இது உங்கள் இடம்!
கண்ணை மறைத்த புடவை மோகம்!நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.அத்துடன், பீரோவிலிருந்த பட்டுப் புடவைகளின் மீதும் கண் வைத்துள்ளனர். சோகத்தில் பங்கெடுக்க வேண்டியவர்கள், இப்படி மனம் நோகும்படி, புடவைகளை பங்கு போட்டுக் கொண்டது, தோழியின் சோகத்தை அதிகப்படுத்தி விட்டது.பெண்களுக்கு புடவைப் பைத்தியம் இருக்கலாம்; அதற்காக இப்படியா?— லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.மனமே மனமே!என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, அன்பான கணவன், அழகான குழந்தை என, வாழ்க்கை நிறைவாக இருந்தாலும், கை வலி, கால் வலி, தலைவலி என்று எதையாவது ஒன்றை சொல்லி, எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் சுருண்டு படுத்தபடியே இருப்பார்.அவருடைய கணவரும் எல்லா டாக்டர்களிடமும் காண்பித்து விட்டார். அவர்களும், 'உடலில் எந்த கோளாறுமில்ல; மனதில் தான் கோளாறு...' என்று கூறிவிட்டனர்.இதனால், அவரது கணவர், 'நம்மூரிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வா; உன் நோய் குணமாகும். நம்மூர் அம்மன் சக்தி வாய்ந்தவள்...' என்று சொல்ல, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, தினமும், 1 கி.மீ., தூரமுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்பெண்மணி.தினமும் வெளியில் காலார நடந்து போனதில், மனம் லேசாக, தற்போது அவர் சுறுசுறுப்பாகி விட்டார். அம்மன் குணப்படுத்தியதாக நம்பி, இப்போது தினமும் கோவிலுக்கு செல்கிறார். எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எதையும் சாதிக்கலாம்!— கே.செந்தில்ராஜா, பழனி.படிப்பில் கவனம் செலுத்த...என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார். அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!— ஜெ.கண்ணன், சென்னை.'ஹெல்மெட்' தொலையாமல் இருக்க...சமீபத்தில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு ஸ்டிக்கரில் ஏதோ எழுதியபடி இருந்தார். என்னவென்று விசாரித்த போது, 'ஸ்டிக்கரில் என் மொபைல் எண்ணை எழுதி, அதை ஹெல்மெட்டின் உள்பகுதியில் ஒட்டி விடுவேன். அலுவலகம், ஓட்டல், காய்கறிக்கடை என செல்லும் போது எங்காவது மறந்து வைத்து விட்டு வந்தால், மொபைல் நம்பரை பார்த்து கூப்பிடுவர். அதற்காகத் தான்...' என்றார். அவர் கூறியது அருமையான யோசனையாக தோன்றியது. இனி, நானும் அதை கடைபிடிக்க தீர்மானித்துள்ளேன்.வாசகர்களே... நீங்களும் இதை பின்பற்றலாமே!- ஆர்.நாராயணசாமி, ராமநாதபுரம்.மாலையில் விளையாட அனுமதியுங்கள்!கடந்த 1980களில், என் பள்ளிக் காலங்களில், மாலை, 3:00 மணிக்கு மேல்தான், மாணவர்களாகிய எங்களை விளையாட விளையாட்டுத் திடலுக்கு அனுப்புவர். காரணம், மாலை, 3:00 மணிக்கு மேல் வரும் வெயிலில் தான், 'வைட்டசின் டி' சத்து உள்ளது. அதுதான், உடலுக்கு நல்லதும் கூட!'வைட்டமின் டி' சத்துக் குறைவானால், கழுத்தில் கழலைகள் வரக்கூடும். அதனால், அக்காலத்தில் மாலையில் அதுவும் கடைசி பீரியடில் தான், குழந்தைகளை விளையாட அனுமதிப்பர். விளையாடி முடித்த பின் மணியடித்து விடும். பின், வீடு தான்! அப்போதுதான், விளையாடிய களைப்போடு, வீட்டிற்குப் போய் குளிக்க வசதியாக இருக்கும். ஆனால், தற்போது பல பள்ளிகளில், உச்சி வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதிக்கின்றனர்.இந்த வெயிலால் குழந்தைகளுக்கு, தோல் வியாதிகள், தலைவலி மற்றும் நீர்க்கடுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுதவிர, காலை, 11:00 மணிக்கு மேல், கடுமையான வெயிலில் விளையாடி, மீண்டும் வகுப்பறையில் சென்று, வியர்வையோடு உட்கார்ந்தால், பாடத்தில் எப்படி கவனம் போகும்! இதை ஏன் கல்வி அதிகாரிகள் சிந்திப்பது இல்லை?சுற்றுச்சூழல் மாசால் ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர். அதனால், ஆண்டுக்கு ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அது குழந்தைகளின் மென்மையான தோலை பாதித்து, பலவித தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.அதனால், அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளை மாலை, 3:00 மணிக்கு மேல் விளையாட அனுமதிப்பதே, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது. இதை, ஆசிரியப் பெருமக்கள் உணர்வரா?— ஆ.மோகன், அமராவதிபுதூர்.மாத்தி யோசி!என் நண்பர் சிறிய அளவில் ஓட்டல் நடத்தி வருகிறார். சமீபத்தில், அவரின் ஓட்டல் அருகே டாஸ்மாக் கடை வர, வியாபாரம் நன்றாக சூடு பிடித்தாலும், சாப்பிட வரும், 'குடிமகன்'களின் அலம்பல்களால், நிம்மதி இழந்த நண்பர், ஓட்டலை மூடி, வேறு வேலைக்குச் செல்ல முடிவு செய்தார். அதை, அவர் தன் மனைவியிடம் தெரிவித்தபோது, அவர் ஒரு அருமையான யோசனை கூறினார்.அதன்படி ஓட்டலில் சாப்பிடும் மேஜை, நாற்காலிகளை அகற்றிவிட்டு, 'பார்சல் மட்டும்' என்ற போர்டை கடையில் தொங்க விட்டார். வருகிற வாடிக்கையாளர் அனைவருக்கும், பார்சல் மட்டுமே கொடுக்கத் துவங்கினார். ஒரு சில வாடிக்கையாளரை தவிர, மற்ற அனைவரும், உணவின் தரம் காரணமாக, தொடர்ந்து பார்சல் வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர்.'குடிமகன்'களும் பார்சல் வாங்கி, உடனுக்குடன் இடத்தைக் காலி செய்ததால், நண்பர் இப்போது நிம்மதியாக ஓட்டலை நடத்துகிறார். மாற்றி யோசித்து மகிழ்ச்சி தந்த மனைவியை மனதார பாராட்டுகிறார் நண்பர்.— ஆர்.பிரபு, கோவை.