உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

துணிச்சலாக செயல்படுங்கள்!சமீபத்தில், டவுன் பஸ்சில் பயணித்த போது நடந்த சம்பவம், இன்றைய இளம் பெண்களின் துணிச்சலுக்கும், சாமர்த்தியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. பேருந்தில் கூட்டம் இல்லாததால், சில இருக்கைகள் காலியாக இருந்தன. ஒரு நிறுத்தத்தில் ஏறிய, முரட்டுத் தோற்றம் கொண்ட இளைஞன் ஒருவன், கல்லூரி மாணவி ஒருத்தியின் அருகில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான். பதறிப்போய், அந்த மாணவி எழுந்து, அவனைக் கண்டபடி திட்டுவாள் என்று, அனைவரும் எதிர்பார்த்தோம். அவளோ அமைதியாய் எழுந்து, 'அண்ணா... வழி விடுங்க. நான் நிற்கிறேன்; உங்களுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கு. நல்லா உட்காந்துக்குங்க...' என்றதும், அந்த இளைஞனின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! பேசாமல் எழுந்து நின்று விட்டான். வேறு இடம் இருந்தும், வேண்டுமென்றே அப்பெண்ணின் அருகில் வந்து அமர்ந்தவனிடம், கடுமையாக பேசினால், பதிலுக்கு அவனும் பேசுவான். பிரச்னையை பெரிதாக்காமல், சாமர்த்தியமாக சமாளித்த அப்பெண்ணை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். சிறு விஷயங்களுக்கும் பயந்து நடுங்காமல், பெண்கள் துணிச்சலாக செயல்பட்டால், எந்தப் பிரச்னையையும் தனி ஆளாக நின்று தீர்த்து விடலாம்.— என்.உஷா தேவி, மதுரை. பாரம்பரியத்தை ஒதுக்கி விடாதீர்!மனிதர்களின் ரசனை, மாறிக் கொண்டே இருக்கிறது என்பதற்கு, நல்ல உதாரணம், செண்டை மேளத்திற்கு, மக்கள் மத்தியில் கிடைத்து வரும், வரவேற்பு. திருவிழாக்கள், திருமண வைபவங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்த நாள் விழா, வரவேற்பு விழா என்று எந்த விழாவாகட்டும், பாரம்பரிய நாதஸ்வர இசை ஓரம் கட்டப்பட்டு, செண்டை மேளமே, பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது; மக்களாலும் விரும்பப்படுகிறது.ஆனால், செண்டை மேள கலைஞர்கள், முறைப்படி செண்டையை வாசிப்பதில்லை. நையாண்டி, டப்பாங்குத்து ஸ்டைலில் தான், பெரும்பாலும் வாசிக்கின்றனர். அதற்கு தான், மக்கள் மத்தியில், இத்தனை வரவேற்பு.மங்களகரமான, நாதஸ்வர இசை, கோவில் திருவிழா, கொடை விழா மற்றும் திருமண விழாக்களில் வாசிக்கப்பட்டு வந்தது. இப்போது வேகமாக செண்டைக்கு மாறி வருகிறது. எத்தனையோ பாராம்பரிய இசைக்கருவிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள், கால ஓட்டத்தில், காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நாதஸ்வர இசைக்கும், அந்தக் கதி வந்து விடக்கூடாது. செண்டையை ரசியுங்கள்; போற்றுங்கள். ஆனால், அதே நேரம், நம் பாரம்பரியத்தை நினைவூட்டும். நாதஸ்வர இசையை, ஓரம் கட்டி விட வேண்டாம்.— ஜி.சாய்லட்சுமி, கிருஷ்ணாபுரம். நண்பரின் பாலிசி!இரவு, 11:00 மணி; என் நண்பரின் மொபைலிலிருந்து, என் மொபைலுக்கு அழைப்பு வந்தது. பேசியது ஒரு தனியார் மருத்துவமனை ஊழியர். அவர், 'சார்... நான் பேசும் இந்த மொபைலுக்குரியவர், ஒரு சாலை விபத்தில் சிக்கி, எங்கள் மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகியுள்ளார். அவரது மொபைலை சோதித்த போது, அதில், எந்த ஒரு, 'கான்டாக்ட்' பெயருமில்லை. கடைசியாக பேசிய நம்பர், உங்களுடையதாக இருந்ததால், உங்களுக்கு போன் செய்துள்ளோம். அவர், உங்களுக்கு, தெரிந்தவர் என்றால், எங்கள் மருத்துவமனைக்கு, உடனடியாக வர முடியுமா...' என்றார்.குறிப்பிட்ட அந்த மருத்துவமனைக்கு சென்ற போது, நண்பர் போதையில் பைக் ஓட்டி, சாலை விபத்தில் சிக்கியுள்ளது தெரியவந்தது.பெரிய அளவில் அடிபடவில்லை என்ற போதிலும், 'குறைந்தது மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும்...' என்றனர் ஊழியர்கள்.பின், நண்பரின் வீட்டிற்கு தகவல் கொடுத்து, அவரது மொபைலை வாங்கிப் பார்த்தேன். அதில், எந்த நம்பரும் ஸ்டோர் செய்யப்படவில்லை. நண்பர் குணமாகி வீட்டிற்கு வந்த பின், இது குறித்து விசாரித்தேன். அப்போது நண்பர் கூறியது:தினமும் வேலை முடிந்ததும், மது அருந்துவேன். மது அருந்தி விட்டால், போதையில், போனில் யாருடன் பேசுகிறேன் என்பது கூட தெரியாமல், ஆபாசமான வார்த்தைகளால் பேசி விடுகிறேன். பெயரை மாற்றிப் போட்டு, சம்பந்தமில்லாத விஷயத்தை, சம்பந்தமில்லாதவரிடம் பேசி, அசிங்கமாகி விடுகிறது. அதனால், எந்தப் பெயரையும், போனில், ஸ்டோர் செய்யாமல் இருக்கிறேன் என்றார்.'இம்மாதிரி விபத்து நேர்ந்து விட்டாலோ அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலையிலோ குடும்பத்தினரை எப்படி தொடர்பு கொள்வது? இதற்கெல்லாம் காரணமான அந்த மது அவசியமா... குடும்பம், குழந்தைகளை விட, குடி முக்கியமா... நல்ல முடிவு எடுங்கள்...' என்று, அறிவுரை கூறினேன்.ஒரு பக்கம், உலகம், நவீன தொழில்நுட்பத்தால், முன்னேறினாலும், அதை, முறையாக பயன்படுத்த முடியாத, இம்மாதிரி அவலங்களும், நடக்கத் தான் செய்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பரா?— வே. விநாயகமூர்த்தி,வெட்டுவான்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !