அந்துமணி பதில்கள்!
டி.எஸ்.பானுசந்தர், கோடாங்கிபட்டி: சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளேன். எந்நேரமும் கடையைச் சுற்றி நின்று, தொண தொணக்கின்றனர் நண்பர்கள். இதனால், வியாபாரம் பாதிக்கிறது. இந்தத் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்வது?தொல்லை தரும் ஒவ்வொரு நண்பரையும் தனித்தனியே அழைத்து, நீங்கள் பணச் சிக்கலில் இருப்பதாகவும், அவர்கள் தகுதிகேற்ப கடனுதவி செய்யவும் எனக் கேளுங்கள்; அடுத்த நாள் முதல் சுறுசுறுப்படையும் உங்கள் வியாபாரம்! அத்துடன், யார் உண்மையான நண்பன் என்பதையும் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பும் கிட்டும்! எஸ்.காவியா, அனுப்பானடி: திருமணம் நடக்க வேண்டிய இளம் பருவத்தில் திருமணம் நடக்க வழி இல்லாமல் தள்ளிக் கொண்டே வந்து, கனவுகள், ஆசைகள் எல்லாம் அடங்கி விட்ட, 38 வயதுக்கு பின், திருமணம் நடக்குமானால், அதில் என்ன சுகம், சந்தோஷம் இருக்க முடியும்? சில சமயம் திருமணமே வேண்டாம் என்றும் தோன்றுகிறது...திருமணத்தைப் பற்றிய ஆசைகள், கனவுகள் இருந்திருக்கிறது; ஆனால், 38 வயதாகி விட்டதே என மறுக்கிறீர்கள். உடல் தேவைகளுக்காக இல்லாவிட்டாலும், ஒரு தோழமைக்காக, சொல்லப் போனால், வயதான பின், பாதுகாப்புக்காக எல்லாருக்கும் துணை தேவை தான்! இப்போதும் திருமணம் அமையும் பட்சத்தில் தயங்காமல் கழுத்தை நீட்டுங்கள்!சி.பெரியசாமி, வீரபாண்டி: நேரு, எந்த அளவில் மக்களால் நினைக்கப்படுகிறார்?சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஷ்மீரின் சில பகுதிகளை, தன் தவறான அணுகுமுறையால், தாரை வார்த்துக் கொடுக்க காரணமாகி விட்டாரே என்ற அளவில்!ப.கிருத்திகா, கோவை: திருமணம் முடிந்தபின், தங்கள், 'இன்ஷியலை' பெண்கள் கண்டிப்பாக மாற்ற வேண்டுமா?மாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதியான சங்கதி தான், 'இனிஷியல்' மாற்றும் விவகாரம்! (கொசுறு: கேரள மாநிலத்தில், ஆண் குழந்தைகளுக்கு தந்தையின், 'இன்ஷியலும்' பெண் குழந்தைகளுக்கு தாயின், 'இன்ஷியலும்' வைக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.)எம்.பாத்திமா, திருப்பூர்: சிக்னலில் பச்சை விளக்கு எரிந்த உடனேயே பின்னால் இருக்கும் வாகனங்கள், காலில் வெந்நீர் கொட்டியது போன்று, ஹாரன் அடிக்கின்றனரே... இவர்களை திருத்த முடியுமா?முடியாது; ஏனென்றால், இவர்கள் கல்வி அறிவில்லாதவர்கள். பெரும்பாலும், டூரிஸ்ட் டாக்சி, பிக் - அப் வேன், ஆட்டோ டிரைவர்களிடம் தான் இந்த கெட்ட பழக்கம் இருக்கிறது. யார் தான் இவர்களைத் திருத்த அவதாரம் எடுத்து வரப் போகின்றனரோ!என்.ஷ்யாமளன், புதுச்சேரி: காதலிக்க என்ன தகுதி வேண்டும்? உங்களுக்கு அனுபவம் இல்லையேல், லென்ஸ் மாமாவிடம் கேட்டு பதில் சொல்லவும்...எனக்கு அனுபவமில்லை என்பதை தெரிந்து வைத்திருப்பதற்கு மிக்க நன்றி... 'விசேஷமாக தகுதின்னு எதுவும் தேவை இல்லை; தைரியம் இருந்தால் போதும்...' என்கிறார் லென்ஸ் மாமா!கே.என்.மயிலைநாதன், மந்தைவெளி: ஆயிரக்கணக்கான இன்ஜினியர்களும், டாக்டர்களும் வேலையில்லாமல் தவிக்கும் போது, தம் குழந்தைகளை இப்படிப்புகளில் சேர்க்க, அட்மிஷனுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனரே பெற்றோர்...'இன்று வேலை இல்லை என்றாலும், என் பிள்ளை படித்து முடிக்கும் போது நிலைமை சீராகும்...' என்ற எதிர்பார்ப்பு தான் இதற்கு காரணம். இது, இவர்களின் அறியாமை!இன்று, 5,000 ரூபாய் சம்பளத்திற்கு கூட இன்ஜினியரிங் பட்டதாரிகள் வேலைக்குப் போக தயாராக உள்ளனர்; வேலை தான் குதிரைக் கொம்பாக உள்ளது!கே.ரேணுகாதேவி, கடையநல்லூர்: கோபப்படக் கூடிய இடங்களில் கோபப்படாமல் இருப்பது முறை தானா?இடம், பொருள், ஏவல் தெரியாமல் கோபப்படுவது விவேகமல்லவே!