உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

திருந்த வேண்டியவர்கள், பெற்றோர்களே!சமீபத்தில், தங்கையை பார்க்க அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். விளையாட வேண்டும் என்று, தங்கை மகன் நச்சரிக்கவே, பக்கத்தில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் விளையாட விட்டேன். மற்ற குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளை விளையாட அனுப்பி விட்டு, கைபேசியில் விளையாடியும், யாருடனோ பேசியபடியும் இருந்தனர்.சறுக்கு மரம், ரங்க ராட்டினம் போன்ற விளையாட்டு சாதனங்களில் பெண் குழந்தைகளை ஏற்றி இறக்குகிறேன் பேர்வழி என்று, குழந்தை என்றும் பாராமல், 'சில்மிஷ'த்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான், ஒருவன். இன்னொரு பக்கம், காதல் ஜோடிகளின், 'சில்மிஷ'த்தை வேடிக்கை பார்த்தபடி, சிரித்துக் கொண்டிருந்தன, சில குழந்தைகள்.கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை பொறுக்க முடியாமல், 'சில்மிஷ' பேர்வழியின் கன்னத்தில், ரெண்டு விட்டேன். அதுவரை, அங்கிருந்த பெற்றோருக்கு, என்ன நடந்ததென்றே தெரியவில்லை. 'சமூகத்தில், பெண் பிள்ளைகளுக்கு, வன்கொடுமைகள் நடப்பது உங்களுக்கெல்லாம் எப்போது தான் புரிய போகிறதோ... கைபேசி மோகத்தில், குழந்தைகளின் வாழ்க்கையை வீணாக்காதீர். 'என் பிள்ளை, எப்போதும் போனும் கையுமாக உள்ளது...' என்று, குறை சொல்லும் பெற்றோரே... முதலில், உங்களிடம் உள்ள கைபேசி உபயோகத்தை குறைத்தால், குழந்தைகளும், குறைத்துக் கொள்வர். 'அவர்களை எப்போதும், நம் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். தவறான வழியில் செல்ல, நாமும் காரணமாகிறோம்...' எனக் கூறியவுடனே, தலைகுனிந்தபடி, தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.பூங்காவின் காவலாளியை அழைத்து, 'காதல் ஜோடிகளை உள்ளே விடாதீங்க...' என்றும் அறிவுறுத்தி வந்தேன்.ஊதற சங்கை ஊதி வைப்போம்... சம்பந்தப்பட்டோர், இனியாவது விழித்துக் கொள்ளட்டும்!கே.எஸ்.ஜஸ்வந்த், சென்னை.சாத்துக்குடி ஐஸ்கிரீம்!ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தேன். ஐஸ்கிரீமை வித்தியாசமான பொருளில் வைத்து தந்தனர். பார்த்தால், சாத்துக்குடியின் தோல். விசாரித்ததில், ஆஸ்திரேலியன் சாத்துக்குடியில், தோலை முழுவதும் உரிக்காமல், உள்ளே இருக்கும் சுளையை மட்டும் எடுத்து, அதனுள் ஐஸ்கிரீமை வைத்து உறைய விடுகின்றனர். பிறகு எடுத்து, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி தருகின்றனர்; சாப்பிடும் போது, நல்ல மணமாக இருந்தது.ஐஸ்கிரீம் வைக்கும், 'பிளாஸ்டிக் டப்பா'வை தவிர்த்த மாதிரியும் ஆயிற்று. கொஞ்சம் யோசித்தால், இயற்கையோடு கைகோர்த்து விடலாம் என்பதை மெய்ப்பித்தது.கி.ரவிக்குமார், நெய்வேலி.பெண்ணின் மானம் காத்த, வேட்டி!திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல, உடமைகளுடன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன். அன்று, முகூர்த்த நாளானதால், பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. என் அருகில், சுடிதார் அணிந்த, நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர், தன், ஆறு வயது மகளுடன் பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவே, அனைவரும் முண்டியடித்து ஏறினர். அந்த பெண் இறுக்கமான, 'லெகின்ஸ்' அணிந்திருந்தபடியால், உயரமான படிக்கட்டில் காலை துாக்கி ஏற முடியாமல் அவதிப்பட்டார். பின்னால் நின்றிருந்தோர், 'ஏற முடிந்தால் ஏறுங்கள்... இல்லையெனில், எங்களுக்கு வழி விடுங்கள்...' என, குரல் கொடுத்தனர்.அந்த பெண், மீண்டும் முயற்சித்தபோது, இறுக்கமாக உடுத்தியிருந்த, 'லெகின்ஸ்' கிழிந்து அங்கம் தெரிய, அவமானத்தால் குறுகினார்.என்ன செய்வதென்று தெரியாமல் அவதிபட்ட பெண்ணுக்கு, சட்டென்று என் பையிலிருந்து, ஒரு வேட்டியை எடுத்துக் கொடுத்தேன். 'ஆபத்துக்கு பாவமில்லை... முதலில் மானத்தை காப்பாத்துங்கள்...' என கூறியதும், தயங்கியபடியே, வேட்டியை வாங்கி, இடுப்பில் கட்டிக் கொண்டார்.பெரும்பாலும் இளம் பெண்கள் தான், 'லெகின்ஸ்' எனப்படும் இறுக்கமான உடை அணிவர். ஆனால், திருமணமாகி, குழந்தை பெற்ற, உடல் பெருத்த குடும்ப பெண்களும், இதுபோன்ற இறுக்கமான உடைகளை ஏன் தான் அணிகின்றனரோ!இனியாவது, வயது, உடலுக்கேற்ற உடைகளை அணிவரா... இல்லாவிட்டால், பொது இடத்தில் மானம் போவது நிச்சயம்!ஏ.நாராயணன், பெரிய காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !