இது உங்கள் இடம்!
மாத்தி யோசிக்கலாமே!அரசு பணியில், கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற உறவினரைப் பார்க்க, கடந்த மாதம் அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம், தன் வீட்டு வாசலில், டூ வீலரை நிறுத்தியிருந்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் உறவினர். காரணம், அவரது வீட்டை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம் இருந்ததால், இடப் பற்றாக்குறையால், இவர் வீட்டு முன்பாக, வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.உறவினரை சமாதானப்படுத்தி, 'இதற்காக ஏன் கோபப்பட்டு, டென்ஷன் ஆகுறீங்க... வீட்டிற்கு முன் சிறிய அளவில் ஸ்டேஷனரி மற்றும் தேநீர் கடை போடுங்க; வருமானம் தூள் கிளப்பும்...' என்று யோசனை கொடுக்க, அவரும் அதை ஒரே வாரத்தில் செயல்படுத்தினார்.இன்று, பென்ஷனுடன் கூடுதலாக, 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அத்துடன், தினமும், சுறுசுறுப்பாக வேலை செய்வதால், ஆரோக்கியத்துடன் உள்ளார். நண்பர்களே... நாம் நினைத்தால் இடையூறுகளையும், வெற்றியாக மாற்ற முடியும்!— வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.இப்படியும் ஒரு கணவர்!என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், வீட்டில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்பதால், தன் குடும்பத்தாரிடம் சர்வாதிகாரமாக நடந்து கொள்வார். அத்துடன், தாம் சம்பாதிக்கும் பணத்தை பீரோவில் வைத்து பூட்டிக் கொள்வார். அவ்வப்போது வீட்டுச் செலவுக்கான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, வேலைக்கு செல்லும் போது பீரோவை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விடுவார்.அண்மையில், அவர் வெளியூர் சென்றிருந்த போது, அவருடைய எட்டு வயது மகளுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கையில் பணம் இல்லாமல் திண்டாடிய அந்த பெண், பக்கத்து வீடுகளில் கடன் வாங்கி, குழந்தையின் மருத்துவ செலவை சமாளித்தாள்.மனைவியை கூட நம்பால், பணத்தை பூட்டி வைக்கும் ஜென்மங்கள், இதைப் படித்த பிறகாவது திருந்த வேண்டும்!— கே.அருணாசலம், தென்காசி.பாரம்பரிய உடை அணியலாமே!கடந்த சில வாரங்களுக்கு முன், திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தார், என் உறவினர். அழைப்பிதழைப் பிரித்து பார்த்த போது, அதில், சிறிய அட்டை ஒன்று இணைக்கப்பட்டு, 'அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து, திருமண தம்பதியை வாழ்த்த விரும்புகிறோம்...' என்று எழுதப்பட்டிருந்தது.அதேபோன்றே, திருமண நாளன்று, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, அனைவரும் புடவை, வேட்டி - சட்டை, பாவாடை - தாவணி மற்றும் பட்டுப்பாவாடை - சட்டை அணிந்து வந்து அமர்க்களப்படுத்தினர்.இதுகுறித்து உறவினரிடம் பேசிய போது, அவர், 'பார்ப்பதற்கு அழகாக தெரிவதுடன், மரியாதையையும் பெற்றுத் தருவது நம் பாரம்பரிய உடைகள்; இதை, இம்மாதிரி விசேஷங்களில் அனைவரும் அணியும் போது, அதைப் பார்பவர்களுக்கு, அழிந்து வரும் நம் கலாசாரத்தை நினைவுப்படுத்தும்...' என்றார்.இதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இம்முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றேன். பாரம்பரிய உடைகளை அணிவதால், அதன் அருமையும், அழகும் வெளிப்படும்; இதை அனைவரும் பின்பற்றலாமே!— ரா.முத்தம்மா தேவி, திருப்பூர்.