அந்துமணி பதில்கள்!
பி.மணிகண்டன், விருதுநகர்: என் வயது, 33; இன்னும் திருமணமாகவில்லை. இதுவரையிலும் யாரையும் காதலித்தது இல்லை. இப்போது ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் காதலை எப்படி அந்தப் பெண்ணிடம் தெரிவிப்பது?இன்னும் திருமணமாகவில்லை என்று கூறுகிறீர்கள். அதனால், தைரியமாக அப்பெண்ணின் பெற்றோரை அணுகி, பெண் கேட்டு, திருமணம் செய்து பின், காதலியுங்களேன்!சி.கோகுல், கலுங்குப்பட்டி: மத்திய அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்?மாநில அரசுகள் உரிமை பாராட்டும் நதி மீது கை வைக்க வேண்டும்; நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். அவை, வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க, அவற்றை இணைக்க வேண்டும். அப்புறம் எங்கேயோ போய்விடும் இந்தியாவின், 'ஸ்டேட்டஸ்!'எச்.மாரிச்செல்வம், திருப்புவனம்: மன நிம்மதியோடு வாழ ஒரு வழி சொல்லுங்களேன்...அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள்; தானே தேடி வரும் மன நிம்மதி!எஸ்.வி.பார்த்திபன், செய்யார்: நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நம்மை பேசவிடாமல் அவர்கள் புராணத்தையே பாடி அறுப்பவர்களைப் பற்றி...இப்படிப்பட்ட ஆசாமிகளை என்ன சொல்லியும் திருத்த முடியாது. சிறிது நேரம் ஹி...ஹி... என அசடு வழிந்துவிட்டு பின், நைசாக, 'கட்' செய்து விடுவதே மேல்!டி.ஏ.முகேஷ், கண்டமங்கலம்: காஷ்மீர் பிரச்னைக்கு சுமுகமான, விரைவான தீர்வு காண ஒரே வழி என்ன சார்?ஏற்கனவே சொல்லி விட்டேன்; மீண்டும் கூறுகிறேன்... 'இரும்புக் கரம்' ஒன்றுதான் ஒரே வழி! 'காஷுவாலிடீஸ்' கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும்... சீனாவிலுள்ள, 'டினாமென் ஸ்குயர்' சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள்... யாராவது கேள்வி கேட்டார்களா?வி.இளங்கோவன், மயிலாப்பூர்: என் முகத்தை எனக்கே பிடிக்கவில்லை... என்ன செய்யலாம்?சூப்பர் சான்ஸ்யா உமக்கு... உடனே, சினிமாவிலே சேர்ந்துவிடும். நம்ம சினிமா கதாநாயகர்களுக்கு சரியான போட்டியாக இருப்பீர்!எம்.வடிவுக்கரசி, அம்பத்தூர்: இது, என் தோழியின் பிரச்னை; அவள் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறாள். திருமணம் செய்வதால் பிரச்னை ஏதும் ஏற்படுமா?மனித மனங்கள் ஒன்றான பின் பிரச்னைகள், மத, இனத்தால் வர வாய்ப்பில்லை; ஆனாலும், கலாசார மாற்றம், கொஞ்சம் தடுமாற்றத்தை ஆரம்பத்தில் ஏற்படுத்தத்தான் செய்யும்!வி.தாணு, ஆவடி: அரசு தீட்டும் பல திட்டங்கள் காலதாமதம் ஆவதற்கும், வெற்றி பெறாமல் போவதற்கும் காரணம் என்ன?தீட்டும் திட்டங்களை செயல்வடிவப் படுத்த எந்த ஆளும் அரசியல்வாதிகளிடமும் திறமையோ, ஆர்வமோ இல்லை. திட்டத் துவக்கத்தில் கிடைக்கும் ஆர்ப்பாட்டமான சொந்த விளம்பரத்திலும், அதன் மூலம் கிடைக்கப் போவதாக எண்ணும் ஓட்டுகளிலுமே குறியாக இருக்கின்றனர்.எஸ்.கோவிந்தராஜன், ராஜபாளையம்: என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. என் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. இதை சாக்காக வைத்து என் மாமியார், அடிக்கடி வந்து, 'டேரா' போடுகிறார். அவருக்கு, என் குடும்ப சூழ்நிலையை நாசூக்காக எப்படி புரிய வைப்பது?இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் விஷயங்களில் நாள், நேரம், நாசூக்கு பார்ப்பதே வீண். நேரடியாகவே மாமியாரிடம் விஷயத்தை புட்டு புட்டு வைத்து, பண உதவி கேட்டுப் பாருங்கள். உங்கள் ஊர் வீடு இருக்கும் திசை பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்.