மண்ணும் ஒரு தாய்!
நம்பியாண்டார் கோவில்.ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத, அந்த தனியார் கோவிலின் தற்போதைய நிர்வாகியாக இருப்பவர், திருமேனி சேர்வை. பரம்பரை பரம்பரையாக இவரது முன்னோர்கள் அக்கோவிலை கட்டிக் காத்து வந்திருக்கின்றனர்.கோவிலுக்கென்று உண்டியல் கூட கிடையாது. ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து, ஆண்டுக்கு ஒருமுறை, அருள்மிகு நம்பியாண்டாருக்கு, ஆனி மாதத்தில், திருவிழா எடுப்பர். பிழைப்புக்காக அவ்வூரை விட்டு வெளியூர்களுக்கு சென்று வேலை பார்க்கும் குடும்பத்தாரும், திருவிழா சமயத்தில் ஒன்று கூடி விடுவர்.திருமேனி சேர்வையின் வீடு, கோவிலின் சன்னிதித் தெருவில் அமைந்துள்ளது. அந்தத் தெருவில் வசிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது, கோவிலைப் பார்த்து கும்பிட்ட பிறகு தான் மேற்கொண்டு நடப்பர். இப்போதும் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. காலை, 10:00 மணி-'இறை வாசம்' எனும் பெயரைத் தாங்கி, பழங்கால அரண்மனை போன்ற அந்த வீட்டின் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார், திருமேனி சேர்வை.''ஐயா, உங்களைப் பார்க்க, இரண்டு பேர் வந்திருக்காங்க,'' என்றான், பணியாள்.''இதோ வர்றேன்,'' என்று துண்டை எடுத்து தோளில் போட்டபடி, வீட்டின் முன் பக்கம் சென்றார், சேர்வை. கோவில் நிர்வாகி மட்டுமல்லாது, அறிவிக்கப்படாத ஒரு நாட்டாமை போல, அந்தக் கிராமத்தில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பது, அந்த வீட்டைப் பார்த்தே சொல்லிவிட முடியும்.அவர் வீட்டுக்கு முன்புறம் பெரிய பந்தல், உயரமான அகன்ற திண்ணையில் நாலு பேர் தாராளமாக உட்காரும் அளவுக்கு நீளவாட்டில் சாய்மானம் உள்ள அந்தக் காலத்து பர்மா தேக்கு மரப்பெஞ்சு ஒன்று போடப்பட்டிருந்தது. அவர் உட்காருவதற்கென்று தனியே ஒரு தடித்த நாற்காலி. காலையில் சாணம் தெளித்து பளிச்செனக் கோலமிடப்பட்டிருக்கும் அந்த வாசலில், ஒரு தெய்வீக சுகானுபவமும் கிட்டும். கடும் கோடை காலத்திலும், இதமான குளிர்ச்சி அங்கே தென்படுவதை உணர முடியும். திண்ணையில் இருந்த, தன் நாற்காலியில் அமர்ந்தார், சேர்வை. 30 --- 35 வயதுக்குள்ளிருக்கும் அந்த இரண்டு இளைஞர்களும், பெரியவர் வருவதை பார்த்து, பெஞ்சிலிருந்து எழுந்து, வணக்கம் கூறினர். ''இருக்கட்டும் இருக்கட்டும். நீங்க, மாயாண்டியின் பிள்ளைகள் தானே?'' என்று கேட்டார், சேர்வை. ''ஆமாங்கய்யா. நான் அழகேசன், இவன் என் தம்பி, முத்துராஜன்...'' என்று கூறி, சற்று நெருங்கி, அவர் பாதங்களைத் தொட்டும் தொடாமலும், குனிந்து வணங்கி, கை கட்டி நின்றனர். ''மரியாதை மனசில் இருந்தால் போதுமப்பா. இதெல்லாம் எதுக்கு?'' என்று அன்போடு மறுத்தவர், ''மாயாண்டியின் காரியமெல்லாம் நல்லபடியா முடிச்சுட்டிங்க. மேற்கொண்டு என்ன செய்யப் போறீங்க?'' என்று, விசாரித்தார். ''அதைப்பற்றித் தான் ஐயாவோட கலந்து பேச வந்திருக்கோம். அப்பா இருந்த வரைக்கும், எங்களை டவுனுக்கு அனுப்பி, நல்லா படிக்க வச்சார். தாயில்லாக் குறை தெரியாமல், எங்களை வளர்த்தார்.''இப்ப இருக்கிறது, எங்க பரம்பரை வீடு மட்டுமில்லை; 10 ஏக்கர் நிலத்தையும் வச்சுட்டுப் போயிருக்கிறார். அந்த, 10 ஏக்கர் நிலம் இப்போ சும்மா களர் நிலமா கிடக்குது. அதனால...''''அதனால, அதை வித்துட்டு...'' என்ற சேர்வை, தன் முகத்தை துண்டால் துடைத்துக் கொண்டதைப் பார்த்த அந்த இரண்டு இளைஞர்களும், 'ஐயாவுக்கு நம் மீது என்ன கோபம்?' என்பது போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ''சென்னைக்குப் போய் அங்கே கட்டுமான வேலைக்கு தேவையான இரும்புக் கம்பிகள் வாங்கி வியாபாரம் செய்யலாம்ன்னு இருக்கோம். ஐயா, அப்பாவோட நிலத்தை விற்று, அதில் முதலீடு செய்யணும். இரும்பு வீணாப் போகாது; 'டிமான்ட்' ஜாஸ்தி. 20 பேருக்கு, வேலை வாய்ப்பும் தரலாம்.''''அந்த மாதிரி ஒரு முயற்சியை இந்த ஊரிலேயே செய்ய முடியாதா? ஆளாளுக்கு சென்னைக்கு கிளம்பிப் போயி, அந்த ஊரை நாறடிச்சுட்டீங்க. இன்னமும் அங்கேயே போகத் துடிக்கறீங்க.''எல்லாரும் பொறப்பட்டு போயாச்சுன்னா... அப்புறம் இந்த காடு, கழனி, உங்களைப் பெத்து, வளர்த்த இந்த கிராமம். உங்க உறவு, ஊரு, சனம் இதைப் பத்தி யாரும் நெனச்சுக் கூடப் பார்க்க மாட்டீங்களோ?'' மவுனமாக நின்றிருந்தனர், சகோதரர்கள்.''உங்கப்பன் மாயாண்டி, அப்படி நெனக்கலியே. உங்கம்மா செத்த பிறகும் இங்கத் தானே வாழ்ந்தான். உங்களைப் படிக்க வச்சான். நீங்களும் கெட்டுப் போயிடலையே?'' ''ஐயா, இந்த ஊர்ல இரும்பு வியாபாரம் செய்ய முடியாதுங்களே,'' என்றான், அழகேசன். ''இரும்பு இல்லன்னா, கரும்பு. நம் ஊரிலேயே விவசாயம் பார்க்கலாமே என்கிறேன். பெரிய படிப்பு படிச்சுட்டு, சென்னையில் வேலை பார்த்த எவ்வளவோ பேர், இப்ப விவசாயம் செய்ய திரும்பிக் கொண்டிருக்கின்றனர், தெரியுமா?'' ''இங்க தான் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லையே, ஐயா. நாத்து நடும் பெண்கள் கூட, 100 நாள் வேலைக்கு போய் மரத்தடியில் உட்கார்ந்து, பொழுது போக்குறாங்க. கேட்டால், அரசாங்க உத்தியோகம் என்கின்றனர்,'' என்றான், முத்துராஜன். ''உண்மைதான் தம்பி. இதையெல்லாம் சரி செய்யணுமா, வேண்டாமா? ஒரு யோசனை சொல்றேன் கேளுங்க. பிடிச்சிருந்தா செய்யலாம். பிடிக்கலைன்னா உங்க இஷ்டம்,'' என்றார் திருமேனி சேர்வை. 'சொல்லுங்க ஐயா!' என்றனர்.''நம் ஊர் கடவுள் நம்பியாண்டார் பெயரிலே ஆரம்பிப்போம். கடவுள் பேர் வேண்டாம் என்றால், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில், ஒரு கூட்டு முயற்சி செய்து பார்க்கலாம்.''அதாவது, கூட்டாக விவசாயம் பண்ணலாம்ன்னு சொல்றேன். அதுக்கு வேண்டியது நல்ல நிலம், போதுமான நிதி வசதி மற்றும் உழைப்பு. என் நிலமே, 50 ஏக்கரா தேறும். உங்க நிலம், 10 ஏக்கர்.''நம்மைப் போல விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அனைத்து நிலங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். யார் எவ்வளவு நிலம் கொடுக்கின்றனரோ, அந்த நிலத்தின் அளவும், உரிமையாளர் பெயரும், அந்தந்த நிலத்தின் பட்டாவும், அவரவர் பெயரிலேயே இருக்க வேண்டும்.''இப்படி ஒரு, 10 பேர் சேர்ந்தாலும் போதும். பணச் செலவு முழுதும் என்னுடையது. ஒன்றுபட்ட அந்த நிலத்தில் நாம், 10 பேருமே பாடுபட வேண்டும். நிலம், உழைப்பு எல்லாமே நம்முடையது.''எந்த பொருள் விளைந்து வருகிறதோ, அதை விற்று வரும் பணத்தில், அவரவர் முதலீட்டுக்கு தக்க வகையில் பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். ''முக்கியமான இன்னொன்று, நம்முடைய விளைபொருளுக்கு நாமே தான் விலை வைக்கணும். எந்த இடைத்தரகரும், அரசியல்வாதியும், உள்ளே நுழைந்து விடக்கூடாது. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான்,'' என்று முடித்தார், திருமேனி சேர்வை. அங்கே, கனத்த அமைதி நிலவியது. ''அரசியல்வாதிங்க உள்ள வரக்கூடாதுன்னு சொல்றீங்க. நிலத்துக்கு தண்ணீர் வேணுமே? நம்மூர் வாய்க்காலை அவர்கள் திறந்தால் தான் ஆச்சு. அப்புறம் புயல், காற்று போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால், அரசாங்கம் தரும் நஷ்டஈடு கிடைக்காமல் போயிடுமே?'' என்றான், அழகேசன். ''தம்பிகளா, பூமிக்கு அடியில இருக்குதே, நிலத்தடி நீர். அது நமக்குச் சொந்தமானதில்ல. நம் பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கன்னு அடுத்த தலைமுறைக்கு பூமித்தாய் சேர்த்து வைத்திருக்கும் சொத்து.''அதைத் தொடக்கூட நமக்கு உரிமை இல்லை. ஆறு, வாய்க்கால் இவற்றில் வருகிற நீர், மக்களின் குடி தண்ணீருக்கானது. ஒரு விவசாயி, மழை நீரை மட்டுமே நம்பி, தன் தொழிலை செய்தாக வேண்டும்.'' ''மழை எங்கய்யா பெய்யுது?''''வருஷத்தில ஒன்றிரண்டு தடவையாவது பெய்யுதா இல்லையா? நாம் அதை முறையாக சேமிப்பதில்லை. வீணாகக் கடலில் விட்டு விடுகிறோம். ஒரு தடுப்பணை கூட கிடையாது. ''முதலில் நாம் செய்ய வேண்டியது, நம் நிலத்திலேயே மழை நீரை சேமிக்கும் அளவுக்கு ஒரு குளம் வெட்ட வேண்டும். விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை அதிலிருந்து தான் எடுக்க வேண்டும். அப்புறம் என்ன சொன்ன, இயற்கை சீற்றமா?''அதுபோன்ற சமயத்தில், நம் நிலத்தை நாம தான் பாதுகாக்க வேண்டும். அரசாங்கம் தேடி வந்து நஷ்டஈடு தரட்டும்ன்னு காத்திருக்க கூடாது. பயிர் பாதுகாப்பு, 'இன்சூரன்ஸ்' நம் செலவில் செய்து கொள்ள வேண்டும். புயல் போன்ற சமயங்களில், 'இன்சூரன்ஸ்' கம்பெனி உடனடியாக உதவிக்கு வரும்.''இப்ப நீங்க செய்ய வேண்டியது, ஊருக்குள்ள போயி, உழைப்பதற்கு தயாராகவுள்ள, 10 இளைஞர்களை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவது தான். அடுத்த வேலை, குளம் வெட்டுவது. களர் நிலமாக இருக்கும் உங்கள் நிலத்தையும், என் நிலத்தையும் கீறி விளை நிலமாக மாற்றுவது, மூன்றாவது வேலை. என்ன முடியுமா?'' என்றார். ''ஐயா, ஒரு சந்தேகம். நெல்லோ, வேறெந்த பணப் பயிரோ, அதிக விளைச்சல் ஆகி சந்தையில் சரியாக, 'மார்க்கெட்டிங்' ஆகாத பட்சத்தில், அந்த அதிகப்படி விளைச்சலை என்ன செய்வதய்யா?'' என்று கேட்டான், முத்துராஜன். ''நெல் அதிகம் விளைந்து விட்டால், அதை அரிசி மாவு பாக்கெட்டாக மாற்றலாம். கோதுமையும் அப்படித்தான். மாவாக்கி பாக்கெட் போடலாம். தக்காளி, அமோக விளைச்சல் என்றால் அதை 'ஜாம், கெச்சப்' என, 'இம்ப்ரூவ்' செய்து பாட்டில்களில் அடைத்து, விற்கலாம். ''எப்பவும் உருமாற்றம் செய்யப்பட்ட விளைபொருளுக்கு லாபம் அதிகம் தம்பி. அவற்றுக்கான ஆலைகளை போகப் போக நாமே திறக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், நமக்கு சேர வேண்டிய பங்குத் தொகையை வங்கிக் கணக்கு மூலமாக, 'பைசல்' செய்ய வேண்டும்.''வங்கியில் நமக்கென்று தனியாக ஒரு கணக்கிருந்தால் அது பிற்காலத்தில் அரவை ஆலை, பதப்படுத்தும் தொழிற்சாலை, பாட்டிலிங் போன்றவை துவங்க உதவியாயிருக்கும். என்ன சொல்றீங்க?''இந்தியாவின் எதிர்காலமே உங்களைப் போன்ற இளைஞர்களின் கையில் தான் இருக்கிறதப்பா,'' என்று முடித்தார், திருமேனி சேர்வை. 'எங்களுக்கு முழு சம்மதம். எப்படி ஐயா, இவ்வளவு விவரம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கீங்க?' என்று, கேட்டனர். ''நானா எதுவும் சொல்லவில்லை பிள்ளைகளா... இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்னதைத்தான் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கேன். நான் சொல்றதுக்கு ஒண்ணு இருக்கு.''நீங்க சொன்னீங்களே, அப்பாவோட நிலத்தை விற்று தான் புதிய தொழிலில் முதலீடு செய்யணும்ன்னு. அப்படி ஒரு கட்டாயம் வரவே கூடாதய்யா. பூமித் தாயும், பெற்றத்தாய் போலத்தான். உங்களை ஒரு நாளும் கைவிட மாட்டா. பொன்னு விளைகிற பூமியப்பா இது. இதை விற்று விடலாம் என்று நினைக்காதீங்க,'' என்றார்.அந்த இரண்டு இளைஞர்களும், திருமேனி ஐயாவின் உருவத்தில், தங்களது தந்தை மாயாண்டியை கண்டு வணங்கினர். அ. கங்காதரன்வயது: 77படிப்பு: பி.யூ.சி.,சொந்த ஊர்: புதுச்சேரி,பணி: புதுச்சேரி அரசு துறை நிறுவனம் ஒன்றில், கண்காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்இதுவரை நிறைய கவிதைகள் எழுதி, பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக் கரு பிறந்த விதம்: இளைஞர்களின் கவனத்தை, விவசாயத்தின் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணமே, இக்கதை எழுத துாண்டியது.