உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

சமைக்கத் தெரியாது என்பது பெருமையா?

என் மூத்த சகோதரியின் மகனுக்கு, பெண் தேடும் வேட்டையில் இருந்தேன். நானும், அவளும், ஜாதகம் பொருந்திய சில பெண்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணைப் பற்றி சொல்லும் போது, 'என் மகளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்யத் தெரியாது. ஆபீசுக்கு போவா, வருவா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சு வச்சுடுவேன்...' என்றனர். அதை விட கொடுமை என்னவென்றால், 'என் பொண்ணுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. அவளுக்கு கிச்சன் எது என்பது கூட தெரியாது...' என்று மார்தட்டி பெருமிதம் கொள்ளும் வகையில், மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றனர்.என்ன தான் இன்றைய பெண்கள், வேலைக்கு செல்வதாக இருந்தாலும், நளபாக சமையல் செய்யத் தெரியாவிட்டாலும், அன்றாட சமையல் கூட செய்யத் தெரியவில்லை என்றால், வீடு என்னாகும்? இப்போது பாட்டு பாடத் தெரியுமா? டான்ஸ் ஆடத் தெரியுமா என்று யாரும் கேட்பதில்லை. அட்லீஸ்ட் திருமணமான பின், அவர்கள் இருவருக்காக மட்டுமாவது சமைக்கத் தெரிந்தால் தானே நல்லது. இல்லாவிட்டால், பாதி நாள் அதிக பணம் கொடுத்து, பீஸா, பர்கர்ன்னு சாப்பிட்டு, பணத்தையும், உடல்நலத்தையும் கோட்டை விட வேண்டி இருக்கும்.எல்லாம் புகுந்த வீட்டுக்கு போய், அவளா கத்துப்பா என்று, இன்றைய இளம் பெண்களின் தாய்மார்கள் நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி, சுத்தமா சமைக்கத் தெரியாததை, மார்தட்டி பெருமையாக சொல்லாமல் இருக்கலாமே? இன்றைய யுவதிகளுக்கு சமைப்பதும் ஒரு கலைதான் என்பதை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.— எஸ்.சீதாலட்சுமி, சென்னை.

குழந்தை வளர்ப்பும், தோட்டக்கலையும்!

பெரும்பாலான குடும்பத்தலைவியருக்கு பெரும் தலைவலியாக இருப்பது, தன் குழந்தை, அதிக சத்துகள் நிறைந்த காய்கறிகளை உண்ணாமல் இருப்பதுதான். இந்த பிரச்னையை சுலபமாக தீர்த்தாள் என் தோழி.அவள், தன் ஆறு வயது குழந்தை, அதிகம் சாப்பிடும் காய்கறி எது என்றும், பிடிக்காதது எது என்றும் பிரித்தாள். அதில், பிடிக்காத காய்கறியை வகைப்படுத்தி, அருகில் உள்ள விதைப் பண்ணைக்குச் சென்று, அந்த விதைகளை வாங்கி வந்து, அவள், தன் குழந்தையின் கையில் கொடுத்து, 'நீயே உன் கையால் நடு, இது இனிமேல், உன் செடி, இதில் காய்ப்பது அனைத்தும் உனக்கு தான் சொந்தம்...' என்றாள்.அன்றிலிருந்து அந்த குழந்தை, தாயின் வழிகாட்டுதல்படி அதை பராமரிக்க ஆரம்பித்தது. சிறிது காலம் சென்றவுடன், அதில், பூக்கள் பூத்தது. அதில் அந்த குழந்தைக்கு பேரானந்தம். அடுத்து பிஞ்சு, அடுத்தது காய் என, செடி பல்வேறு பரிணாமங்களில் வளர்வதை பார்த்த அந்த குழந்தை, தம் செடியில் காய்த்த காய் என்று அதை சாப்பிட ஆரம்பித்தது.இதை போன்று, பல்வேறு வகையான விதைகளை வாங்கி, தன் குழந்தையின் கையில் கொடுத்து, நடச் சொன்னாள். இப்போது, அவளது வீட்டில் பல்வேறு வகையான செடிகள் உள்ளன. அதிலும், அவளது குழந்தைக்கு வெண்டைக்காய் என்றால், தனிப் பிரியம் வந்து விட்டது. தன் குழந்தைக்கு பிடித்த மாதிரியான காய்கறிகளை உண்ண வழி கண்டுபிடித்த தோழியின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்தேன். — ரா.கயல்விழி, திருப்பூர்.

அட்மிஷனும், கண்டிஷனும்...

சமீபத்தில் உறவினர் ஒருவர், தன் மகளை ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக, ஒரு பிரபல பள்ளிக்கு சென்ற போது, நானும் அவருடன் சென்றிருந்தேன். பள்ளி முதல்வரோடு நேர்முக பேட்டி முடிந்தவுடன், அட்மிஷனுக்கு அவர் ஒப்புதல் அளித்தார். அதோடு, ஒரு கண்டிஷனையும் போட்டார்.'வீட்டு விசேஷங்கள், உறவினர், நண்பர் திருமணங்கள் ஆகிய எந்த காரணத்திற்காகவும் உங்கள் மகள் பள்ளிக்கு லீவு போடக் கூடாது. உடல் நலமில்லையென்றால், டாக்டர் சர்டிபிகேட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதை மீறினால், டி.சி., கொடுத்து விடுவோம்...' என்பது தான், அந்த கண்டிஷன். பீசை மறுநாள் செலுத்துவதாக சொல்லிவிட்டு நாங்கள் வெளியேறினோம்.'ஒரு குழந்தைக்கு, படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல... நம் கலை, கலாசாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவையும், குழந்தைப் பருவத்திலேயே கற்றறிவது அவசியம். நம் பாரம்பரிய பண்டிகைகளும், திருமண நிகழ்ச்சிகளும் அதற்குரிய பாலத்தை அமைத்து தருகின்றன. அந்த பிரத்யேக நிகழ்ச்சிகளில், உற்றார் உறவினரை சந்தித்து, அவர்களின் உறவை புதுப்பித்து கொள்ள முடிகிறது. இந்த காரணங்களை முன்னிறுத்தி, பள்ளி நாட்களில், குழந்தையை சில நிகழ்ச்சிகளுக்காக அழைத்துப் போக வேண்டியது அவசியமாகிறது. அதை தடை செய்யும் கல்வி அமைப்பு, என் மகளுக்கு வேண்டாம்...' என்று என் உறவினர் முடிவு எடுத்து, அந்த பள்ளியில் அட்மிஷனை தவிர்த்தார். அவருடைய முடிவு சரியானதாகவே எனக்கு தோன்றியது.— எஸ்.ராமன், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !