உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

விபரீத யோசனை!சில வாரங்களுக்கு முன், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னை வரவேற்ற தோழியும், அவளது தாயும், குளிர்பானம் கொடுப்பதற்காக, வரவேற்பறையில் இருந்த குளிர் சாதன பெட்டியை திறந்தனர். அதன் கீழ் அடுக்கில், இரண்டு பீர் பாட்டில்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். வீட்டில் இருப்பது அவள், அவளது அக்கா மற்றும் பெற்றோர் மட்டுமே!அவளது தந்தை, வீட்டில் வைத்தே மது அருந்துவார் போலிருக்கு என நினைத்து, அவளிடம் வினவியபோது, அவள் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை தந்தது. அவளது தந்தைக்கு எவ்வித தீய பழக்கமும் இல்லை எனவும், அவளது அக்கா ஒல்லியாக இருப்பதால், திருமணத்திற்குள், உடல் எடையை அதிகரிக்க வேண்டி, இரு தினங்களுக்கு ஒரு பாட்டில் பீர் அருந்த, தன் தந்தையின் துபாய் நண்பர் யோசனை அளித்திருப்பதாகவும் கூறினாள்.இதைக் கேட்டு சிரிப்பதா, கோபப்படுவதா என தெரியவில்லை. பெற்றோர்களே... உங்கள் குழந்தையின் மீது அக்கறை வையுங்கள்; ஆனால், அது அவர்களது உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியம் தருவதாக இருக்கட்டும். இதுபோன்ற விபரீத யோசனையை யார் அளித்தாலும் அதை ஏற்காதீர். பீர் குடிப்பதற்கு பதிலாக, நல்ல சத்தான உணவு போதும்!— ச.தீபா, மதுரை.மரம் வைத்து, பெயர் பெறுவோம்!எங்கள் ஊருக்கு, குடித்தனம் வந்தார், அரசு அதிகாரி ஒருவர். ஆன்மிகத்தில் நாட்டம் உள்ள அவர், தன் சக்திக்கேற்ப அவ்வப்போது கோவில் திருப்பணிக்கு உதவி வந்தார்.இந்நிலையில், அவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வர, கோவிலில் தன் பெயர் நிலைத்து நிற்கும்படி ஏதாவது செய்ய விரும்பினார். அதனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை கூறினர். எதுவும் அவரது, 'பட்ஜெட்'டுக்குள் வரவில்லை.கடைசியாக நான், 'கோவில் சுற்றுச் சுவரை ஒட்டினாற் போல் ஆறு தென்னை மரக் கன்றுகளை நட்டுச் செல்லுங்கள்; மரம் வளர வளர, உங்கள் பெயரும் தன்னால் உயர்ந்து கொண்டு போகும்...' என்று யோசனை கூறினேன். இது அவருக்கு பிடித்து விடவே, தென்னை மரங்களை நட்டுச் சென்றார். தற்சமயம், அம்மரங்கள் நன்கு வளர்ந்து, காய்க்கும் நிலைக்கு வந்துள்ளன. இப்போது, 'யார் இதை நட்டது...' என, யாராவது கேட்டால், மேற்படி அரசு அதிகாரி பெயரை சொல்லாமல் மறைக்க முடியுமா... கோவிலில் மரத்தை நட்டு, புண்ணியத்தை மட்டுமல்ல; நல்ல பெயரையும் சம்பாதித்து விட்டார், அந்த அதிகாரி!— டி.கே.சுகுமார்,கோவை.தமிழ் இலக்கண பயிற்சி!சில நாட்களுக்கு முன், என் நண்பரைச் சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர், நண்பரின் தந்தை. வீட்டில், தனி அறையில், 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு, தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.நண்பரிடம், 'பென்ஷன் பணம் உங்கப்பாவுக்கு பத்தலையா... டியூஷன் நடத்தியும் சம்பாதிக்கணுமா...' எனக் கேட்டேன்.நண்பர் சிரித்தபடி, 'அப்படியல்ல; இவர்கள் அனைவரும், தனியார் பள்ளியில், ஆங்கில வழியில் படிப்பவர்கள். தமிழ் பாடத்தில் ரொம்ப மோசமாக இருக்காங்க. எங்கள் பகுதியை சேர்ந்த இம்மாணவர்களுக்கு, உச்சரிப்பில் உள்ள, ல, ள, ழ, ன, ண, ந வேறுபாடு, சந்திப்பிழை, செய்யுள், உரைநடை, இலக்கண வகுப்புகளை விடுமுறை நாட்களில் இலவசமாக நடத்துகிறார். இதற்கு, நல்ல வரவேற்பும், பாராட்டும் குவிகிறது...' என்றார்.இதைக் கேட்ட எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஓய்வுபெற்று விட்டோம் என, சோம்பி இராமல், தான் கற்ற கல்வி மற்றும் அனுபவம், இதுபோன்று, மாணவர்களுக்கு பயன்படும் நோக்கில், செயல்படுவது பாராட்டுக்குரியது.ஆசிரியர்களே... உங்களின் ஓய்வுக்கு பின், உங்களின் அறிவு, அனுபவத்தை மூட்டை கட்டி வைக்காமல், மாணவர்களுக்கு பயன்பட்டுக் கொண்டே இருக்கும் படி செயல் படுங்கள்!— சோ.ராமு, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !