உள்ளூர் செய்திகள்

சொர்க்கத்தை நோக்கி

''ஏண்டா... நானும் ரொம்ப நாளா கூப்டுண்டிருக்கேன்... வரவே மாட்டேங்கறே,'' மொபைலில் கார்த்திகேயனின் அழைப்பு.''எங்கண்ணா வர்றது... ஆபிசிலே வேலை தலைக்கு மேலே இருக்கு... தினமும் ஆபிசை விட்டு கிளம்பறதுக்கே, மணி, 8:00 ஆயிடறது... எனக்கே சொல்லாம கொள்ளாம ஒரு நாலு நாள் எங்கேயாவது போகணும்ன்னுதான் இருக்கு; முடியலயே...''திருவாரூரிலே நான் வேலை பார்த்த போது, என்னுடன் வேலை பார்த்தாள், கார்த்திகேயனுடைய ஒண்ணுவிட்ட தங்கை. அவளை பார்க்க வந்தப்போது, எங்களிடையே பழக்கம் ஏற்பட்டது. அதுக்கப்புறம் சில ஆண்டு கழித்து, ஒரு வேலை விஷயமாக மாயவரம் போயிருந்தப்போ, வலுக்கட்டாயமா வீட்டுக்கு அழைச்சிட்டு போய், அந்த ராத்திரி வேளையிலும் சுடச்சுட சமைச்சுப் போட்டதுடன், காத்தாலே ஊருக்கு கிளம்பும் போது, மார்கழி குளிரில் என்னை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விட்டு... இதெல்லாம் ஏதோ போன ஜென்ம பந்தம்ன்னுதான் சொல்லணும்.எனக்கும் ஆபிசிலே பிரெஷர் கொஞ்ச நஞ்சமல்லே... எப்படி, 'எஸ்கேப்' ஆகலாம்ன்னு யோசிச்சுண்டு இருக்கும்போது தான் என்னோட, லேடி 'பாஸ்' கூப்பிட்டார்.''ஒரு வாரம் பேமிலியோட மலேஷியா, 'டூர்' போறேன்; எதாச்சும் முக்கியமான பைல் இருந்தா இப்பவே கையெழுத்து வாங்கிக்கங்க...'' என்றார்.''எஸ் மேம்...'' என்று சொல்லி, முக்கியமான பேப்பர்களில் கையெழுத்து வாங்கினேன். அப்போதுதான், சட்டென ஒரு யோசனை உதித்தது.''மேம்... நீங்கதான் ஒரு வாரம் இருக்கப் போறதில்லயே... எனக்கு மூணு நாள் லீவு தர்றீங்களா?''''என்ன விஷயம்?''''ஒண்ணுமில்ல... எனக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் தேவைப்படறது; அதான் திருச்சி வரை போயிட்டு வரலாம்ன்னு...''''லீவெல்லாம் வேணாம்; திருச்சியில நம்மோட கிளையன்ட் இருக்காரில்லயா, அவரை பாத்துட்டு வர்றா மாதிரி போயிட்டு, கூடவே ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க... நான், 'பர்மிட்' பண்றேன்.''''ரொம்ப தேங்க்ஸ்...''அடுத்த நாள், குருவாயூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு, 2:00 மணிக்கு திருச்சியில் இறங்கினேன். கிளைன்டை பார்த்தேன். ஆபீஸ் விஷயங்கள பேசி முடித்த பின், சாயங்காலம், திருவிடை மருதுாருக்கு செல்லும், பாசஞ்சர் டிரெயின்ல ஏறி, இரவு, 8:00 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தேன்எனக்காக காத்திருந்தான், கார்த்திகேயன்.என்னுடன் வண்டியிலிருந்து இறங்கிய நடுத்தர வயதுக்காரர், ''யாருங்க சாமி... ஒறவா?'' என்று கார்த்திகேயனிடம் கேட்டார்.''இல்ல மாரிமுத்து... என் நண்பர்,'' என்று கார்த்திகேயன் சொன்னதும், ''அப்டீங்களா... சந்தோஷம் சாமி... கொண்டாங்க பையை, நான் எடுத்தாறேன்,'' என்றார்.''இல்ல வேணாம்; நானே துாக்கிக்குவேன்.''''அட, என்னங்க... இம்மாம் பெரிய பையை எப்படி துாக்குவீங்க... சாமி வீட்டை தாண்டிதான் நான் போவணும்; அப்படியே ஒரு கை துாக்கியாந்துடறேன்,'' என் சம்மதத்தை எதிர்பாராமல் கையிலிருந்த டிராலி பேகை பிடுங்கி, தலை மீது வைத்துக் கொண்டார்.''இங்கே பக்கத்துலதாண்டா வீடு... 2 கி.மீ., இருக்கும்; நானெல்லாம் நடந்தே போயிடுவேன், நீதான் நடக்க மாட்டியே... அதான், டூ - வீலர்ல வந்தேன்,'' என்றார் கார்த்திகேயன்.அடுத்த அஞ்சாவது நிமிடத்தில் வீட்டு வாசலில் இருந்தோம்.''அண்ணா... பையை எடுத்துண்டு போனானே ஒருத்தன்...''''டேய்... இதென்ன சென்னைன்னு நினைச்சியா... நாம வண்டியிலே வந்துட்டோம்; மாரிமுத்து நடந்துதானே வரணும்... இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவார்.'' எனக் கூறியதும், எனக்கு வெட்கமாக இருந்தது. ''அதில்லேண்ணா, அவருக்கு எவ்வளவு குடுக்கறதுன்னு...''''அட பாவி, எதையாவது குடுத்து தொலைச்சுராத, மனசு வருத்தப்படுவார்; உதவி செய்யறதுக்கு காசு வாங்கற கலாசாரம் இன்னும் இங்கே வரல.''அதற்குள், மன்னி வாசலுக்கு வந்து, ''வாங்கோ வாங்கோ... ஆத்துலயும் கூட்டிண்டு வந்திருக்கலாமே...''''இல்ல மன்னி... அவளுக்கு லீவு கிடைக்கல.''''சரி... கை, கால் அலம்பிண்டு வாங்கோ... சாப்டுட்டு பேசலாம்.''''ஒரு பத்து நிமிஷம் மன்னி... நீங்க உள்ளே போங்க... நாங்க வந்துடறோம்.''''அக்னிஹோத்ரம் இன்னும் விட்ட பாடில்லையா... சரி சரி... சீக்கிரம் வாங்கோ!''டிரெயினில் மூன்று மணி நேரம் கட்டிப்போட்டா மாதிரி இருந்தது. ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்.''இன்னுமாடா நீ இந்த பழக்கத்த விடல...''''என்னண்ணா பண்றது... நாள் பூரா ஒரே, 'டென்ஷன்' இதில்லேன்னா ஒண்ணுமே சமாளிக்க முடியாது.''''டென்ஷன நாமளா வரவழைச்சுக்கறது... போதாக்குறைக்கு இந்த சனியன் அதைத் தீக்கறதா ஒரு பிரமை வேற... சரி வா... சாப்பிட்டுட்டு அப்புறமா பேசலாம்!''மன்னியின் இட்லி ரொம்பவே ஸ்பெஷல்; அவ்வளவு சாப்ட்டாக இருக்கும். உணவு கட்டுப்பாடு என்பதையெல்லாம் மறந்து, ஒரு வெட்டு வெட்டினேன். பழங்கால ஓட்டு வீடு; நடுவிலே முற்றம்; மேலே கம்பி போட்டு அதுலே ஏதோ ஒரு கொடி படர்ந்திருந்தது. பாதி நேரம் கரன்ட் இருக்காதாம், அதனாலே, பர்மனெண்டா ஒரு சோலார் இன்வெர்ட்டர் இருந்தது.சாப்பிட்டு முடித்ததும், ''வாடா... கொஞ்சம் காத்தாட வெளியிலே போய் உக்காந்து பேசலாம்,'' என்றார், அண்ணா.திண்ணையில் வந்து உட்கார்ந்தோம். கொசு இருக்குமோ என்று பயந்தேன். ஆனால், என்னவொரு ஆச்சரியம்... ஒரு கொசு கூட இல்லை.''எப்படீண்ணா இங்க கொசு இல்லாம இருக்கு...''''அது ஒண்ணும் பெரிய விஷயமில்லேடா... வீட்டை சுத்தி சாமந்தி, புதினா, நொச்சி மற்றும் துளசின்னு ஏகப்பட்ட மூலிகை செடிகள் இருக்கு; அந்த வாசத்துக்கு கொசு வரவே வராது.''வாசலில் இருந்த வேப்ப மரத்திலிருந்து காற்று வீசியது. 'ஆஹா... எத்தனை, 'ஏசி' இருந்தாலும், இது மாதிரி வருமா...' என, மனம் சிலாகித்தது.மறுபடியும் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தேன்.''இப்போ என்னடா டென்ஷன்?''''இல்லேண்ணா... மனசுல நிம்மதியே இல்ல... எவ்வளவுதான் உழைச்சாலும், சம்பாதிச்சாலும் ஒரு திருப்தி இல்ல... இலக்கை எட்ட முடியலையேன்னு ஆதங்கம். அதனால, மன அமைதியே இல்லாம போச்சு,'' என்றேன்.''எதுதாண்டா உன்னோட இலக்கு... எப்போதான் அதை அடையப் போறே?''அண்ணா அப்படி கேட்டதும்தான் யோசித்தான்... 'எது என்னோட இலக்கு... அது, ஒவ்வொரு ஆண்டும் மாறிண்டேதான் இருக்கு. அதனால, நான் அடையறதும் தள்ளிப் போயிண்டே இருக்கு...'விரக்தியாக சிரித்தேன். அப்போது காற்றில் கலந்து வந்த நாதஸ்வர இசை, என்னை அப்படியே அலை மேல் ஓடமென துாக்கிச் சென்றது. அமாவாசைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன; கரன்ட் இல்லாததால், அங்கொன்றும் இங்கொன்றுமாக வீட்டிலே ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகளின் மெல்லிய சுடர்கள் அசைந்தாடும் அழகு; தெரு முனையில் அவ்வப்போது கத்தும் ஓரிரு நாய்கள்; எங்கோ ஒரு வீட்டில் அழும் குழந்தையை துாங்க வைக்க, ஒரு தாய் பாடும் தாலாட்டு. தொழுவத்திலிருந்து கத்தும் கன்றும், தாய் பசுவின் பதிலும்; துாரத்தில் சைக்கிளில் லைட் இல்லாமல், பாடிக்கொண்டு வரும் ஒரு வழிப்போக்கன்; சில்வண்டுகளின் ரீங்காரம்...திடீரென ஒரு பெருங்காற்று தென்னை மட்டைகளை சிலுப்பி விட, அதிலிருந்து எழும் சத்தம்; இருட்டிலே கண்கள் பளபளக்க எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் பூனை; பெயர் தெரியாத ஒரு பட்சி, மரத்திலே சிறகடிக்க, அதைத் தொடர்ந்து அதன் ஜோடியின் குரல்; நாள்தோறும் நான் கொடுத்துக் கொண்டிருக்கும் விலைக்கு இதெல்லாம் கிடைக்குமா... மனசு லயிச்சு போக, பேச்சு சுத்தமா நின்னு போச்சு; என் மனசை புரிஞ்சுண்ட அண்ணாவும் ஒண்ணுமே பேசலை.ஒரு அரை மணி ஆகிருக்கும், நாதசுரம் நின்றது; சொர்க்கம் கூட நிலையானதில்லைன்னு எனக்கு புரிய வெச்சா மாதிரி இருந்தது.''மகாதேவா... குளிர் உனக்கு ஒத்துக்காது; வா... உள்ளே போய் படுத்துக்கலாம்,'' என்றார் அண்ணா.''இல்லேண்ணா... இந்த அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமா இருக்கு... மனசுக்கு இதமாயிருக்கு. இங்கேயே படுத்துக்கறேனே... நீ வேணும்ன்னா உள்ளே போய் படுத்துக்கோ!''''போடா... நான் முக்காவாசி நாள் வெளியேதான் படுக்கை, நிம்மதியா துாங்குடா.''மனசு ஒரு மாதிரி நிம்மதி அடைஞ்சாலும், யோசனை தான் மிகுந்திருந்தது. கார்த்திகேயனுக்கு, 50 வயசு. ஆனா, ஆறு ஆண்டுக்கு முன், வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு, பூர்வீகமான திருவிடை மருதுாருக்கு வந்துட்டார். இங்கேயே, வீட்டை ஒட்டி, சின்ன கடை ஆரம்பிச்சிருக்கார். கூடவே, விவசாயமும் பண்ணிண்டிருக்கார். ஒரே பையன், சென்னையிலே வேலை பார்த்துண்டு இருக்கான். இன்னிக்கு, அண்ணா வேலையிலே இருந்தா, எப்படியும் மாசம், 80 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார். ஆனா, பையன் காலேஜ் சேர்ந்தவுடனே வேலையை விட்டுட்டார்.நானும், திருவாரூரிலே ஒரு சின்ன கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்தவன், நாலு ஆண்டிலே சென்னைக்கு வந்தப்புறம் எல்லாமே மாறிடுத்து. பந்தய குதிரையாகிட்டேன். போரூரில் மூன்று பெட்ரூம் பிளாட், குன்றத்துார் பக்கத்திலே ரெண்டு கிரவுண்டு நிலம், ரெண்டு கார், பையனுக்கு, கே.டி.எம்., பைக்; ஆனா, இதெல்லாம் போதுமான்னு தெரியல... 'அண்ணா மாதிரி இப்படி ஒரு கிராமத்திலே செட்டிலாக முடியுமா... படிச்ச படிப்பெல்லாம் வீணா போறதுக்கா... இது நாட்டுக்கே செய்யற துரோகமில்லையா...' என்று ஏதேதோ எண்ணியபடி துாங்கிப் போனேன். காத்தாலே மாடுகள் ஓடுகிற சத்தம் கேட்டு விழிச்சேன். கிணத்துலேர்ந்து, தண்ணீர் சேந்தி குளிக்கும்போது, உடற்பயிற்சின்னு தனியா தேவையில்லேன்னு புரிஞ்சது.எட்டு மணிக்கு, மகாலிங்க சுவாமி கோவிலுக்கு கூட்டிண்டு போனார், அண்ணா.''மகாதேவா... ஏன் ஒரு பக்கமாவே திரும்பிண்டிருக்கே... கழுத்து சுளுக்கா?'' என்று கேட்டார், அண்ணா.''ஆமாண்ணா... லேசா தான் இருக்கு; ஒரு மாத்திரை போட்டா சரியா போயிடும்.''''அடப்போடா... எல்லாத்துக்கும் மாத்திரையா... வா, சலுானுக்கு கூட்டிண்டு போறேன்; அவன் கழுத்தை நீவி, தலைய, 'மசாஜ்' பண்ணா, சுளுக்கு பறந்து போயிடும்,'' என்றார்.கொஞ்ச துாரம் போன உடனே, 'சரவணன் அழகு நிலையம்' வந்தது; ரேடியோவில் ஏதோ பழைய பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு தமிழ் பத்திரிகையும், ஒரே ஒரு சேர் தான் இருந்தது; அதுவும், ஆளில்லாமல்!''வாங்கண்ணே... உக்காருங்க, டீ சாப்பிடறீங்களா?''''இல்ல சரவணா... இவன் என்னோட தம்பி மாதிரி, சென்னையிலேர்ந்து வந்துருக்கான்; கழுத்து சுளுக்கு பிடிச்சுக்கிடுச்சு, கொஞ்சம் நீவி விடணுமே...''''அதுக்கென்னண்ணா... செஞ்சா போச்சு.''என்னை சேரில் அமர வைத்தான்; கழுத்திலே ஒரு துண்டை போட்டு வேலையை ஆரம்பித்தான். கையிலே வித்தை வைத்திருந்தான்.கொஞ்ச நேரத்தில் அப்படியே சுகானுபவ நிலையில் துாக்கம் வந்தது.''இப்போ கழுத்த திருப்புங்க சார்,'' என்ற குரல்தான் என்னை எழுப்பியது.கழுத்து சுலபமாக திரும்பியது; பர்சை திறந்தேன், ''அண்ணா... எவ்வளவு குடுக்கணும்?''''என்னண்ணே இதுக்கு போயி காசு வாங்குவாங்களா... நாங்க பரம்பரையா இந்த ஊருக்கு மருத்துவர்கள்ண்ணா... இப்போதான் டாக்டர்ன்னு வந்துட்டாங்க. ஆனா, கை வைத்தியத்துக்கு நாங்க தான்; கட்டிங், ஷேவிங் பண்ணா காசு வாங்கிக்கலாம்; இதுக்கெல்லாமா...''என் பார்வையில் உயர்ந்து நின்றான், சரவணன்.''சரவணா... நேத்தைக்கு ராத்திரி உன்னோட நாதம், அவன துாங்கப் பண்ணிச்சு... இப்போ அவன் கழுத்துலே கை வெச்சு துாங்க வச்சுட்டே...'' என்று கார்த்திகேயன் சொன்னதை கேட்டதும், துாக்கி வாரிப் போட்டது.''நீங்களா ராத்திரி நாதஸ்வரம் வாசிச்சது...'' என்றேன் ஆச்சரியத்துடன்!''ஆமாங்கண்ணே... அடுத்த வாரம் ஆடுதுறை அம்மன் கோவில் திருவிழாவிலே வாசிக்க கூப்பிட்டிருக்காங்க... அதான், கொஞ்சம் பயிற்சி எடுத்தேன்.''''சரவணன்... உங்க வாசிப்பு என்ன ஒரு மந்திரஜாலமா இருந்தது தெரியுமா... என்னோட சென்னைக்கு வாங்க, உங்கள பெரிய ஆளா ஆக்கி காட்டறேன்,'' என்றேன்.''எதுக்குங்க அதெல்லாம்...''''என்ன சரவணன் இப்படி சொல்லிட்டீங்க... இந்த கிராமத்துல உங்களோட நாதத்தை ரசிக்க எத்தனை பேர் இருப்பாங்க... சென்னைக்கு வந்தீங்கன்னா, உங்க இசையை ரசிக்கற ஆயிரக்கணக்கான பேருக்காக நீங்க வாசிக்கலாம்.''''ரசிகனுக்கு ஏத்தா மாதிரி வாசிக்கறவன் கலைஞனா சார்... வாசிக்கறது நமக்காகத் தானே...'' என்றான்.அவன் கேட்டது, பொட்டில் அறைந்தாற் போல் இருந்தது.''அதில்ல சரவணன்... உங்க திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணுமில்லயா....''''அங்கீகாரத்தை தேடி ஓடறது திறமையா... சினிமாவிலே காசு வாங்கிட்டு நடிக்கிறவங்களெல்லாம் காதல் மன்னன்னு பேர் வாங்கறாங்க. ஆனா, நிஜ வாழ்க்கையிலே காதலிச்சு கல்யாணம் செஞ்சு, சந்தோஷமா வாழறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு அங்கீகாரம் இல்லேங்கறதால அவங்க காதல் நிஜமில்லன்னு ஆயிடுமா; இல்லே சினிமா காதல் தான் ஒசத்தியாகுமா...'' என்றான்.அடிமேல் அடி விழுந்தது.''சரவணன், இங்கே இப்படி கஷ்டப்பட்டிருக்கீங்களே... அங்கே வந்தா, உங்க திறமையால நல்லா சம்பாதித்து, சவுகர்யமா இருக்கலாமே...''''எதுங்க சவுகர்யம்... இங்கே சந்தோஷம் இல்லன்னு யார் சொன்னா... பணத்துனால சந்தோஷத்தை குடுக்க முடியும்ன்னு நம்பினோம்ன்னா அதுதான் பிரச்னையே... பணம் என்பது அடிப்படை தேவைகளுக்காக இருக்கணும்; ஆனா, பணமே பிரதானம்ன்னு இருந்தா நிம்மதி போயிடும். இப்போ கழுத்து சுளுக்கு எடுத்ததுக்கு காசு வாங்கியிருந்தா, என்னையும் மத்தவங்க மாதிரிதானே கூலிக்கு மாரடிக்கறவனா நினைச்சிருப்பீங்க... ''பணத்தால வசதிகள் வரலாம், நிம்மதியும், மதிப்பும் வருமா... ஏதோ சாப்பாட்டுக்கு குறை இல்லாம இருக்கு; மனசுக்கு பிடிச்சப்போ அந்த மகாலிங்க சுவாமியை நினைச்சுண்டு, அவருக்காக மட்டும் வாசிக்கறேன். அதைக் கேட்டு மத்தவாங்களும் சந்தோஷப்பட்டா மனசுக்கு திருப்தி; இதுக்கு மேலே வேற என்ன வேணும்...'' என்றான்.நிம்மதியின் சூத்திரம் புரிந்தது; வீட்டுக்கு வந்ததும், கார்த்திகேயனிடம் சொன்னேன்... ''எனக்கும் இங்கேயே ஒரு வீடு பாருண்ணா...'' ஸ்ரீஅருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !