உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

ஆசிரியையின் அணுகுமுறை!பள்ளி ஆசிரியையான என் தோழி, தன் மகளின் பிளஸ் 2, 'ரிசல்ட்' வந்த அன்று, மகளின் வகுப்பு தோழிகளுக்கு, வீட்டில், 'பார்ட்டி' வைத்தாள். உணவு பரிமாறியபடியே, 'எங்கள் காலத்தை போல் அல்லாமல், இப்போது, மேற்படிப்புக்கு பல கல்லூரிகள், தேர்தெடுக்க பல பாட பிரிவுகள் உள்ளன. அதனால், நம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விரும்பிய பாடப்பிரிவோ, கல்லூரியில் இடமோ கிடைக்காதே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். இது இல்லன்னா அது என்பது போல் மேற்படிப்பு படிக்க, பல வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேளுங்கள்; உதவ, தயாராக இருக்கேன்...' என்று கூறினாள்.தோழியின் நம்பிக்கையான வார்த்தை, எதிர்காலத்தை சமாளிக்கும் தைரியத்தை, அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளதை, 'ஆன்ட்டி இருக்காங்க நமக்கு உதவ...' என்று வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் பேசிக் கொண்டே சென்றதன் மூலம் அறிந்தேன்.தோழியின் அணுகுமுறை மற்றும் நம்பிக்கையான பேச்சால், மதிப்பெண் குறைந்தாலும், தவறான வழியை அம்மாணவியர் நாட மாட்டார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.— ப்ரீதா ரங்கசாமி, சென்னை.பள்ளிக்கு வரும் பெற்றோர் கவனத்திற்கு!ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆங்கில பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். பள்ளி வளாகத்தில் ஒருபுறம் எங்கள் ஆங்கில பள்ளியும், மற்றொருபுறம், பிளஸ் 2 வரை இயங்கும், இருபாலர் பயிலும் பள்ளியும் உள்ளது.எங்கள் பள்ளிக்கு, குழந்தைகளை, காலையில் விடவும், மாலையில் அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் அணிந்து வரும் உடையை பார்த்தால்... ஒரு சில ஆண்கள் லுங்கி மற்றும் அரை டவுசர் அணிந்து வருகின்றனர். பெண்களோ, நைட்டியோடு வருகின்றனர்; அதிலும், ஒரு சிலர், துப்பட்டா கூட அணிவதில்லை. இவர்களை பார்க்கும், 'டீன்ஏஜ்' மாணவ, மாணவியர் முகம் சுளிக்கின்றனர்.பள்ளி நிர்வாகம், இது குறித்து எத்தனையோ முறை, பலவிதமாக கூறியும், பெற்றோர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.பெற்றோர்களே... உங்கள் குழந்தைகள், பள்ளி சீருடை அணிந்து, 'நீட்'டாக வரும் போது, நீங்கள், குறைந்தபட்சம் இரவு உடைகளை தவிர்த்து, டீசன்ட்டான உடைகளை அணிந்து வரலாமே!குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர் மட்டும் கற்றுக்கொடுத்தால் போதாது; உங்களுக்கும் அதில் பங்கு உண்டு.குழந்தைகளுக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?சம்பந்தப்பட்ட பெற்றோர், இனியாவது, பள்ளிக்கு வரும் போது, நாகரிகமான உடை அணிந்து வருவரா?— எஸ்.மனோகரி, திருவாரூர்.மழலையர் பள்ளியில் சேர்க்க போகிறீர்களா?சமீபத்தில், எங்கள் மூன்று வயது குழந்தையை, மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக, அருகிலிருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றோம். ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது, ஆசிரியை ஒருவர், ஒரு குழந்தையின் வாயில், மதிய உணவை விடாப்பிடியாக திணித்தார்; அது, சாப்பிட பிடிவாதம் செய்த போதும் விடவில்லை. மிரட்டி, மீண்டும் உணவை வாயில் திணித்தார்.வேறு ஒரு பள்ளியிலோ, குழந்தைகளிடம், 'கண்களை மூடி தூங்கலன்னா, அடிச்சுடுவேன்...' என, குச்சியை வைத்து மிரட்டி, தூங்க வைத்தார், ஒரு ஆசிரியை.இன்னும் வேறு சில பள்ளிகளில், குழந்தைகள் அதிக சேட்டை செய்யும் போது, நாற்காலியில் கட்டி வைக்கின்றனர்.வேலைக்கு செல்லும் பெற்றோரே... 'குழந்தையை, அருகிலிருக்கும் ஏதோ ஒரு, 'ப்ளே ஸ்கூலில்' சேர்த்தால் போதும்; வேலை முடிந்து வந்து அழைத்து செல்லலாம்...' என அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பராமரிக்கின்றனரா என விசாரித்து, பின் சேருங்கள்.— பி.மேனகா, வேடப்பட்டி.தண்ணீரை சேமிக்க...மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முடிந்து, வீட்டுக்கு புறப்படும் மாணவ - மாணவியர் தங்கள் தண்ணீர் பாட்டிலில் உள்ள மீதமான தண்ணீரை, பள்ளி வளாகத்திலிருக்கும் பெரிய பிளாஸ்டிக் வாளியில் கொட்ட வலியுறுத்துகின்றனர். அப்படி சேரும் நீரை, அங்கிருக்கும் மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றுகின்றனர். இப்படி சேரும் நீரின் அளவு, ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர்!இதைப்பார்த்து, அங்குள்ள மற்ற பள்ளிகளும், இதை பின்பற்றுகின்றனர். நீரை வீணாக்காமல் சேமிக்கும் குணம், பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பள்ளி நிர்வாகத்தினரை, கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்!— மைதிலி நாராயணன், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !