உடையால் இழந்த மரியாதை!
என் உறவினர் மகன், பொறியியல் படிக்கிறான். சமீபத் தில், ஸ்காலர்ஷிப்புக்காக வங்கிக்கு சென்றிருக்கிறான். மேனேஜர் அவனை கூப்பிட்டு, விசாரித்திருக் கிறார். படிப்பு, மதிப் பெண் எல்லாவற்றையும் கேட்ட பின், 'சரி, நாளை வா...' என்றிருக்கிறார்.ஆனால், அவனோ, அவர் வரச் சொன்ன தினத்தில் செல்லாமல், அதற்கு அடுத்த நாள் சென்றிருக்கிறான். மேனேஜர் தன் கேபினில் இருந்து அவனைப் பார்த்தவர், வங்கி ஊழியரிடம், 'மேனேஜர் இன்று பிசியாக இருக்கிறார். அதனால், நாளைக்கு வரச்சொல்லி அனுப்புங்கள்...' என்று கூறியிருக்கிறார்.இவனும் அடுத்த நாள் சென்று, அவரை சந்தித்த போது, அவர் சொன்னது வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்திருக்கிறது... 'தம்பி... நான் கல்வி சம்பந்தப்பட்ட கடன் சமாசாரங்களை, உடனே தந்து விடுவேன். ஆனால், உன் விஷயத்தில், நான் இழுத்தடித்ததற்கு, நீ அணிந்திருக்கும் உடை தான் காரணம். நீ ஒரு பொறியியல் மாணவன். எப்படி ஒழுங்காக உடை அணிந்திருக்க வேண்டும்? வீட்டிலும், விடுதியிலும் இருக்கும் போது அணிந்திருக்கும் பர்முடாஸ், டீ - சர்ட் போன்றவற்றை அணிந்து, வங்கிக்கு வருகிறாய்... ஆள்பாதி ஆடை பாதி என்பதாக, இனிமேலாவது பொது இடங்களுக்கு போகும் போது, உன் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வரும்படி, உடை அணிந்து செல்...' என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.இப்போது, அந்த மேனேஜரின் அறிவுரைப்படி, ஒழுங்காக ஆடை அணிய ஆரம்பித்து விட்டான் எங்கள் உறவினர் மகன்!கல்வி கடன், ஸ்காலர்ஷிப் போன்ற விஷயங்களுக்காக, வங்கிகளுக்கு செல்லும் மாணவர்களே... இனி, மேற்கூறிய அறிவுரையை மனதில் பதித்து, செல்வீர்கள் தானே!—
ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.
குத்துப்பாட்டு பாப்பா!
ஆசிரியையான நானும், என் குடும்பத்தாரும், ஒரு உறவுக்கார பெண் வீட்டிற்கு சென்றிருந்தோம். உறவுக்கார பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகி இருந்தன. குழந்தை ஒரு தொள தொள பனியனும், இடுப் பில் நாப்கினும் கட்டியிருந்தது. அதன் கழுத்தில், ஒரு மொபைல் போனை தொங்க விட்டிருந்தனர். குழந்தை அழும்போதெல்லாம், குழந்தையின் தாய், மொபைல் போனை ஆன் பண்ணி விட்டாள். மொபைல் போனிலிருந்து இந்தி, தமிழ், தெலுங்கு குத்துப் பாடல்கள் ஒலிபரப்பாகின. குத்துப் பாடல்களில், இரட்டை அர்த்த ஆபாச வரிகள் ஒலித்தன. உடனே, அந்த குழந்தை, அழுகையை நிறுத்தி, அமர்ந்த நிலையிலேயே, முன்னும் பின்னும் தலையாட்டி ஆட ஆரம்பித்தது. அன்று முழுக்க, குழந்தை, இருபது தடவைகளாவது அழுதிருக்கும்.இருபது தடவையும், குத்துப்பாட்டு போட்டு, குழந்தையின் அழுகையை ஆட்டமாக மாற்றினாள் அந்த தாய். 'குழந்தையின் மொழி அழுகை. அழுகையின் உள்ளர்த்தங்களை புரிந்து செயல் படாமல், குத்துபாட்டால் அதை சமாதானப் படுத்துவது விபரீத குறுக்குவழி! குத்துப்பாட்டு கேட்டு வளரும் குழந்தை, எப்படி நல்ல முறையில் வளரும்? ஒரு குழந்தை நல்ல குழந்தையாக வளருவதும், தீய குழந்தையாக வளருவதும் அன்னை வளர்ப்பதிலே என்பர். 'அழும் குழந்தையை பொறுமையுடனும், சகிப்புணர்ச்சி யுடனும் கவனிம்மா. குத்துப்பாட்டு விஷத்தை, குழந்தை மனசில கலந்து விடா தேம்மா...' என அறிவுரை கூறினேன். என் அறிவுரைக்கு, அவள் அலட்சியம் காட்டினாள். நான் சொல்வதில் தவறு ஏதேனும் உள்ளதா? சொல்லுங்கள் வாககர்களே...—
எஸ்.விசாலாட்சி, கோவில்பட்டி.முன்னெச்சரிக்கை தேவை!
அன்று நானும், என் தோழியும் சேர்ந்து, இன்னொரு தோழியின் வீட்டிற்கு, ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே, செல்லும் ஏரியா புதுசு. ஆட்டோ டிரைவரிடம் இடத்தைச் சொல்லி, ஏறி உட்கார்ந்து விட்டோம். 'இடமோ புதுசு; டிரைவர் எங்காவது கொண்டு சென்றால், என்ன செய்வது?' என்று, மனதிற்குள் ஒரே பதட்டம்.என் தோழி தன்னுடைய மொபைல் போனை எடுத்து, 'அப்பா... நாங்கள் அந்தத் தியேட்டரைத் தாண்டி விட்டோம். அந்தக் கடையைத் தாண்டி இருக்கிறோம்...' என்று, வழியில் வந்த தியேட்டர், கடையின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தாள்.ஒரு வழியாக, தோழியின் வீட்டிற்கு முன் ஆட்டோ நின்றதும் தான், எனக்கு மூச்சே வந்தது. பணத்தைக் கொடுத்து விட்டு, ஆட்டோவை அனுப்பிய பின், வீட்டிற்குள் வந்தோம்.நான், என் தோழியிடம், 'நீ பயமே இல்லாமல் எப்படி மொபைல் போனில் பேசிக் கொண்டு வந்தாய்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நான் மொபைல் போனில் நம்பரை டயல் செய்யாமல் தான் பேசினேன். அப்போது தான் டிரைவர் ஒரு பயத்துடன், சரியாக நாம் சொன்ன இடத்தில் கொண்டு போய் விடுவார்...' என்றாள்.என்ன... அவள் சொல்வதும் சரி தானே?—
ஆர்.பிருந்தா, பெங்களூரு.