உலகம் சுற்றும் வாலிபன் (12)
ஒரு நாள் இரவு, விடுதிக்கு திரும்பிய போது, டாக்சி டிரைவரிடம், நாங்கள் தங்கியிருந்த முகவரியைச் சொல்லும் போது, விடுதியின் எண்ணைச் சரியாகச் சொல்லவில்லை. டிரைவர், எங்கோ உள்ள கட்டடத்திற்குக் காரை ஓட்டிச் சென்றார். பின் சீட்டில் பெண்கள் மூவரும், முன்னால் நானும், முத்துவும் அமர்ந்திருந்தோம்.டிரைவர் சுற்றிச் சுற்றி வந்தார்; விடுதியை அடைய முடியவில்லை. அந்த விடுதியில், நாங்கள் சென்ற காரை பார்த்த, ஒரு போலீஸ்காரர், நாங்கள், அந்த பக்கமே திரும்பத் திரும்பச் சுற்றி கொண்டிருப்பதை பார்த்து, விசில் அடித்து, காரை நிறுத்தச் செய்தார். டாக்சியின் அருகில் வந்த போலீஸ்காரர், டிரைவரிடம் விசாரித்தார். நாங்கள் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், முகவரி தெரியாமல் சுற்றுவதாகவும் சொன்னார் டிரைவர். போலீஸ்காரர், 'முகவரி தெரியவில்லையானால், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு விசாரித்தப்பின், குறிப்பிட்டஇடத்தில் சேர்க்க வேண்டியது தானே! அதை விட்டு நடு இரவில் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி...' என்று, கண்டித்தார்.எங்களிடமும் விசாரித்து, அவரே யோசித்து, குறிப்பிட்ட விடுதி, எந்தக் கட்டடங்களுக்கிடையில் இருக்கிறது என்பதை வரைபடம் (மேப்) மூலம் பார்த்து, டிரைவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். டிரைவர், போலீஸ்காரரிடம் காண்பித்த மரியாதையும், போலீஸ்காரரின் கடமைச் செயலும் என் மனதில், நீக்க முடியாத தாக நிலை பெற்றுவிட்டன.'இவன் யார் சொல்ல, நான் என்ன கேட்க' என்று, ஒவ்வொரு மனிதனும் நினைத்து விட்டானாயின், உலகமே குழப்பம் நிறைந்த, ஒரு போட்டிச் சந்தையாகவே முடிந்து விடும். தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து, மற்றவர்களின் தகுதியையும், நியாய உணர்வோடு மதித்துச் செயல்படுகிறவர்களுக்கிடையில், யார் உயர்வு, யார் தாழ்வு என்ற வேறுபாட்டுணர்ச்சியே தோன்றாது. இந்த நேர்மையான பக்குவம் கொண்ட வழியில்தான், என்னோடு வந்த ஒவ்வொருவரும் நடந்து கொண்டனர். எக்ஸ்போவில் மினி ரயில் உண்டு; அது, 4 கி.மீ., வேகத்தில், மேல் நோக்கி போகும். இவ்வளவு மெல்லச் செல்லும் ரயில், திடீரென கீழ் நோக்கி படுவேகமாக, 60 - 70கி.மீ., வேகத்தில் தலை தெறிக்க ஓடும். இந்த வேகத்தில் போகும் போதே, பக்கவாட்டில் திரும்பும். வேகமாய் போகிற மோட்டார் சைக்கிள், எப்படி ஒரு பக்கம் சாய்ந்தாவாறே திரும்புமோ, அது போலிருக்கும் இந்த ரயில் செல்வது.இதை மரண ரயில் என்று கூட அழைக்கலாம். குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள், இதில் ஏறக்கூடாது. அதாவது, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்காரக் கூடாது. அதிர்ச்சியால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதுதான், அதற்குக் காரணம். ஆனால், நாங்கள் அதில் போக விரும்பினோம்.அந்த வண்டியின் முன் பக்கத்தில் பிடித்துக் கொள்ள, ஒரு இரும்புக் குழாய் வைக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்படும் போதும், இறங்கும் போதும், இடுப்பில் பெல்ட் கட்டிக் கொள்வது போல் கட்டிக் கொண்டோம்.என் இடது பக்கத்தில் சந்திரகலாவும், பின்னால் நாகேஷும், அவருக்கு பின், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தியும், உதவியாளர் ராமகிருஷ்ணனும் அமர்ந்தோம்.நான் எல்லாரிடமும் கேட்டேன், 'பயப்பட மாட்டீர்களே...' என்று; 'பயப்பட மாட்டோம்' என்ற பதில் துணிவோடு கிடைத்தது. வண்டி மெல்ல அசை போட்டு, மேல் நோக்கிச் சென்றது. மேலே சென்றதும், கீழ் நோக்கி படுவேகமாக ஓடத் துவங்கியது. அவ்வளவுதான்... ஆங்கில படங்களில் பெண்கள் அலறுவது போல், பயங்கரமாக கத்தினார் சந்திரகலா.இரு கைகளாலும் பிடித்திருந்த இரும்புக் குழாயை விட்டு விட்டு, தன் நெஞ்சை, இரு கைகளாலும் அழுத்தி, அப்படியே என் தோள் மீது சாய்ந்து விட்டார். நானோ, என் இரு கைகளாலும் இரும்புக் குழாயைப் பிடித்திருந்தேன். இடது கையால், உடனே அவரைப் பிடித்துக் கொள்ளவும் முடியாது. 'பயப்படாதே பயப்படாதே...' என்று கத்தினேன். அதோடு என் இடது கையை எடுத்து, அவரைச் சுற்றிப் பிடித்து கொண்டேன். அந்த சில வினாடிகளில் சந்திரகலா, அவருக்கு இடது பக்கத்தில் சாய்ந்திருப்பாரானால், என்னால் ஏதும் செய்திருக்க இயலாது.அன்று சந்திரகலாவுக்கு, ஏதாவது ஆபத்து நேர்ந்திருப்பின், நான், என் வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல, அவர்களது குடும்பம் உள்ள வரை, நான் மறைந்த பின்பும் தூற்றப்படுவேன். எந்த உறவினரும், பாதுகாப்பாளருமின்றி, என்னையே நம்பி அனுப்பி வைக்கப்பட்ட, அவருக்கு விபத்து ஏற்படுமாயின், நான் எந்த முகத்தோடு, தமிழகம் திரும்புவது!ஒளிப்பதிவு உதவியாளர் ராமகிருஷ்ணன், ராமமூர்த்தியைப் பிடித்துக் கொள்ள, ராமமூர்த்தி கேமராவைப் பிடித்துக் கொள்ள, கேமரா எங்களைப் படம் பிடித்தது. கொஞ்ச தூரம் வரை, என்னையும், சந்திரகலாவையும் பின் நாகேஷையும், இப்படி படமாக்கினார். அவருடைய துணிச்சலைப் பாராட்டியே தீர வேண்டும்.நாங்கள் ரயிலில் இருந்து இறங்கிய பின், அதுவும், சந்திரகலா தனக்கு ஒன்றுமில்லை என்று சொன்ன பின்தான், எனக்கு மூச்சே வந்தது. இதற்கு பின், எங்களுக்கு ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு, இது ஒரு முன்னோடியாக இருந்து, எங்களை தயார் செய்தது போலும்!மேலே கம்பியில் செல்லும் கூண்டுக் குள்ளிருந்து படம் எடுக்க விரும்பினேன். அது சரிவர அமையுமா என்ற சந்தேகம், ஒளிப்பதிவாளருக்கு எழுந்தது. ஏனெனில், கூண்டைச் சுற்றி இருந்தது, வலுவான கண்ணாடியா, பிளாஸ்டிக்கா என்று தெரியவில்லை. ஆனால், கனமாகவும் வளைந்தும் இருந்த தால், படம் எடுத்தால், தெளிவாகத் தெரியாமல் போய் விடுமோ என்று, சந்தேகப்பட்டார் ராமமூர்த்தி.இப்படி, எத்தனையோ சந்தேகக் கேள்விகளுக் கிடையில், பல கோணங்களில் படமாக்கினோம். அங்கிருந்த காட்சிகளை, வளைந்த கண்ணாடிகளால் ஆன, வளைவுகளை கொண்ட பாதையில், படமெடுக்க விரும்பினேன். விளக்கின் ஒளி, எங்கள் மீது மட்டுந்தான் பட வேண்டும். அதைப் படமாக்க இயலாதென்று, பலரால் முன்னதாகவே முடிவெடுக்கப்பட்டிருந்தும், நான் விடவில்லை. முயன்று பார்ப்போமே என்று சொல்லி எடுக்கச் சொன்னேன். பலன் நூற்றுக்கு நூறு வெற்றி.நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, நானும், சந்திரகலாவும் உடை மாற்றி, மீண்டும் எக்ஸ்போவுக்குள் நுழைந்தோம். வழக்கமாகச் செல்லும் வாயிற்படியை விடுத்து, வேறு வாயிற்படி அருகில், எங்களை இறக்கிவிட்டுச் சென்று விட்டார் கார் ஓட்டி. நாங்கள் உள்ளே சென்ற பின்தான் புரிந்தது, வழிமாறி நுழைந்து விட்டோம் என்று. ஏறத்தாழ, ஒரு மணி நேரம் நடந்திருப்போம். கண்ணுக்கு, படப்பிடிப்பு நடக்கும் இடம் தெரியும். அதை நோக்கி சென்றால், இடையில் பல திருப்பங்கள், எங்களிருவரையும் வேறிடத்துக்கு வழிகாட்டி ஏமாற்றி விடும். இவ்வாறு, சுற்றிச் சுற்றி திரிந்த போது, அன்று வரையில், நான் காணாத பல புதிய இடங்களைப் பார்த்தேன். கடைசியில், நான் பாடவேண்டிய பாட்டை போட்டனர். அந்த சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தோம். சரியான நேரத்தில் போய் சேர்ந்தோம்.தரையிலிருந்து, ஒரு பெரிய தூணுக்கு மேலே பரந்து விரிந்த, முப்பதாயிரம் பல்புகள் கொண்ட அழகிய மேடையை அமைத்திருந்தனர். இதற்கு, 'ஸ்விஸ் - பெவிலியன்' என்று, பெயர். சுவிட்சர்லாந்து நாட்டின் கலைக்கூடம் இது. இருபதடி உயரத்தில், இருந்தது. அதற்கடியில், நானும் சந்திரகலாவும் பாடி ஆடுவதைப் போலவும், மக்கள் எங்களைச் சுற்றி வேடிக்கை பார்ப்பது போலவும், அந்தக் காட்சியைப் படமாக்க வேண்டி இருந்தது. மக்களின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைத்ததால், நினைத்தவாறு படமெடுக்க முடிந்தது.இது போன்ற பல காட்சிகளை, எதிர்பார்த்ததற்கும் மேலாக எடுத்தேன். ஆங்காங்கே, அவ்வப்போது ஏற்பட்ட இடைஞ்சல்களை விட, உதவியும், ஒத்துழைப்பும் தான் அதிகமாயிருந்தது. எல்லாவற்றையும் விட, கலைஞர்கள் அனைவரும் தந்த ஒத்துழைப்பு மிக மிக அதிகம்.எல்லா வகையிலும், ஒருவருக்கொருவர் பாசப்பிணைப்போடு, இணைந்து விட்டதால் துன்பம், தொல்லை மற்றும் வசதியின்மை போன்ற அனைத்துக் கஷ்டங்களும், எங்களுக்குப் பெரிதாக படவில்லை.பன்னிரண்டாம் தேதியோடு, எக்ஸ்போவில் படப்பிடிப்பை முடித்து, 'நாரா' என்ற ஊருக்கு காரிலேயே புறப்பட்டு சென்று, நடு இரவுக்குப் பின், அந்நகரை அடைந்தோம். அங்கு...— தொடரும்.தொகுப்பு: வைரஜாதன்,நன்றி 'பொம்மை'விஜயா பப்ளிகேஷன்ஸ்,சென்னை.- எம்.ஜி.ஆர்.,