பாதை தெரிகிறது!
புரண்டு புரண்டு இரவைக் கழித்து, லேசாக வெளிச்சம் வரப்போகும் நேரத்தில் எழுந்து விட்டாள், பானு. குழந்தைகள் நல்ல துாக்கத்தில் இருந்தனர். கணவர், சேகர் விட்ட குறட்டை, சுவரில் மோதி திரும்பிக் கொண்டிருந்தது. சமையலறையில் மென் விளக்கு எரிய, கீழே படுத்திருந்தாள், அம்மா.மெல்ல நடந்து, ஹாலுக்கு வந்தாள், பானு.வாசற்பக்க கதவைத் திறந்து, தெருக்கதவுக்கும், வீட்டுக் கதவுக்கும் நடுவில் நடந்து கொண்டிருந்தான், அண்ணன் வேணு.''நீயும் எழுந்துட்டியா அண்ணா?'' என்றபடியே படி இறங்கினாள், பானு.''ஆமாம் பானு... துாக்கம் வரல, புரண்டுட்டே இருந்தேன். ராகினியும், குழந்தைகளும் அடித்துப் போட்ட மாதிரி துாங்கிக்கிட்டு இருக்காங்க. நீ, துாங்கலையா?''''இல்ல அண்ணா... அப்பா போய், 20 நாள் ஆச்சு. காரியம் எல்லாம் முடிஞ்சாச்சு. உனக்கும் சரி, எனக்கும் சரி, ஆயிரம் வேலைகள் காத்துக்கிட்டிருக்கு. இதில் அம்மாவை எப்படி, எங்கே வைத்துக் கொள்வதுன்னு ஒரே கவலை.''''உட்காரு, எனக்கும் அதே கவலை தான், பானு.''இருள் இன்னும் அடர்த்தியாகவே இருந்தது. மழைக்காலமாதலால் மேகம் மூடிக் கொண்டிருந்தது.''முதலில் என் வீட்டைப் பத்தி சொல்லிடறேன், அண்ணா.''''சொல்லு.''''உனக்கு தெரியாதது இல்ல, நான் இருக்கிறது, மன்பூர். மும்பைக்கும் - புனேக்கும் நடுவில், மகாபலேஷ்வர் பக்கத்தில் மலைப்பிரதேசம். இவரோட, 'ப்ளான்ட்' அங்கே இருக்கிறதால, எங்களால் ஊர் மாற முடியாது.''அம்மாவுக்கும் அந்தக் குளிரை தாங்க முடியாது. நாலு ஸ்வெட்டர் போட்டாலும் எலும்பு வரை போய் தாக்கும். 'ப்ளே ஸ்கூல்' நடத்தறேன். குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, அம்மாவையும் பார்ப்பதென்பது என்னால் இயலாத காரியம் அண்ணா,'' என்றாள், பானு.தொண்டையை செருமியபடி, ''என்னத்த சொல்றது, பானு... ராகினிக்கும், அம்மாவுக்கும் செட் ஆகுமான்னு தெரியல. 'லவ் மேரேஜ்'ங்கிறதால அம்மாவோட ஒட்டாமலே இருந்துட்டா. அவளுக்கு பிடிவாதம், ஆணவம் எல்லாம் அதிகம்.''அம்மா பாவம், ரொம்ப, 'சாப்ட்!' வாரத்தில் நாலு நாள் தாய்லாந்து, வியட்நாம்ன்னு அலைஞ்சு, அசுரத்தனமா கம்பெனி வேலை பார்க்கிறேன். குழந்தைகள் என்ன படிக்கிறாங்கன்னு கூட எனக்கு சரியா தெரியாது. நாக்பூர்ல ஏர்போர்ட் பக்கத்தில் வீடு இருக்கு. அம்மாவுக்கு அந்த சத்தத்தை எல்லாம் தாங்கவே முடியாது.''''அம்மாவுக்கு சமத்து போறாது அண்ணா. அதுதான் பிரச்னை,'' என்றாள், பானு.''ஆமாம் பானு, எனக்கும் அதே கவலை தான். வயசு, 58 கூட முடியலை. அப்பாவோட வாழ்ந்த வாழ்க்கையில, ஒண்ணையும் உருப்படியா கத்துக்கல, அம்மா. வங்கி விஷயம், சிலிண்டர், 'புக்' பண்ண, ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கத் தெரியாது.''ஏன், அஞ்சாயிரம் ரூபாயை கையில் கொடுத்தால், சரியா பிரிச்சு செலவழிக்கக் கூட தெரியாது. எல்லா வேலையும் தானே செஞ்சுக்கிட்டு, ராஜாவா இருந்து பரிபாலனம் பண்ணிட்டு சடார்னு, 60 வயசுல போய் சேர்ந்துட்டார், அப்பா.''கிழிசலை தைக்கவும், கோலம் போடவும், சாதம் வடிக்கவும் தான் தெரியும் அம்மாவுக்கு. இதெல்லாம் தான் கவலையா இருக்கு,'' என்றான், வேணு.''ம்... ஒவ்வொரு அம்மாவும் என்ன சூட்டிகையா இருக்கா. அப்பாங்கிறவர் பேருக்கு தான்; அம்மா தான் எல்லாம். குழந்தைகளை பாட்டு கிளாஸ் சேக்கிறது, கராத்தே கத்துக்க வைக்கிறது, நகை சீட்டு கட்டி, நகை வாங்கறது...''ஸ்கூல், காலேஜ்னு பார்த்து பார்த்து சேர்க்கறது... குழந்தைகளோட நண்பர்கள் வந்தால், அன்பா சிரிச்சு பேசி, புலாவ், கிரேவின்னு கொடுக்கறது... ஏன் வேணு, நம் அம்மா மட்டும் அப்படில்லாம் இல்லை. தனக்கு என்ன தெரியுமோ அதை மட்டுமே பண்ணுவேன்னே இருந்துட்டா. அம்மாவை இப்ப என்ன பண்ணறது?''''பானு... நீயும், நானும் தான் இதில் முடிவு எடுக்கணும். கூட அழைச்சுக்கிட்டுப் போய், நம் வீட்டில் வைத்துக் கொள்ள வழி இல்லை. இதே வீட்டில் விடலாம்னா, அம்மாவுக்கு இவ்வளவு பெரிய வீட்டை தனியா நிர்வாகம் பண்ண தெரியாது. நம்புற அளவுக்கு இதமா கூடவே இருக்கிற சொந்தங்களும் இல்லை. நீ என்ன நினைக்கிறே பானு, சொல்லு?'' என்றான், வேணு.''அண்ணா... அது வந்து...''''பரவாயில்ல சொல்லு... உன், 'ஐடியா' என்ன?''''இந்த வீட்டை வாடகைக்கு விட்டால், 10 ஆயிரம் வரும். அம்மாவை, 'ஓல்ட் ஏஜ்' இல்லத்தில் விட்டால், பாதுகாப்பு, கவனிப்பு ரெண்டும் கிடைக்கும். 10 ஆயிரம் கொடுத்தால் போதும். ஏற்கனவே நான் ரெண்டு இடத்துல பார்த்து வெச்சிருக்கேன். நீ சொல்லு அண்ணா,'' என்றாள், பானு.''சூப்பர்... நானும் இதையே தான் நினைச்சேன். எப்படியும் அம்மாவை தனியா விட முடியாது. அப்பா சேர்த்து வெச்சது ஒண்ணும் பெரிசா இல்லை. சோ, இந்த வீட்டை வாடகைக்கு விடறது தான், 'சோர்ஸ் ஆப் இன்கம்...' அப்படியே பண்ணிடலாம் பானு,'' என்றான், வேணு.கையில் வாளி தண்ணீருடன் வாசல் தெளிக்க வந்தாள், அம்மா.''வாம்மா, நல்லா துாங்கினியா. வர்றவங்களும், போறவங்களுமா, ரெண்டு வாரமா உனக்கு, 'டைட்'டான வேலை. அதைக் கொடு, பானு வாசல் தெளிப்பாள்,'' என்றபடியே அம்மாவிடம் வந்தான், வேணு.''ஆமாம்மா, அதை என்னிடம் கொடு. இன்னிக்கு உனக்கு, 'ரெஸ்ட்!' நானும், ராகினியும் சமைக்கிறோம்.''இருவரையும் மாறி மாறி பார்த்தாள், அம்மா.''அதெல்லாம் இருக்கட்டும், இன்னிக்கு அப்பாவோட பிறந்த நாள். நானே என் கையால் அப்பாவுக்கு பிடிச்சதை சமைக்கிறேன். அப்புறம், 10:00 மணிக்கு நாம எல்லாரும் வெளியில் போறோம். இங்கே தான் கிழக்கு கோபுரம் பக்கத்தில், ஒரு சின்ன விசேஷம். எல்லாரும் ரெடியா இருங்க,'' என்றாள், அம்மா.என்ன சொல்கிறாள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கச்சிதமாக வாசலில் வந்து நின்றன, இரண்டு வாடகை கார்கள்.''நான் தான், 'புக்' பண்ணினேன்; எல்லாரும் ஏறுங்க கண்ணுகளா...'' என்றாள், அம்மா.அப்பாவுக்கு பிடித்த இளம் ஆரஞ்சு வண்ண புடவை, பச்சை ரவிக்கை, சிறு பொட்டு, இள முறுவல், அம்மாவை புது மனுஷியாகக் காட்டியது.''என்னம்மா இது, எங்கே போறோம்?'' புருவங்களை சுருக்கினாள், பானு.'வேலை நிறைய இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல நாங்க கிளம்பணும்...' என்றனர், வேணுவும், ராகினியும்.அம்மாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டனர், குழந்தைகள்.''இன்னும் அஞ்சு நிமிடத்தில் போய் விடலாம் கண்ணுகளா... தம்பி, 'அட்ரஸ்' தெரியும்ல்ல?'' என்றபடியே காரில் ஏறினாள்.குழம்பிப் போயினர். அம்மாவின் முகத்தில் மாற்றம். வழக்கமான குழப்பம், தடுமாற்றம் எதுவும் இல்லை. விழிகளில் தெளிவான பார்வை. குரலில் மென்மையான கம்பீரம். பேச்சில் அளவும், ஆழமும். அம்மா சொன்ன முகவரிக்கு இரண்டு கார்களும் வந்து சேர்ந்தன.''சரி, டிரைவர் தம்பிகளா, போக வர, 'புக்' பண்ணியிருக்கேன். எப்படியும் இரண்டு மணி நேரமாகும். காத்திருங்க,'' என்றபடியே இறங்கினாள், அம்மா.'என்ன நடக்கிறது... உடைந்து போய் துவண்டு விடுவாள் என்று நினைத்த அம்மாவா இது? அப்பாவின் மரணத்தை எதிர்கொள்ளவே முடியாதவள் என்று நினைத்தோமே...' என, யோசித்தனர், பானுவும், வேணுவும்.சந்தன நிற பெயின்ட், பச்சைக் கதவுகள், மூன்று பெரிய அறைகள், அது ஒரு சிமிழ் போன்ற வீடு. சுற்றிலும், தென்னை, வாழை மரங்கள். வெளியே சின்னஞ்சிறு போர்டு, 'அகிலா தையல் அணியகம்' ரோஜா மாலை அணிந்து வரவேற்றது.உள்ளே இருந்த நான்கு பெண்களும், 'வாங்க வாங்க... செருப்பை அப்படி ஓரமா கழட்டி போட்டுட்டு உள்ளே வாங்க...' என்றனர்.அங்கிருந்த தையல் இயந்திரங்களுடன், அவர்களின் கைகளும், கால்களும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தன. முகம் அமைதியும், முறுவலுமாக இருந்தது.அம்மாவைப் பார்த்ததும், அந்தப் பெண்களின் விழிகளில் மரியாதையும், அன்பும் பளீரென தெரிவதை, அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.''என்னம்மா இது, தையல் கடையா? எப்படி திடீர்னு, இவங்க வேலை செய்கிறவர்களா... உன் பெயரில் கடையா?'' என்றாள், பானு.பானுவுக்கும், வேணுவுக்கும் ஒன்றும் புரியவில்லை.''ஆமாம் கண்ணுகளா... அப்பாவுக்கு ஒரு வருஷமாவே மனதில், தான் சீக்கிரமே போய் விடுவோம் என்று தோன்றி விட்டது. என்னை முறையாக தையல் வகுப்பு சேர்த்து கற்றுக் கொள்ள வைத்தார்.''தன் ஓய்வு பணத்தில், இந்த அரை கிரவுண்ட் வீடு வாங்கி, தையல் மிஷின்கள் வாங்கிப் போட்டார். உழைத்து வாழ்கிற பெண்களைத் தேடி, இங்கே வேலை கொடுத்தார். அவர் பணம் எல்லாம் கரைந்தது. ஆனால், இந்த கடை அபாரமாக வளர்ந்தது. அவ்வளவு வேலைகள், ஆர்டர்கள்.''நான் தினமும் வருவேன். எப்படி பணத்தைக் கையாள்வது, எப்படி சுய தொழில் செய்யும் பெண்களுக்கான கடன் வாங்குவது, தவணையை வங்கியில் எப்படி கட்டுவது என்று எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார், அப்பா.''அதுமட்டுமல்ல, 'அகிலா, எனக்கு பிறகு உன்னை, இந்த தையல் கடை மதிப்புடன் பார்த்துக் கொள்ளும். உன் காலில் உன்னை நிற்க வைக்கும். நாலு பேரை நீ வாழ வைப்பாய்...' என்று, தினம் சொல்லிச் சொல்லி, என் மனதில் வலிமையை உண்டாக்கினார், மனித தெய்வமான அப்பா.''அவர் எங்கேயும் போய் விடவில்லை கண்ணுகளா. இந்த வீட்டில், இயந்திரங்களில், இந்த பெண்களின் நன்றியில், என் மன நிறைவில் அப்பா எப்போதும் வாழ்வார். உங்களுக்கு, உங்கள் உலகில் ஆயிரம் வேலைகள் இருக்கும். சிறப்பாக அதை செய்யுங்கள்,'' என்றாள், அம்மா.அனைவரும் விக்கித்து நின்றனர். வி. உஷா