையும், ஜோஷையும் ஏறிட்டபடி, ''இன்னும் ஐந்து நிமிஷங்களில் இன்ஸ்பெக்டருக்கு அமரர் பதவி கிடைச்சுடும். பல்ஸ் அதல பாதாளத்துக்கு போயிட்டிருக்கு... உயிரை விடறதுக்காகவே இங்கே வந்திருக்கார் போலிருக்கு... புவர் போலீஸ் மேன்.''ஒரு சிகரெட்டை பற்ற வைத்து, புகையை உதடுகளில் கசியவிட்டபடியே, ''சரி... பாடியை எப்படி, 'டிஸ்போஸ்' பண்ணப் போறோம்?'' கேட்டான், ஜோஷ்.தருணை ஏறிட்டான், இக்பால்.''அது எப்படின்னு ஜோஷுக்கு சொல்லு, தருண்.''''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், புல்லா குடிச்சுட்டு போதையில் பைக்கை ஓட்டிட்டு உக்கடம் துரை என்ற, பழைய குற்றவாளியை தேடிக்கிட்டு, அன்பு நகருக்கு வந்தார்.''வர்ற வழியில் போத்தனுாருக்கு போகிற ரயில்வே ட்ராக்குக்குப் பக்கத்துல பைக் வரும்போது, 'ஸ்பீட் ப்ரேக்கர்' மேல ஏறி, நிலை தடுமாறி ரோட்டோர குட்டைக்குள்ளே விழுந்து...'' என, தருண் சொல்லி முடிப்பதற்குள்...''தலையில் அடிபட்டு, 'ஸ்பாட்ல அவுட்'ன்னு சொல்ல வர்றே... இல்லையா, தருண்?''''அதேதான்.''''ஜோஷ்... தருண் சொன்னது, 'ஒர்க் அவுட்' ஆகுமா?''''மேலோட்டமா பார்த்தா ஓ.கே., தான். ஆனா, இதை நாம செயல்படுத்தறதுக்கு முந்தி நிறைய யோசனை பண்ண வேண்டியிருக்கு. இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம், 1 சதவீதம் கூட போலீசுக்கு வந்துடக் கூடாது. வந்துட்டா பிரச்னையாயிடும்.''தருண் குறுக்கிட்டு, ''அப்படி சந்தேகம் வர வாய்ப்பில்லை, ஜோஷ்.''''எப்படி சொல்றே?''''இன்ஸ்பெக்டருக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கு. அது, முதல் ப்ளஸ் பாயின்ட். இந்த ராத்திரி நேரத்துல ஒரு பழைய குற்றவாளியை தேடிக்கிட்டு, உக்கடம் ஏரியாவுக்கு வந்திருக்கார். இது, ரெண்டாவது ப்ளஸ் பாயின்ட். ''போத்தனுார் ரயில்வே ட்ராக்கும், அதையொட்டி இருக்கிற குட்டையும் கொஞ்சம், 'ரிஸ்க்'கான இடம். பகல் நேரத்துல வண்டியில் வருவதே, 'ரிஸ்க்!' இது, மூணாவது ப்ளஸ் பாயின்ட். ''இன்ஸ்பெக்டர் தலையில் அடிபட்டுதான் இறந்து போயிருக்கார். அவரோட மரணத்துக்கு கத்திக்குத்தோ, துப்பாக்கித் தோட்டாவோ காரணமில்லை. இது, நாலாவது ப்ளஸ் பாயின்ட்.''ஒரு மரணத்துக்கு பின் இத்தனை, 'ப்ளஸ் பாயின்ட்'கள் இருக்கும் போது, கொலையாய் இருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசுக்கு வராது.''''ஒருவேளை சந்தேகம் வந்தா?'' கேள்வி கேட்ட ஜோஷை நெருங்கி, அவன் தோள் மீது கையைப் போட்டான், தருண்.''அப்படியே சந்தேகம் வந்தாலும், அந்த சந்தேகக்கணை இன்ஸ்பெக்டர் தேடிக்கிட்டு வந்த அந்த பழைய குற்றவாளி உக்கடம் துரை மேல் தான் பாயுமே தவிர, நாம இருக்கிற பக்கம் எட்டிப் பார்க்கக்கூட வாய்ப்பில்லை.''ஜோஷ் சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு, பெருமூச்சோடு, ''இன்ஸ்பெக்டர் இங்கே வருவாருன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை,'' என்றான்.''அப்படி வந்ததுக்கு காரணம் என் காரோட, 'பேன்சி' நம்பர். எனக்கு, அது அதிர்ஷ்ட நம்பர். அவருக்கு, அது அதிர்ஷ்டமற்ற நம்பர்.''''நல்லவேளையா... 'மொபைல் போன் ஜாமர் டிவைசை ஆக்டிவேட்' பண்ணி வெச்சிருந்தோம். அது, 'ஆன்'ல இருந்ததால, இன்ஸ்பெக்டரோட மொபைல்போன் வேலை செய்யலை.''முகிலா மட்டும் கதவைத் தட்டாம இருந்திருந்தா, இந்நேரம் இன்ஸ்பெக்டர் உயிரோடு வெளியே போயிருப்பார். அவளுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரத்துல நினைவு திரும்பிச்சுன்னு தெரியலை. நாளைக்கு காலையில் தான் கண் விழிப்பான்னு நினைச்சோம்,'' என்றான், இக்பால்.''இப்ப கொஞ்ச நேரமா கதவைத் தட்டற சத்தம் கேட்கலை,'' என்றான், தருண்.''ஆமா... நான் வேணும்ன்னா மேல போய்ப் பார்த்துட்டு வரட்டுமா?'' ஜோஷ் சொல்லிக் கொண்டே நகர முயன்றான்.''ஒரு நிமிஷம்,'' என்றான், தருண். ''என்ன?'' என, கேட்டான், ஜோஷ்.''முகிலாவுக்கு முழு அளவுல, நினைவு திரும்பியிருக்க வாய்ப்பில்லை. அரைகுறையான சுய உணர்வோடு தான் அவ எந்திரிச்சு வந்து கதவைத் தட்டியிருக்கணும். அதுக்கப்புறம் மறுபடியும், மயக்கமாகி இருக்கணும். நீ மேலே போய் அந்த அறையை திறந்து உள்ளே போனதும், செய்ய வேண்டிய முதல் வேலை என்ன தெரியுமா?'' ''சொல்லு.''''முகிலாவை கட்டிலோடு சேர்த்து கட்டி போட்டுட்டு, அவ வாய்க்கு ஒரு பிளாஸ்டரையும் ஒட்டணும். நாம இதை காலையிலேயே செய்து இருக்கணும். அப்படி பண்ணாததால தேவையில்லாம ஒரு கொலை.''ஜோஷ் தலையாட்டிவிட்டு மாடிப்படிகள் ஏறிப்போக, கீழே விழுந்து கிடந்த முத்துக்குமரனை நெருங்கினான், இக்பால். மண்டியிட்டு உட்கார்ந்தபடி அவரைப் புரட்டினான். ரத்தம் உறைந்த முகத்தில் நிலைத்துப் போன விழிகளோடு அந்த உயிரற்ற உடல் மல்லாந்தது.தருணை ஏறிட்டுப் பார்த்து சிரித்தவன், ''இன்ஸ்பெக்டர் ரொம்பவும், 'வீக்!' ஒரு அடிக்கே உயிரை விட்டுட்டார். சிபாரிசுல வேலைக்கு வந்தவர் போலிருக்கு,'' என்றான், இக்பால்.''சிரிக்காதே... எனக்கு பயமாயிருக்கு.''''என்ன பயம்?'' ''டிஸ்போஸ் பண்ணப் போகிற இடத்தைப் பத்தி பேசிட்டோம். ஆனா, உடலை எப்படி வெளியே கொண்டு போகப் போறோம். அதுல நிறைய, 'ரிஸ்க்' இருக்கு.''''அதைப் பத்தி யோசிக்காம இருப்பேனா... வா, ஒரு, 'பெக்' போட்டுகிட்டே பேசுவோம்,'' என்றவன், பக்கத்திலிருந்த, 'பிரிஜ்'ஜில் இருந்து, வெளிநாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்த விநாடி, அழைப்பு மணி ஒலித்தது.முகங்கள் வெகுவாய் மாறிப் போக, தருணும், இக்பாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.''இந்நேரத்துக்கு யார்?'' என்றான், தருண். ''நான் போய் பார்க்கிறேன். நீ இன்ஸ்பெக்டரோட உடலை அந்த அறைக்கு கொண்டு போயிடு,'' என, தருணிடம் சொல்லி, தயக்கமாய் நடை போட்டு கதவை நெருங்கி, கதவில் பொருத்தியிருந்த, 'லென்ஸ்' வழியாக பார்த்தான், இக்பால்.அரையிருட்டில் உயரமாய் யாரோ நிற்பது தெரிந்தது. உற்றுப் பார்த்தான். அடையாளம் தெரியவில்லை.'கதவைத் திறக்கலாமா வேண்டாமா?' என, யோசித்துக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி பொறுமையிழந்து நீளமாய் கதறியது. அதில் கோபம் தெரிந்தது. தாழ்ப்பாளை விலக்கி கதவைத் திறந்தான், இக்பால்.வாசற்படியில் அந்த நபர் நின்றிருந்தான்.கறுப்பு கோடு போட்ட நீலநிற கைலி, வெள்ளைச்சட்டை, காற்றுக்கு சிலும்பும் தலைமுடி, சிரத்தையாய் வளர்க்கப்பட்ட மீசை, 'ட்ரிம்' செய்யப்பட்ட தாடி, கழுத்தில் புரளும் தங்கச்சங்கிலி.''யார் வேணும்?'' கேட்டான், இக்பால்.அவன் வாய் நிறைய ஜர்தா பீடாவை மென்று கொண்டே, ''நான் துரையப்பன். உக்கடம் துரைன்னா எல்லாருக்கும் தெரியும்.''இக்பாலின் இதயம் உதைத்துக் கொண்டது. கலக்கத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல், ''சரி... என்ன விஷயம்?''''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உள்ளே இருக்காரா?''— தொடரும்ராஜேஷ்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !