அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 25 வயது பெண். படிப்பு: பி.காம்., தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, தற்சமயம் வேலையிலிருந்து நின்று விட்டேன். அங்கு பணிபுரியும் போது, என்னுடன் வேலை செய்தவர், என்னை விரும்பினார். முதலில் தயங்கினேன். அவரது, 'டீசன்ட்'டான அணுகுமுறை மற்றும் நடவடிக்கைகளை பார்த்து, நானும் விரும்ப ஆரம்பித்தேன்.அவருடன் பிறந்த ஒரு தங்கை உண்டு. 'தங்கைக்கு திருமணம் முடிந்ததும், நாம் திருமணம் செய்து கொள்ளலாம்...' என்றார்; நானும் சம்மதித்து, அவருடன் பழகி வந்தேன்.அவருக்கு சமீபத்தில் அரசு வேலை கிடைத்து, வெளியூர் சென்று விட்டார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வருபவர், தவறாமல் என்னை சந்திக்க வருவார். நானும், வேறு வேலைக்கு முயற்சி செய்து வருவதால், 'உங்கள் ஊரிலேயே ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்து தாருங்கள்...' என்றேன்.'நிச்சயம் செய்கிறேன்...' எனக் கூறினார்.எங்களது காதல் விவகாரம், என் பெற்றோருக்கு தெரியாது. ஆனால், அவரது பெற்றோருக்கு தெரியும். 'மகள் திருமணத்துக்கு பின், உங்கள் வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறோம்...' என்றனர். அதன்பின், ஊருக்கு வரும்போதெல்லாம் என்னுடன் நெருங்கி பழகியும், பலமுறை உறவும் கொண்டார். திருமணம் தான் செய்ய போகிறோமே என, நானும் உடன் பட்டேன்.சமீபகாலமாக, ஊருக்கு வருபவர், என்னை புறக்கணிக்க ஆரம்பித்தார். பலமுறை காரணம் கேட்டும், 'ஒன்றுமில்லை...' எனக் கூறி சென்று விடுகிறார்.ஒருநாள், 'நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்...' என்றார். துடித்து போனேன். நானே வலிய சென்று பேசினாலும், பேச மறுத்து விடுகிறார்.காரணம் தெரியாமல் மன உளைச்சல் அதிகமாகிறது. அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எப்படி? ஆலோசனை தாருங்கள், அம்மா. — இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, ஓர் ஆண், சாதாரண குடிமகனாக இருக்கிறான். அரசு வேலை கிடைத்ததும், அவனுக்கு இரண்டு கொம்புகளும், ஒரு கிரீடமும் வந்து, குறுநில மன்னன் ஆகிவிடுகிறான். சம்பளம் அதிகம், பொறுப்புகள் குறைவு, சலுகைகள் அபரிமிதம்.தனியார் துறையில் வேலை செய்யும் போது, அவன் உன்னை காதலித்தான். அரசு வேலை கிடைத்ததும், உன் உறவு எட்டிக்காயாக கசக்கிறது. துணையாக, ஒரு குறுநில இளவரசியை தேடுகிறான் அல்லது அப்படி ஒரு இளவரசி கிடைத்து விட்டாளோ என்னவோ?திருமணத்துக்கு பின் கிடைக்க வேண்டிய தாம்பத்ய சந்தோஷத்தை, சிறு தயக்கமும் இல்லாமல் காதலர்களுக்கு வாரிவழங்கி விடுகின்றனர், காதலியர். எதிர்பார்த்தது பலமுறை கிடைத்ததும், ஆணுக்கு, பெண்ணின் மீதான ஆர்வம் மங்கி, மறைந்து விடுகிறது. கூடுதலாய் பணமும், வசதிகளும், நகைகளும் இருக்கும் தராசு தட்டு கனக்கிறது. குரங்கு கிளை தாவி விடுகிறது.இதை நீ, யாரிடம் போய் முறையிடுவாய்?உன் பெற்றோரிடம்?உன், 'மாஜி' காதலனின் பெற்றோரிடம்?காவல்துறையிடம்?எங்குமே நீதி கிடைக்காது; இழிவுபடுவது தான் மிச்சம்.முழு எண்ணெய் குளியல் நிகழ்த்தி, காதலனை உள்ளும், புறமும் தலை முழுகு. 'மாஜி' காதலனின் மொபைல் போன் எண்ணை, 'பிளாக்' செய்.வேறெந்த எண்களிலிருந்தும், 'மாஜி' காதலன் முயற்சித்தால், உன் போன் எண்ணை மாற்று. நீயும், அவனும் இருக்கும் ஒளிப்படங்களை அழி. அவன் கொடுத்த பரிசு பொருட்களை துாக்கி எறி.எதற்கு வேலையை விட்டு நின்றாய்?தனியார் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேலை வேண்டி, விரும்பி அதில் சேர்.தொடர்ந்து படி.எப்படியும் இன்னும் ஆறே மாதங்களில் உன், 'மாஜி' காதலன், ஒரு புளியம்கொம்பாய் பார்த்து திருமணம் செய்து கொள்வான்.திருமண மண்டபம் இருக்கும் தெரு பக்கம் கூட போகாதே.அடுத்து, எந்த புதிய காதலிலும் இறங்காதே.பழிவாங்கும் எண்ணத்தை விடு. மகிழ்ச்சி, வெளியில் இல்லை. நமக்குள் தான் இருக்கிறது. இருக்கும் மனநிலையிலேயே மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்.ஒரு ஆண்டுக்கு பின், உன் பெற்றோர் உனக்கு வரன் பார்க்கட்டும்.ஜாடிக்கேத்த மூடியாய், ஒரு வரன் பார்த்து மணந்து கொள். இருவரின் சம்பளம், கடன் இல்லா வாழ்க்கையை பரிசளிக்கும்; வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.