உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

ரயில் டிக்கெட் வாங்கும் போது...ஒரு அவசர வேலை நிமித்தம், சமீபத்தில் கோவைக்கு சென்று, அன்று மாலையே அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம். கோவை ரயில் நிலையத்தில், 'அன் ரிசர்வ்டு டிக்கெட்' வாங்க நின்ற கூட்டத்தை பார்க்க, மலைப்பாக இருந்தது; ரயிலை தவற விட்டு விடுவோமா என்ற பதற்றத்துடன் வரிசையில் நின்றேன்.அப்போது ஒருவர், என் அருகில் வந்து, 'டிக்கெட் எடுத்திருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலையால், என்னால் சென்னைக்கு செல்ல முடியவில்லை. நீங்கள் வேண்டுமானால், இந்த டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்று கூறினார். எனக்கு இருந்த அவசரத்தில், 'டிக்கெட்' கிடைத்தால் போதுமென்று, பணத்தை கொடுத்து, அடித்துப் பிடித்து ரயிலில் ஏறினேன்.டிக்கெட் பரிசோதகர் வந்ததும், என்னிடமிருந்த டிக்கெட்டை நீட்டிய போதுதான் தெரிந்தது, அது முந்தைய நாளுக்கான பயண டிக்கெட் என்று. எவ்வளவோ சொல்லியும், என்னை நம்பவில்லை. அபராதம் கட்டியதுடன், சுற்றி இருந்தவர்களின் ஏளன பார்வைக்கும் ஆளானேன். அறிமுகம் இல்லாதவர், தானாக முன்வந்து, 'டிக்கெட்'டை தந்தபோது, தேதியை சரி பார்க்காத என் அறியாமையை நினைத்து, நொந்தபடியே பயணித்தேன். ரகு.பாலமுருகன், கோவை.உடல் எடை குறையணுமா?அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர், தன், 90 கிலோ எடையால் அவதிப்பட்டார். எங்கு சென்றாலும், டூ - வீலர் பயணம் தான்; அவரை பலரும், 'குண்டன்' என்று கேலி செய்தனர். சமீபத்தில், அந்த நண்பரை சந்தித்தபோது, எடை குறைந்து, அழகாக இருந்தார்.வியந்து,'எப்படி எடையை குறைத்தீர்?' எனக் கேட்டேன். 'டூ - வீலரை ஓரங்கட்டி, சைக்கிளை வாங்கினேன்; அலுவலகம் உட்பட எங்கு சென்றாலும், சைக்கிளிலேயே சென்று வருகிறேன். ஒரு வாரம் சிரமமாக இருந்தது; பின், சரியானது. இப்போது, சைக்கிள் சவாரி செய்வதால், நன்கு பசிக்கிறது. சாப்பிடுவது ஜீரணமாகிறது. உடம்புக்கு நோய் எதுவும் இல்லை. ஜாலியாக சைக்கிளில் சென்று வருகிறேன். எடை குறைந்து, நலமாகவும், உடல் உறுதியுடனும் இருக்கிறேன்...' என்றார்.நண்பர்களே... உடல் எடையை குறைக்கிறேன் என்று மருத்துவத்தை நாடாமல், என் நண்பர் போல், சைக்கிள் பயணம் செய்யுங்கள். உடல் எடை குறைவதுடன், ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை அந்த அனுபவமே உணர்த்தும். சுற்றுச் சூழலுக்கு எமனாகும் வாகனங்களை ஒதுக்கி, சைக்கிளுக்கு மாறுங்கள். நோய் என்னும் சைத்தான் உங்களை அண்ட மாட்டான்.— ஜி.பொன் ராஜ்குமார், திருப்பூர்.புதுமையான பெயர்!பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த குழந்தைகள், 'எங்க வீட்டுல இன்னிக்கு சாக்லேட் தோசை, மயோனீஸ்' என்றபடியே, சாக்லேட் நிறத்தில் இருந்த தோசையை, வெள்ளை நிறத்தில், 'க்ரீம்' போலிருந்த சைடு - டிஷ்ஷை தொட்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அடுக்களையில் தோசை சுட்டுக் கொண்டிருந்த அவர் அம்மாவிடம், 'ஏம்மா... இந்த தோசையை எப்படி செய்யுறே...' என்றேன்.அந்த பெண், 'இது கேழ்வரகு மாவில், கருப்பட்டி சேர்த்து செய்த தோசை. தொட்டுக் கொள்ள வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலையை வெண்ணெய் சேர்த்து அரைத்துள்ளேன். பெயர் மட்டும் புதுமையாக, சாக்லேட் தோசை, மயோனீஸ்...' என்றதும், ஆவலோடு குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.'சத்தான உணவு, சுவையும் அருமையா இருக்கு; புதுமையான முயற்சி' எனக் கூறி வாழ்த்தினேன்.பழனீஸ்வரி தினகரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !