உள்ளூர் செய்திகள்

அந்த மூன்று நாட்கள்!

தோழி, கலா வந்து விஷயத்தை சொன்னதிலிருந்து, இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள், ஹேமா. அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. ஏன், எதற்காக என்ற கேள்விகளே, அவள் மனதில் திரும்ப திரும்ப, விஸ்வரூபம் எடுத்து, குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.மாலையில் ஆபீசிலிருந்து திரும்பிய, விக்னேஷ், அம்மாவின் முகம் வாடியிருப்பதை கவனித்தான். ஆனால், எதுவும் கேட்கவில்லை. கொடுத்த காபியை உறிஞ்சி, மொபைலில் மேய்ந்தபடியே, ஓரக்கண்ணால் அம்மாவை பார்த்தான்.அதிகபட்ச, 'டென்ஷ'னுடன், சோபாவில் தவித்துக் கொண்டிருந்தாள், ஹேமா. வழக்கமாக, அவள், 'டிவி' தொடர் பார்க்கும் நேரம், இது. இன்று, அதிசயமாக, 'டிவி' ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. நிச்சயமாக ஏதோ முக்கியமான விஷயம் தான், அம்மாவின் மனதை குடைந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான், விக்னேஷ்.காபியை குடித்து முடித்தவன், எழுந்து, அம்மாவின் அருகில் அமர்ந்தான்.''என்னம்மா?'' என்றான்.யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்திருந்த, ஹேமா, படபடவென்று ஆரம்பித்தாள்.''விக்னேஷ்... இத்தனை வருஷமா, நான் ஏமாந்து மோசம் போயிட்டேனோன்னு, எனக்கு பயமா இருக்குடா,'' என்றாள்.அம்மா என்ன சொல்கிறாள் என, ஒன்றும் புரியவில்லை, விக்னேசுக்கு. ''உங்கப்பா, எங்கே?''''என்னம்மா, தெரியாத மாதிரி கேட்கறே... அதான், மூணு மாசத்துக்கு ஒரு தடவை, சேவாலயா குரூப்போட, ஊர் ஊரா போய், மூணு நாள் சமூக சேவை பண்ணிட்டு வர்றார். இந்த தடவை, ஜெய்ப்பூர் மேளாவுல உதவி பண்ண போயிருக்கார்,'' என்றான்.''அப்படின்னு தான், நானும் நம்பிண்டிருந்தேன். ஆனா, உங்கப்பா, ஜெய்ப்பூர் போகலை... மதுரையில ஒரு பொம்பளையோட சுத்திட்டிருக்கார்,'' என்றாள்.அதிர்ந்தான், விக்னேஷ்.''என்னம்மா சொல்றே?''''உங்கப்பாவை, ஒரு பொம்பளையோட, மதுரையில பார்த்தேன்னு, என் தோழி, கலா சொன்னபோது, தலையில இடி விழுந்த மாதிரி இருந்தது.''விக்னேசால் இதை ஏற்க முடியவில்லை.''அம்மா... அபத்தமா பேசாதே... அப்பா, அப்படி,'' என்று, அவன் முடிப்பதற்குள், ஆரம்பித்தாள், ஹேமா. ''அப்படியெல்லாம் இல்லைன்னு தான், நானும் நம்பினேன். அதனால தான், போன தடவை, உங்கப்பாவை, குருவாயூர்ல ஒரு பொம்பளையோட பார்த்தேன்னு, இன்னொரு தோழி சொன்னபோது, 'அதெல்லாம் இருக்காது; அவர், மும்பை போயிருக்கார்... நீ வேற யாரையாவது பார்த்திருப்பே...'ன்னு சொல்லிட்டேன். ''ஆனா, இந்த தடவை, உங்கப்பாவை, மதுரையில பார்த்தேன்னு, கலா அடிச்சு சொன்னா... அவ போய் பேசறதுக்குள்ள, உங்கப்பாவும், அந்த பொம்பளையும், ஆட்டோவுல ஏறி போயிட்டாங்களாம்... என்னால நம்பாம இருக்க முடியலை... நிஜமாவே நான் மோசம் போயிட்டேன்... உங்கப்பா, எனக்கு துரோகம் பண்ணிட்டார்,'' என்று புலம்பினாள்.''அம்மா... பதட்டப்படாதே... அப்பா, ஊர்லேர்ந்து வரட்டும், விசாரிப்போம். அவர் வந்த உடனேயே, அவசரப்பட்டு, விஷயத்தை ஆரம்பிக்காதே... பக்குவமா கேட்கறேன்,'' என்றான்.அன்றிரவு, ஹேமாவுக்கு, துாக்கம் வரவில்லை. எப்படி புரண்டு படுத்தாலும், கலாவின் குரல் காதில் எதிரொலித்தபடி இருந்தது. மறு நாள் காலை-ஊரிலிருந்து வந்தார், ராஜசேகர். வழக்கமாக, சந்தோஷமாக அவரை வரவேற்கும், ஹேமா, இன்று, கனத்த முகத்துடன் சமையல் அறைக்கு போனது ஏன் என்று புரியாமல் குழம்பினார். பல் துலக்கி, முகம் அலம்பி வந்தவரை, ''ஹாய் பா... எப்ப வந்தீங்க?'' என்றான், விக்னேஷ்.''இப்பத்தாண்டா,'' என்று, நாற்காலியில் உட்கார்ந்தவர், ''என்ன, இன்று சீக்கிரம் எழுந்துட்டே?'' எனக் கேட்டார்.''ஆபீஸ்ல, 'மீட்டிங்' இருக்கு... சீக்கிரம் போகணும்... அது சரி, 'டிரிப்' எப்படி இருந்தது?'' என்று மெதுவாக ஆரம்பித்தான், விக்னேஷ்.''அதுக்கென்ன... வழக்கம் போல, மனசுக்கு திருப்தியா இருந்தது,'' என்று, அவர் முடிப்பதற்குள், காபி டம்ளரை, அவர் முன் வைத்து போனாள், ஹேமா.அதை வைத்த விதமே, அவளது கோபத்தின் தீவிரத்தை காட்டியது. மகனை பார்த்தார், ராஜசேகர். அவர் பார்வையை தவிர்த்தான், விக்னேஷ்.''ஜெய்ப்பூர்ல, இப்ப நல்ல குளிர் இருக்குமே?'' எனக் கேட்டு, பதில் சொல்லத் தயங்குவார் என்று எதிர்பார்த்தான்.ஆனால், பதட்டப்படாமல், ''குளிர் இன்னும் ஆரம்பிக்கலை... சொல்லப் போனா, நல்ல வெயில்... கிட்டத்தட்ட, 30 டிகிரி,'' என்றார், ராஜசேகர்.சமையல் அறை வாசலில், சுட்டெரிக்கும் பார்வையுடன், ஹேமா நின்றிருப்பதை கவனித்தான், விக்னேஷ்.''மேளாவுல நல்ல கூட்டமா?'' என்றான்.''கூட்டமா... கிட்டத்தட்ட, 40 ஆயிரம் பேர்... சமாளிக்கிறதுக்குள்ள, ரொம்ப கஷ்டமா போச்சு... அதுவும்,'' பேசிக் கொண்டே போனார், ராஜசேகர்.அதற்கு மேல் பொறுக்க முடியாமல், ''போதும், நிறுத்துங்க... இதுக்கு மேல பொய் பேச வேண்டாம்,'' என்று கர்ஜித்தாள், ஹேமா.எதுவும் புரியாமல் அவளை பார்த்தார், ராஜசேகர்.''நீங்க, ஜெய்ப்பூர் போகலை... எவளோ ஒருத்தியோட, மதுரையில கூத்தடிச்சிட்டிருந்தீங்க.''இதைக் கேட்டதும், முதல் முறையாக, ராஜசேகரின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.''வந்து... என்ன சொல்றே?''''நீங்க, மதுரையில, எவளோ ஒருத்தியோட ஆட்டோல போறதை, என் தோழி, கலா பார்த்துட்டா... அது மட்டுமில்லை, போன தடவை, மும்பை போறேன்னு, பொய் சொல்லிட்டு, குருவாயூர்ல சுத்தினதும், எனக்கு தெரியும்,'' என்றாள்.இதைக் கேட்டு, எதுவும் பேசாமல் மவுனமானார், ராஜசேகர்.''பார்த்தியா, விக்னேஷ்... குட்டு வெளிப்பட்ட உடனே, வாயடைச்சு போயிட்டார்... நான் மோசம் போயிட்டேண்டா,'' தொடர்ந்து புலம்பினாள், ஹேமா.அப்பாவை பார்த்தான், விக்னேஷ்.''என்னப்பா... அம்மா சொல்றது நிஜமா?''தலை குனிந்து, கொஞ்ச நேரம் யோசித்தார். பின், மெதுவாக நிமிர்ந்து, ''ஆமாம்... உங்கம்மா சொல்றது நிஜம். நான், ஜெய்ப்பூர் போகலை... மதுரை தான் போயிருந்தேன். இது மட்டுமில்லை, இதுவரை, நான் சேவாலயாவோட போய் சமூக சேவை பண்ணினேன்னு சொன்னதும் பொய் தான்,'' என்றார்.''ஐயோ... ஐயோ... எப்படி கூசாம சொல்றார் பாரு,'' என்று கத்திய, ஹேமாவை, அடக்கினான், விக்னேஷ்.''அம்மா... கொஞ்சம் சும்மா இரு. அப்பா, என்ன இதெல்லாம்... சேவாலயாவோட போகலைன்னா, அப்ப வேற எதுக்கு,'' என்றான்.''எவளோ ஒருத்தியோட கூத்தடிக்க தான்,'' என்றாள்.''அம்மா... ப்ளீஸ்!''''விக்னேஷ்... அவளை அடக்காதே... உங்கம்மா கோபப்படறது நியாயம் தானே... அவளுக்கு உண்மை தெரியாதுல்லியா,'' என்று மகனை அடக்கினார்.அப்பாவை புதிராக பார்த்தான், விக்னேஷ்.''உண்மையா... என்ன?''''விக்னேஷ்... நான், எங்கண்ணா; அதான் உன் பெரியப்பா, அத்தை என, நாங்க மூணு பேருமே, சின்ன வயசுலேர்ந்து, ஒத்துமையா, பாசமா இருப்போம். ஆனா, எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், உன் பெரியம்மாவுக்கும், உங்கம்மாவுக்கும் நடுவுல முளைச்ச தேவையில்லாத பிரச்னையினால, எங்க மூணு குடும்பமுமே பிரிஞ்சு போச்சு... இது எங்க மூணு பேர் மனசுலயும் உறுத்திக்கிட்டே இருந்தது,'' பேசிக் கொண்டே வந்தவர், சற்று நிறுத்தினார்.ஹேமாவின் முகத்தில் சின்ன குழப்பம்.''ஒருநாள், திடீர்னு, எங்கண்ணாகிட்டேர்ந்து, போன் வந்தது. அவர் சொன்ன இடத்துக்கு போனேன். அங்க, என் தங்கையும் வந்திருந்தா... அண்ணாவையும், தங்கையையும் ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்த உடனே உணர்ச்சிவசப்பட்டேன். ''அப்ப, எங்க அண்ணா, 'பொம்பளைங்க பிரச்னையினால, நாம பிளவுபட்டு நிக்கிறோம். இதுல யாரு சரி, யாரு தப்புன்னு விவாதிக்க நாம இங்க வரலை... இவங்களுக்காக, நாம ஏன் நம் பாசத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்காம இருக்கணும்?'ன்னு அவன் கேட்ட உடனே, எங்களுக்கு ஒண்ணும் புரியலை... ''அப்ப, அவன் முடிவெடுத்தான். 'மூணு மாசத்துக்கு ஒரு தடவை, மூணு நாள், நாம கிளம்பி ஏதாவது ஒரு ஊருக்கு போவோம்... கோவில், குளம்ன்னு சுத்துவோம்... ஆசை தீர பேசுவோம்... சின்ன வயசுலே, நாம வளர்ந்த மாதிரியே, சந்தோஷமா பொழுதை கழிப்போம்... வீட்டுல ஏதாவது சொல்லி சமாளிப்போம்...'ன்னு சொன்னான். ''எனக்கும், தங்கைக்கும் அது சரியா பட்டது. சேவாலயா கூட சமூக சேவை பண்ணப் போறதா, உங்ககிட்ட சொல்லிட்டு, குருவாயூர், கோயம்புத்துார், மதுரை மற்றும் திருச்சின்னு ஒவ்வொரு தடவை, ஒவ்வொரு இடத்துக்கு போக, 'பிளான்' பண்ணி போயிட்டிருக்கோம்.''இதைக் கேட்டு, உண்மையிலேயே வாயடைத்து போனாள், ஹேமா.''உப்பு சப்பில்லாத, பொம்பளைங்க பிரச்னைகளுக்காக, உறவுகளை அவ்வளவு சுலபமா வெட்டி விட முடியாது... அப்புறம், ஒரு கட்டத்துக்கு மேல, சொந்த அண்ணா, தம்பியையே அறிமுகப்படுத்தி தான் தெரிஞ்சுக்கணும்ங்கிற நிலைமை வந்துரும்.''அதனால தான், இந்த தடவை, பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்... இனிமே, நாங்க சந்திக்கிறது மட்டுமில்லை, எங்க வாரிசுகளையும் அடிக்கடி சந்திக்க வெச்சு, அவங்களுக்குள்ள ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்தறதுன்னு... விக்னேஷ், இதுக்கு நீ ஒத்துப்பியா... இல்லை, உங்கம்மாவுக்கு பிடிக்காதுன்னு, நீயும்,'' என்றார்.ராஜசேகர் முடிப்பதற்குள், ''ஒய் நாட்... இதை கேட்கவே ரொம்ப, 'த்ரில்லிங்'கா இருக்குப்பா... நாங்க சந்திக்கிறது மட்டுமில்லை, கூடிய சீக்கிரம், அம்மாவையும், பெரியம்மாவையும் சந்திக்க வைப்போம். ''அவங்களுக்குள்ள இருக்கிற பிரச்னையையும் சரி பண்ணி, நீங்க ஆசைப்படற மாதிரியே எல்லாரையும் ஒரே குடும்பமாக்கறோம்... என்ன, ஓ.கே., தானே?'' என்றான், விக்னேஷ்.மகிழ்ச்சியுடன், விக்னேசை கட்டிக் கொண்டார், ராஜசேகர். எஸ். லட்சுமி நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !