உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —என் வயது: 70, கணவர் வயது: 76. இருவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சொந்தமாக, இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு உள்ளது. எங்களுக்கு இரு மகள்கள். இருவருக்குமே திருமணமாகி, டில்லியில் ஒருத்தி, அமெரிக்காவில் ஒருத்தி என, அவரவர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கணவருக்கு, சுகர், பி.பி., ஆஸ்துமா என, பல பிரச்னை உள்ளது. சமீபத்தில், கீழே விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்து, சிகிச்சை பெற்று ஓரளவு தேறியுள்ளார். வீல் சேரில் தான், அவர் நடமாட்டம் எல்லாம்.ஹோட்டல் சாப்பாடு இருவருக்குமே ஒத்துக் கொள்ளாததால், சமையல் நான் தான் செய்வேன். என்னால் முடிந்த அளவுக்கு சிம்பிளாக செய்து கொடுப்பேன். காலை வேளை மட்டும், வேலைக்காரம்மா வந்து, வீடு பெருக்கி, துணி துவைத்து கொடுப்பாள். முழு நேர பணியாளரை நியமிக்கவும் பயமாக இருக்கிறது.இந்நிலையில், சமீபத்தில், ஒருநாள், எனக்கு தலைசுற்றல் மற்றும் வாந்தியும் தொடர்ந்து இருக்க, மருத்துவமனைக்கு சென்றேன். பலவகை பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனையின் முடிவில், எனக்கு மார்பில் புற்றுநோய் பாதித்துள்ளதை தெரிவித்தனர். தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினர். வேறு வழியில்லாமல், சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டேன். ஒவ்வொரு முறை சிகிச்சை முடிந்து வரும்போது, உயிர் போய் வருவது போல் இருக்கும். கணவரை தனியாக விட முடியாது என்பதால், வலியை பொறுத்துக் கொண்டேன்.மகள்கள் இருவருக்கும், வேலை, பிள்ளைகளின் படிப்பு என, இங்கு வந்து தங்க முடியாத நிலை. பெங்களூரில் வசிக்கும் என் தங்கை மட்டும், இரண்டு மாதம் தங்கி, எனக்கு துணையாக இருந்தாள். அவளுக்கும், 65 வயதுக்கு மேல் ஆகிறது. அவளது கணவரையும் கவனித்துக் கொள்ள வேண்டி இருந்ததால், திரும்ப சென்று விட்டாள்.நோயின் தாக்கம், தனிமை, கணவரது நிலைமை எல்லாம் சேர்ந்து, மன அழுத்தத்துக்கு ஆளானேன். வீட்டுடன் தங்க, நர்ஸ் ஏற்பாடு செய்தும், பயனில்லை. ஒரே வாரத்தில் நின்று விட்டாள்.முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்றால், நோயாளிகளான எங்களை வைத்து, பராமரிக்க முடியாது என, கைவிரித்து விட்டனர்.அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ஏதோ வாழ்ந்து வருகிறோம். எங்களை வைத்து பராமரிக்கும் இல்லம் ஏதாவது இருந்தால் சொல்லவும். மருத்துவமனை எதிலாவது தங்கி, அங்கேயே மீதியுள்ள எங்கள் காலத்தை முடித்து கொள்ள இயலுமா? தங்கள் ஆலோசனையை தரவும். — இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —நீங்களும், உங்கள் கணவரும், 70 வயதை தாண்டியவர்கள். இருவருமே பழைய ஓய்வூதிய திட்டத்தில் தான் இருப்பீர்கள். உங்கள் இருவரின் ஓய்வூதியம், ஒரு லட்சம் ரூபாயை தாண்டும்.நீங்கள் செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன் கேளுங்கள்...1. உங்களின் சொந்த வீடு, தனி வீடு. வீடு இருப்பது சென்னையில். வீடு குறைந்தது ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும். வரி போக மிஞ்சிய பணத்தை, மூன்று பங்குகளாக பிரியுங்கள். இரு பங்குகளை, இரு மகள்களுக்கு கொடுங்கள். ஒரு பங்கை, உங்கள் இருவர் கூட்டு கணக்கில் நிரந்தர வைப்பாக போடுங்கள். 2. சென்னை நகரில், மாதம் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு கட்டணம் செலுத்தி தங்கும், 10 முதியோர் இல்லங்களை பார்ப்போம்... * ஸ்ரீவித்யா ட்ரஸ்ட் - 1,000 ரூபாய்.* நேச்சுரல் விஸ்டம் ட்ரஸ்ட் - -2,500 ரூபாய்.* ஆராதனா - 10 ஆயிரம் ரூபாய்.* பிலிவபிள் சீனியர் சிட்டிசன் வில்லா (மொபைல் எண்: 08825803812) - 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை.* மை கேர் ஓல்டு ஏஜ் ஹோம் -- 7,500 ரூபாய்.-* காக்கும் கரங்கள் - -3,000 ரூபாய்.* வெற்றி ஓல்டு ஏஜ் ஹோம் -(மொபைல் எண்: 090254 36353) - 10 ஆயிரம் ரூபாய். இரட்டை படுக்கை அறைக்கு, 15 ஆயிரம் முதல் -25 ஆயிரம் ரூபாய் வரை. * ஸ்ரீ பூர்ணா மஹா மேரு ட்ரஸ்ட் --- 4,000 ரூபாய். * பிருந்தாவனம் ஓல்டு ஏஜ் --(மொபைல் எண்: 094447 77925) - 18 ஆயிரம் ரூபாய்.* அதுல்யா -(மொபைல் எண்: 98849 45900) - 50 ஆயிரம் -- 60 ஆயிரம் ரூபாய். முதிய தம்பதிகளுக்கு 75 ஆயிரம் - 90 ஆயிரம் ரூபாய். இதுவரை இங்கு, 30 ஆயிரம் முதியோர் பராமரிக்கபட்டுள்ளனர். 1,000 ஊழியர்கள். ஐந்து நகரங்களில் பத்து கிளைகள். எட்டு ஆண்டு அனுபவம் உள்ளவை.இவர்களிடம் செவிலியர் அணியும், மருத்துவ அவசர பணியாளர்களும், மூத்தகுடி மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன.இங்கு மருத்துவம், தங்குமிடம், உணவு, தனிமையை போக்கும் சக முதியவர்கள், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு அனைத்தும் எந்நேரமும் கிடைக்கும்.உங்களின் ஓய்வூதியம் முழுக்க, முதியோர் இல்லத்தில் தங்குவதற்கு செலவானாலும் பரவாயில்லை. சுகமாக, நிம்மதியாக, ஆறுதலாக, வசதியாக இருங்கள். உங்கள் மார்பக புற்று நோய்க்கு தொடர்ந்து மருத்துவம் பாருங்கள். பிசியோதெரபி தொடர்ந்தால், உங்கள் கணவர் எழுந்து நடப்பார் பாருங்கள்.யாரிடமும் கெஞ்ச வேண்டாம்; யார் தயவிலும் வாழ வேண்டாம்.அடுத்த, நான்கு ஆண்டுகள் உடல், மன சிரமங்கள் இல்லாமல் கண்ணியமாக கழியுங்கள். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும், இறைவன் தரும் போனஸ் வாழ்நாள் தான்.நீங்கள் இருவரும் விருப்பப்பட்ட நாட்களில், இருமகள்கள் குடும்பம் உங்களிடம் வந்து போகட்டும்.ஓம் நமோ பகவதே வாசுதேவாய!— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !