உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

குழந்தைகளை பட்டினி போடாதீர்!சமீபத்தில், நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன், மனைவி மற்றும் பெற்றோர் சோகமாக காணப்பட்டனர்.படுக்கையில் கிடந்த, அவனுடைய நான்கு வயது குழந்தைக்கு, குடும்ப மருத்துவர் சிகிச்சையளித்து, நண்பனை தனியே அழைத்து, எச்சரிப்பது போல் ஏதோ சொல்லிப் போனார்.என்னவென்று விசாரிக்க, அவன் சொன்ன சேதி, என்னை அதிர்ச்சியடைய வைத்தது.சரிவர பேச தெரியாத குழந்தை, அறியாமல் செய்த சிறு தவறுக்காக, அவன் மனைவி, நாள் முழுக்க, சாப்பாடு தராமல், பட்டினி கிடக்குமாறு தண்டனை கொடுத்துள்ளார்.எவ்வளவு கெஞ்சியும் சாப்பிட அனுமதிக்காததால், ஒரு கட்டத்தில் குழந்தை மயங்கி விழுந்திருக்கிறது. அதன்பின், குடும்ப மருத்துவரை வரவழைத்து காப்பாற்றி இருக்கின்றனர்.'தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கலாம்; ஆனால், தண்டிக்க கூடாது. அதிலும் குறிப்பாக, பட்டினி போடுவது போன்ற தண்டனையை தரக்கூடாது...' என்று, அந்த மருத்துவர், நண்பனை எச்சரித்திருக்கிறார்.இனியாவது, இதுபோன்று குழந்தைகளை தண்டிக்கும் பெற்றோர், திருந்துவரா?- எஸ்.விஜயன், உளுந்துார்பேட்டை.சுயதொழில் என்றும் கைவிடாது!என் தோழிக்கு, இரண்டு பிள்ளைகள். கணவர், தனியார் துறையில் வேலை பார்த்து வந்தார். குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்த நிலையில், கணவருக்கு திடீரென்று வேலை போய் விட்டது. பிள்ளைகள் இருவரும், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். சென்னையில் வசிப்பதால், பணம் போதாமல், பல பிரச்னைகள், தோழியின் தலையில் இடியாய் விழுந்தது.கவலைப்பட்டால், அது நம்மை ஜெயித்து விடும். அதை விரட்டியடிப்போம் என்றெண்ணி, கணவரிடம், 'நாம் ஏன் டிபன் கடை வைக்கக் கூடாது...' எனக் கூறினாள், தோழி.கவுரவ பிரச்னையாக கருதி, தடுக்க பார்த்தார். கணவர். ஆனாலும், விடாப்பிடியாக களத்தில் இறங்கி, வேலை பார்க்க துவங்கினாள், தோழி.வேறு வழியில்லாமல் கணவரும், பக்கபலமாக இருக்க, இன்றோ, மாத வருமானம், 60 ஆயிரம் ரூபாய் ஈட்டி வருகிறாள். தோழியின் பிள்ளைகள், முன்பு படித்த பள்ளியை விட, பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.பெண்கள், தன்னம்பிக்கையுடன் இருந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.- எஸ்.சித்ரா சீனிவாசன், சென்னை.கைப்பேசியை காப்பாற்றிய, அழைப்பு மணி!கணவர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மதியத்திற்கு மேல், வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்து கொண்டிருந்தான், பழுது பார்ப்பவன்.சமையல் அறையில் பணி முடித்து நான் வந்ததும், பழுது பார்த்து விட்டதாக, என்னிடம் கூலியை வாங்க வந்தபோது, அவன் பையிலிருந்து கைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பு, என் கைப்பேசி ஒலியை ஒத்திருந்ததால், சந்தேகத்துடன், அவன் பையை ஆராய்தேன்; 'திரு திரு'வென்று விழித்தான். அவன் பையிலிருந்த என் கைப்பேசியை மீட்டேன்; என் கணவர், அழைப்பு விடுத்திருந்தார். எனவே, வீட்டில் தனியாக இருக்கும்போது, வெளியாட்களை தவிர்க்க வேண்டும். அவசர தேவைக்காக அழைத்திருந்தால், இதர பணிகளை ஒதுக்கி, பணி முடியும் வரை, அந்த இடத்தை விட்டு நகராமல் கவனிக்க வேண்டும் என்ற படிப்பினையை, இச்சம்பவம் மூலம் தெரிந்து கொண்டேன்.- மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !