உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உணர்வுகளை மதிப்போம்!நாங்கள் வசிக்கும் காலனியில், விபத்தில் கை இழந்த, மாற்றுத்திறனாளி ஒருவர், தினமும் மாலையில், பசுமையான கீரைகளை கொண்டு வந்து விற்பார். அவரிடம், கீரைகள் தரமானதாகவும், புதிதாகவும் இருப்பதால், அவர் வந்த சிறிது நேரத்திலேயே விற்றுவிடும்.காலனியில் உள்ளோர், அவரை, 'கை இல்லாத கீரைக்காரர்' என்றே குறிப்பிடுவது வழக்கம். இப்படி நாங்கள் அழைப்பதைக் கேட்ட என் ஐந்து வயது பேத்தி, 'ஏன் பாட்டி எல்லாரும் அவரை அப்படி கூப்பிடறாங்க...' என்று கேட்டதுடன், அவரிடம் ஓடிச்சென்று, அவரது பெயரை கேட்டுக் கொண்டு வந்தாள்.'பாட்டி... அந்த அங்கிள் பேர் கோபால்; இனிமேல் நீங்கள் எல்லாரும் அவரை, 'கோபால் அங்கிள்' என்று கூப்பிடுங்கள்...' என்று சொல்லி, விளையாட போய் விட்டாள். அவள் அப்படி சொன்னது அங்கிருந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.மாற்றுத் திறனாளிகளை அவர்களது உடல் குறைபாடுகளை குறிப்பிட்டு, அடையாளம் காட்டுவது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை உணர்ந்தோம். அதிலிருந்து, அவரை பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துள்ளோம்.அவர்களுக்கும் மனமும், உணர்ச்சிகளும் உண்டு என்பதை புரிந்து, அவர்களை புண்படுத்தாமல் மதித்து நடக்க, எல்லாரும் முயற்சிக்கலாமே!— சுதா கணபதி, சென்னை.மானம் காத்த மாமனிதர்!நானும், என் தோழியும் அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறோம். பொதுமக்கள், அதிகளவில் வந்து செல்லும் இடம் அது.அன்று, என் தோழி அணிந்திருந்த ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்திருந்தது. அதை, கவனிக்காமல் அணிந்து வந்திருந்தாள். ஒரு பெரியவர், என் தோழியிடம் சிறு பேப்பரை தந்தார். அவளும், அதை, 'என்ன' என்று கேட்டவாறு, வாங்கிப் படித்தாள்.அப்பேப்பரில், 'மகளே... உன் ஆடையின் ஓரத்தில், தையல் பிரிந்துள்ளது. நீ, எனக்கு முன் நடந்து சென்ற போது, அதை கவனித்தேன். அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு முன், சரி செய்து கொள்...' என்று எழுதியிருந்தது. படித்து முடித்து நிமிர்ந்தவளிடம், 'நான் உன் அப்பாவாக சொல்கிறேன்... தவறாக நினைக்காதே மகளே...' என்று கூறிச் சென்றார்.பின், என் தோழி ஆடையை சரி செய்து, அந்த பெரியவருக்கு மானசீகமாக நன்றி கூறினாள்.— நீ.அபிராமி, கண்டனூர்.லேட்டஸ்ட் பேஷன்!அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சற்று மாறுதலான சூழலில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.மஞ்சள் பை ஒன்றை தொங்க விட்டவாறே சைக்கிளில் வந்தவர், என்னை கண்டதும் வண்டியை நிறுத்தினார். எனக்கோ ஆச்சரியம். 'வழக்கமா கார்ல தானே ஷாப்பிங் வருவீங்க; இப்ப தான் முதன் முதலா சைக்கிளில் பாக்குறேன்...' என்று வியப்பை வெளிப்படுத்தினேன்.'எங்க ஆபிசுல எனக்கு பணி நிறைவு விழா நடத்தும் போது, 'உங்களுக்கு, என்ன, 'கிப்ட்' வேணும்; வெளிப்படையா சொல்லுங்க'ன்னு கேட்டனர். நானும் ஒரு சைக்கிள் வாங்கித்தாங்க'ன்னு சொன்னேன். ரொம்ப சந்தோஷமா இந்த சைக்கிளை வாங்கி தந்தாங்க.'தினசரி சின்ன சின்ன வேலைகளுக்கு போக, வர இதை பயன்படுத்துறேன். இதனால், உடம்புக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியாவும், தெம்பாவும் இருக்கு. இன்னொரு விஷயம், உலக அளவுல இதுதான் இப்ப லேட்டஸ்ட் பேஷன்...' என்று சொல்லி, சிரித்தார் நண்பர்.மனந்திறந்து பாராட்டியதோடு, பாடமும் கற்றேன்.— பி.ஜி.பி.இசக்கி, பொட்டல்புதூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !