உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

காதலியை இப்படியும் பழி வாங்கலாம்!சில ஆண்டுகளாக, ஒரு பெண்ணை, தீவிரமாக காதலித்தான், நண்பரின் மகன். அந்த பெண்ணும், இவனை காதலித்தாள்.பிறகு, திடீரென்று ஒருநாள், 'என் பெற்றோர் கடுமையாக எதிர்க்கின்றனர்...' என, நண்பரின் மகனிடம் கூறி சென்று விட்டாள்.அதுவரை சுறுசுறுப்பாக, சிரித்த முகத்துடன் இருந்தவன், நடைபிணமானான். விபரீத முடி எடுத்து விடுவானோ என்று, பெற்றோர் மற்றும் அவனது சகோதரிகள் பயந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே பழையபடி சிரித்த முகத்துடன், சுறுசுறுப்பாக நடமாட ஆரம்பித்தான், நண்பரின் மகன்.அவனை தனியாக சந்தித்து, 'எந்தவிதமான தப்பான முடிவுக்கும் போகாமல் பழையபடி இருப்பது சந்தோஷம்...' என, பாராட்டினேன்.'என்னை நம்பி காதலித்தவளை, நான் ஏமாற்றவில்லை. ஆனால், அவளை, உயிருக்குயிராய் காதலித்த என்னை ஏமாற்றி விட்டாள். இதில், யார் தன் செயலுக்காக கூனிக்குறுக வேண்டும்...' என்றான்.'அந்த பெண் தான்...' என்றேன்.'ஒருவகையில், இதுவும் நல்லது தான். ஏனெனில், அவள் எப்படிப்பட்டவள் என தெரிந்து கொள்ள முடிந்தது. என்னை போல உண்மையாக நேசித்த, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒருத்தனை இழந்ததற்கு, அவள் தான் வருத்தப்பட்டு, உயிரை விட வேண்டும். நான் ஏன் தப்பான முடிவுக்கு போக வேண்டும். அவளை பழி வாங்காமல் விடமாட்டேன்...' என்றான்.'என்ன செய்ய போகிறாய்...' என, பதறினேன்.'பதறாதீங்க அங்கிள். கீழ்த்தரமான எந்த செயலையும் செய்ய மாட்டேன். தன் வாழ்நாள் முழுவதும், என்னை ஏமாற்றியதை நினைத்து அவள் வருந்தும்படி, என் பெயர், செய்தித்தாள் மற்றும் 'டிவி'யில் வரும் வகையில், பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறேன். அனைவரும் பாராட்டும்படி உயர்வேன்.'என்னை பற்றி அவளுக்கு தெரிய வரும்போது, நிச்சயம் வருந்துவாள். என்னை ஏமாற்றியவளுக்கு நான் தரும் தண்டனை அதுதான்...' என்று கூறி, விடை பெற்றான்.அவன் கூறியதை கேட்டு பிரமித்து போனேன்.காதலில் தோல்வியடைந்த, ஏமாற்றப்பட்ட, பாதிக்கப்பட்ட அனைத்து இளைஞர்களும் இதுபோல் சிந்திக்க வேண்டும்.- பி. ஆனந்த், சென்னை.இளைஞரின் வித்தியாச முயற்சி!மெக்கானிக் தொழிலில் ஆர்வம் கொண்ட இளைஞர், 'டூ - வீலர் ஒர்க் ஷாப்' ஒன்றை பெரிய அளவில் நிறுவி, அதிக மெக்கானிக்குகளை நியமித்தார். தொழிலில் புதுமையாக, 'நகரின் பல பகுதிகளில் இருந்தும், வீடுகளுக்கே வந்து இரு சக்கர வாகனங்களை, 'பிக் - அப்' செய்து, பழுதை நீக்கி, ஒரே நாளில் டெலிவரி...' என, விளம்பரப்படுத்தினார்.விளம்பரம் மூலம், வாடிக்கையாளர் மனதில் இடம் பிடித்து தொழில், 'ஓஹோ'வென்று வளர்ந்தது. நிறைய பேருக்கு வேலை வழங்கியதுடன், தனக்கும் அதிக வருவாய் வருவதாக கூறினார்.நாம் ஆரம்பிக்கும் தொழிலை எத்தனையோ பேர் செய்கின்றனர். அதில் நாமும், பத்தோடு பதினொன்றாக இல்லாமல், வித்தியாசமாக சிந்தித்து, தொழிலில் புதுமையை புகுத்தி, வெற்றி கண்ட இளைஞரை, மேலும் வெற்றி குவிக்க, வாழ்த்தி வந்தேன்!டி.ஜெயசிங், கோவை.வியாபார நுணுக்கம்!நாங்கள் முன்பு குடியிருந்த ஒரு அப்பார்ட்மென்டில், பல்வேறு மாநிலத்தவர் வசித்தனர். அப்போது, குஜராத்திலிருந்து வந்திருந்த பெண்மணி, அன்றன்று அவர் சமைக்கும் உணவு பொருட்களை, அக்கம்பக்கம் வீடுகளில் கொடுத்து சாப்பிட சொல்வார்.அவர் சமையலின் ருசி, அங்கு வசித்த ஒரு பாட்டிக்கு பிடித்து விட, உடம்பு முடியாதபோது அவரிடமிருந்து வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு, அதற்கு சன்மானமாக ஒரு தொகையை கொடுத்தார்.அதன்பின், ஆபீஸ் சென்று வரும் பெண்மணிகள், வீட்டில் விருந்தினருக்கு சமைக்க நேரமில்லாத போது, இவரிடம் சமைத்து வாங்கி, ஒரு தொகையை கொடுத்து வந்தனர்.இப்போது, அவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிறைய குடும்பத்தினர், இவரின் சமையல் ருசிக்கு அடிமையாகி, வீட்டில் நடைபெறும் சின்ன சின்ன விசேஷங்களுக்கும், 'ஆர்டர்' கொடுக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த அவர்கள் அனைவரும் பணி செய்தும் வேலை அதிகமாகி விடவே, குடியிருப்பு பகுதியில் உள்ள சிலருக்கு, வேலை கொடுத்து வியாபாரத்தை விரிவுபடுத்தி விட்டனர். வீட்டில் நேர்த்தியாக, ருசியாக சமைக்கும் பெண்களே... நீங்களும் இதேபோல் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்தால், வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.இந்திராணி தங்கவேல், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !