உள்ளூர் செய்திகள்

டிப்ஸ்!

விடலைப் பருவமான, 13 - 16 வயதில் இருப்போர், குழந்தை என்பதில் இருந்து, டீன் - ஏஜ் தகுதிக்கு, சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பவர்கள். எனவே, 'அவர்களுக்கு எதுவும் தெரியாது...' என்கிற உங்கள் எண்ணத்தை, இன்றிலிருந்து கைவிடுங்கள். பெற்றோரான நீங்கள், குழந்தைகளின் தோழனாக, தோழியாக மாற விரும்பினால், 12 வயதிலேயே அவர்களுடன் நட்புடன் பேச துவங்கி விடுங்கள்.கல்வி முதல் திருமணம் வரை, குழந்தைகள் எந்தக் கேள்வி கேட்டாலும், பெற்றோரில் யாராவது ஒருவர் அதற்குரிய பதிலைச் சொல்லுங்கள். ஆனால், இருவரும் ஒரே பதிலைக் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 'இந்த பெரிய பேச்செல்லாம் எதுக்கு பேசற?' என்று அடக்கினால், வேறு இடத்தில் இருந்து தவறான பதில்கள் கிடைத்து, அதனால், அவர்கள் தடுமாற வாய்ப்புள்ளது.நட்பு சூழலை உருவாக்க, முதலில் இறுக்கம் தளர்த்தி, தோழமையுடன் பேச ஆரம்பியுங்கள். உங்களுடைய சின்ன சின்ன சொந்த விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து, 'இதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?' என்று கேட்டு, அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை, உணர வையுங்கள்.குழந்தையின் திறனுக்கும் அதிகமான, தாங்க முடியாத படிப்புச் சுமைகளை திணிக்காதீர்கள்.உங்கள் பிள்ளைகள் தோல்வியில் துவண்டு போகும் போதெல்லாம், அவர்களை எங்காவது அழைத்துச் சென்று, மனதுக்கு மாற்றம் கொடுங்கள். வெற்றிக்கு முதல்படி தோல்வி தான் என்பதை புரிய வைத்து, தொடர்ந்து புத்துணர்வு ஊட்டுங்கள்.குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால், வழக்கமான உங்களுடைய கோபம், திட்டு மற்றும் அடி என, எதையும் காண்பிக்காமல், 'இந்த விஷயத்தை சரி செய்தாலே போதும்; அடுத்த முறை இந்த தப்பு நடக்காது...' என பேசி, புரிய வையுங்கள்.டீ ன் - ஏஜ் பிள்ளைகளுக்கு ஆலோசனைகளை மட்டுமே கொடுங்கள். கல்வி மற்றும் வேலை விஷயத்தில், முடிவை அவர்கள் எடுக்கட்டும். அதற்காக, 'என் பசங்க தங்கமானவங்க...' என்று கண்டுகொள்ளாமல் விடாதீர்கள்; அவர்களை கண்காணியுங்கள்; ஆனால், வேவு பார்க்காதீர்கள்.குழந்தை வீடு திரும்பியதும், 'இன்னிக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் வாங்கினியா... என்ன தப்பு செஞ்சே?' என்று விசாரணை அதிகாரியாக நடக்காமல், சாப்பிட ஏதாவது கொடுத்து, 'ஸ்கூல்ல என்ன நடந்தது, உன் பிரெண்ட் ஸ்கூலுக்கு வந்தானா, என்ன விளையாடினீங்க?' என்று அன்பாக கேளுங்கள். அவர்கள் தரும் பதில்களுக்கு, 'அப்புறம்... அப்படியா... சூப்பர்...' என்று ஆர்வத்துடன், 'ரியாக்ட்' செய்யுங்கள். தான் தவறு செய்திருந்தால் கூட, மறைக்காமல், உங்களிடம் சொல்கிற மனப்பான்மை குழந்தைக்கு வந்துவிடும்.விடலைப் பருவத்தினரை நிறைய பேச விடுங்கள்; அதன்பின், உங்கள் ஆலோசனைகளை அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் செய்கிற செயலில் உள்ள நன்மை, தீமைகளை சொல்லி, அதன் பின், 'நீ நல்ல முடிவா எடுப்பேன்னு நம்புறேன்...' என்று சொல்லி, அதற்கு சம்மதியுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த காரியம் தோல்வியில் முடியும் போது, பக்கபலமாக இருந்து, தோல்விக்கான காரணத்தைக் கண்டறிவது தான், உண்மையான நண்பர்களுக்கான செயல்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !