உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

ஆசிரிய நண்பரின் உதவி!அரசுப் பள்ளி ஆசிரியரான நண்பரை, சமீபத்தில் சந்தித்தேன். அவரின், 'விசிட்டிங் கார்டை' என்னிடம் கொடுத்தார். அதில், அவர் பெயர், முகவரி, மொபைல் போன் எண் மட்டுமின்றி, 'கொத்தனார், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், ஓட்டுனர், வெல்டர், டெய்லர், மெக்கானிக், புரோகிதர், கேட்டரிங், மங்கள இசை மற்றும் பறை உள்ளிட்ட, பல தேவைகளுக்கு, ஆட்கள் ஏற்பாடு செய்திட அணுகுங்கள்...' என்று, குறிப்பிடப்பட்டிருந்தது.வித்தியாசமாக இருக்கவே, அதுபற்றி கேட்டேன்.'என்னிடம் பயின்ற மாணவர்கள் பலர், அவரவர் திறமைக்கேற்ப சுயதொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது மொபைல் போன் எண்களை வாங்கி வைத்துள்ளேன். 'என்னைத் தொடர்பு கொள்வோரிடம் அவர்களை அறிமுகம் செய்து, அவர்கள் தொழிலில் முன்னேற, வழிகாட்டியாக இருந்து வருகிறேன். இது, என் முன்னாள் மாணவர்களுக்கு மன மகிழ்ச்சியையும், வாழ்வில் வளர்ச்சியையும் தருவதோடு, எனக்கும் ஆத்ம திருப்தியாக உள்ளது...' என்றார்.சிரமம் கருதாமல், தன் மாணவர்களுக்கு, ஆசிரிய நண்பர் செய்து வரும் மனிதாபிமான உதவியை, மனதார வாழ்த்தினேன்!-பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.நெகிழச் செய்த மனிதநேயம்!வெளியூருக்கு மாற்றலாகி செல்லும், அரசு ஊழியரான நண்பரை பார்க்க, அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் வீட்டில் பணிபுரியும் வயதான பெண்மணி, 'இதுவரை நீங்க கொடுத்த சம்பளத்தில், கூழோ, கஞ்சியோ குடிச்சுக்கிட்டு நிம்மதியா இருந்தேன். இனிமேல் என் வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்யப் போறேன்னு தெரியலை...' என்று நண்பரிடம் கூறி, கண்கலங்கினாள்.'கவலைப்படாதீங்க... இதுவரை என் குடும்பத்துக்கு உண்மையா உழைச்ச உங்களை அப்படியெல்லாம் அம்போன்னு விட்டுட்டு போயிட மாட்டேன்...' என்ற நண்பரிடம், 'என்னய்யா சொல்றீங்க...' என்று கேட்டாள், மூதாட்டி.'ஆமாம்... வருடா வருடம் உனக்கு உயர்த்திக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, உன் பெயரில் வங்கியில், 'டிபாசிட்' செய்துள்ளேன். அது இப்போது, வட்டியுடன் பெருந்தொகையாக சேர்ந்துள்ளது.'அதற்கு ஈடான தொகையையும், என் அன்பளிப்பாக, இப்போது உன் பெயரில், 'டிபாசிட்' செய்துள்ளேன். இனி, அதிலிருந்து மாதா மாதம் கிடைக்கும் வட்டி தொகையை, 'பென்ஷன்' போல் பெற்று, நீ நிம்மதியாக வாழலாம்...' என்றார், நண்பர்.'நீங்க, குடும்பத்தோட நீண்ட நாள் நல்லாயிருக்கணும் ஐயா...' என்று கண்ணீர் மல்க கைகூப்பினாள், அந்த மூதாட்டி. நண்பரின் மனிதநேயம், என்னை நெகிழச் செய்தது.கே. கணேசன், மறைமலைநகர்.இப்படியும் 'பஸ் டே' கொண்டாடலாம்!வெளியூர் செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தேன். அப்போது, வழக்கமாக அப்பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் கும்பலாக வந்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், ஏதோ பார்சலை கொடுத்து, நன்றி கூறினர். சக பயணியிடம், அதுபற்றி விசாரித்தேன்.அன்று, அப்பேருந்தின், 'பஸ் டே'யை கொண்டாடும் விதமாக, மாணவர்கள் அனைவரும் சேர்ந்து, தங்களால் இயன்ற தொகையை பங்களித்து, ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு, இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி, மகிழ்ச்சியையும், நன்றியையும் பகிர்ந்துள்ளனர்.'பஸ் டே' என்றாலே, ஆட்டம், பாட்டம், அடாவடி என, சக பயணியரை அலற விடுவோர் மத்தியில், பரிசளித்து, அன்போடு நன்றி கூறிய மாணவ - மாணவியரை, பேருந்திலிருந்த அனைவரும் பாராட்டினர்!-வெ.பாலமுருகன், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !