உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கண்ணை மறைத்த பூ ஆசை!என் உறவினர் பெண்மணி ஒருவர், பூக்கள் மீது, பைத்தியமாக இருப்பார். ஒரு நாள் கூட, கொண்டையில் பூ இல்லாமல் இருக்க மாட்டார். 'காஞ்ச பூவாச்சும் என் கொண்டையில் இருக்கணும்...' என, பீற்றிக் கொள்வார். மகனுக்கு திருமணம் முடிந்து, மருமகள் வந்த பின்பும், அவரது இந்தக் குணம் மாறவில்லை.இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த அவரது கணவர் திடீரென இறக்க, பூ வைக்க முடியாமல், பித்து பிடித்தவர் போல் ஆனார்.இதனால், தினமும், மருமகளுக்கு வாங்கும் பூவை, அவளுக்கு தெரியாமல், அறைக்குள், தன் தலையில் சிறிது நேரம் வைத்திருந்து, பின், அதை சுருட்டி, மருமகளிடம் கொடுத்து விடுவார். இப்படியே நெடுநாட்கள் நடந்துள்ளன.ஒருநாள், அந்த பூவில், மாமியாரின் முடி இருந்ததை பார்த்து, சந்தேகமடைந்த மருமகள், பூ வாங்கும் போது மாமியாரை நோட்டமிட்டு கண்டு பிடித்து விட, வீட்டில் பெரிய ரகளையே நடந்தது. அதன்பின், பூ வைப்பதையே நிறுத்தி விட்டாள், மருமகள்.சூடிக் கொடுத்த சுடர்க் கொடி போல் அந்த அம்மையாரின் செயலால், மருமகளின் பூ ஆசையே பறிபோனது.மாமியார்களே... சிறிதளவாவது மனச் சாட்சியோடு வாழுங்கள்!— டி.ராணி தேவராஜன், மதுரை.இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!காலையில் வாசலில் கோலம் போடும் போது, ஒரு இளைஞன், சைக்கிளில் வந்து, தினசரி பேப்பர் போட்டுச் செல்வான்.சில தினங்களுக்கு முன், எங்கள் எதிர்வீட்டில் ரொம்ப நேரம் நின்று பேசியவன், கையில் ஏதோ வாங்கிச் செல்வதை கவனித்தேன். அன்று மாலை, எதிர் வீட்டு பெண்ணை பார்த்து, 'நீயும், உன் கணவரும் பேப்பர் போடும் பையனிடம், ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த மாதிரி இருந்ததே...' என்றேன்.அதற்கு அவள், 'நாங்க இந்த வீட்டுக்கு குடி வந்த இந்த ரெண்டு வருஷத்துல, ஒருநாள் கூட லீவு போடாம, சரியான நேரத்துக்கு பேப்பர் போடுவதை கவனித்த என் கணவர், அந்த பையனை பாராட்டி, கை கடிகாரம் பரிசா கொடுத்தாரு. முதல்ல தயங்கியவன், வற்புறுத்திய பின் வாங்கினான்...' என்றாள்.தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் விடுப்பு போடாமல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களை பாராட்டி, பரிசு வழங்குகின்றனர். ஆனால், நமக்காக சேவை செய்யும் பால், காஸ், கூரியர், தபால்காரர் மற்றும் பேப்பர் பாய் போன்றோரின் தொழில் சுத்தத்தையும், நேர்மையையும் பாராட்ட ஏனோ மறந்து விடுகிறோம்.இவர்களையும் உற்சாகப்படுத்தலாமே!— எம்.ராஜம், விளக்குத்தூண்.பூஜை பொருட்களில் கலப்படம்!சமீபத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, மதுரை சென்றிருந்தோம். அங்குள்ள கோவில்களை பார்க்க வேண்டும் என்பதால், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே சென்று, பல கோவில்களை தரிசித்தோம். இந்நிலையில், திருமணத்திற்கு முதல்நாள் இரவு, என் மகளின் கண், கோவைப்பழம் போல சிவந்து விட்டது. 'மெட்ராஸ் ஐ' வந்து விட்டதாக நினைத்து, எல்லாருக்கும் பரவி விடுமே என, பயந்தோம்.மருத்துவரிடம் சென்று காண்பித்ததில், அவர், 'கலப்பட குங்குமம் இட்டுக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட அலர்ஜி...' என்று கூறி, சொட்டு மருந்து கொடுத்தார். கோவில்களில் கொடுக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டது நினைவுக்கு வந்தது.நான்கு நாட்கள் கண் அலர்ஜியால் அவஸ்தைப்பட்டது மட்டுமில்லாமல், 'மெட்ராஸ் ஐ' என நினைத்து, எல்லாரும் எங்களை நெருங்கவே பயந்தனர். திருமண நிகழ்ச்சியில், மகிழ்ச்சியாக கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.கோவில்களுக்கு செல்லும் போது, தரமான பூஜைப் பொருட்களையே வாங்க வேண்டும்.பூஜை பொருட்களை விற்பனை செய்வோரும், அவை, பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது என்பதை மனதில் கொண்டு, தரமான பொருட்களை விற்று, புண்ணியம் தேடிக் கொள்ளலாமே!— ந.விசாலாட்சி, கோல்கட்டா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !