உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரி - நான், 50 வயது பெண். கணவர் வயது 54. கணவருக்கு, தனியார் நிறுவனத்தில் பணி. நாங்கள் இருவருமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டோம். கணவரின் உடன் பிறந்தவர்கள் இரு தங்கைகள், ஒரு தம்பி. இவர்கள் அனைவரையும் என் கணவர் தான் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தார். எங்களுக்கு ஒரு மகன், வயது: 31. இரு மகள்கள். மகள்களுக்கு 28 மற்றும் 26 வயதாகிறது. இவர்களை படிக்க வைக்க, நானும், கணவரும் கடுமையாக உழைத்தோம். மகன் நன்கு படித்து, ஐ.டி., பணியில் சேர்ந்தான். குடும்பம் ஓரளவு தலை நிமிர்ந்தது. தன் இரு தங்கைகளுக்கும், மகனே திருமணம் செய்து வைத்தான். மகன், அமெரிக்காவில் வேலை கிடைத்து போனான். அவனுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து, நிச்சயம் செய்தோம். பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அமெரிக்க அரசின் முடிவால், என் மகனுக்கு வேலை போய்விட்டது. இங்கேயே திரும்பி வந்து, வேறு வேலைக்கு முயற்சி செய்ய சொன்னோம். அவனும் இந்தியா திரும்பி விட்டான். இன்னும் சரியான வேலை அமையவில்லை. இந்த விஷயம் கேள்விப்பட்டு, பெண் வீட்டினர், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து, தங்கள் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொள்வதாக கூறி, சென்று விட்டனர். என் மகன் மிகவும் நொந்து போனான். அவனது நிலையை நினைத்து மிகவும் கவலையாக இருக்கிறது. 'என் தகுதிக்கு, நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்...' என்று நம்பிக்கையாக மகன் சொன்னாலும், எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 'மீண்டும், வெளிநாடு எங்காவது சென்று வேலை தேடிக் கொள்கிறேன்...' என்கிறான். எங்களுக்கு தான் அவனை அனுப்ப விருப்பமில்லை. என் கணவரின் முகத்தில், சிரிப்பை பார்த்தே பல ஆண்டுகளாகி விட்டது. அடிக்கடி அவர் உடல்நிலையும் பாதிப்படைகிறது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. நல்ல வழி காட்டுங்கள், சகோதரி. - இப்படிக்கு, உங்கள் சகோதரி. அன்பு சகோதரிக்கு - முப்பது ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஓர் அரசுபணியில் சேர்ந்தால் போதும், மாதாமாதம் சம்பளம், பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம், ஓய்வூதியதாரர் இறந்தபிறகு ஓய்வூதியரின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு. தனியார் பணியில் சம்பளம் குறைவு. பெரும்பாலும் ஓய்வூதியம் இல்லை. ஆனால், பணிக்கொடை உண்டு. குறைந்தபட்ச பணி பாதுகாப்பு உண்டு. இப்போது நிரந்தர பணி என்று ஏதும் இல்லை. பணிபுரிவோரின் மற்றும் தனியார், அரசு நிர்வாகத்தினரின் மனோபாவங்கள் மாறி விட்டன. பணியை கொடுத்து சம்பளம் வாங்குவது, பணியை பெற்று சம்பளம் கொடுப்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த பண்டமாற்று ஆகிவிட்டது. விசுவாசம் என்பது ஊழியருக்கு தேவையில்லை. நன்றி உணர்ச்சி என்பது பணியமர்த்தும் நிறுவனத்திற்கு தேவையில்லை. தற்சமயம் படிப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் பணி கிடைக்கிறது. பணி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீட்டில் இருந்தபடி செய்யும் பணியாகவோ இருக்கலாம். லட்சக்கணக்கில் சம்பளம். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோருக்கு, 45 வயதிற்கு மேல் பணி உத்தரவாதம் இல்லை. பழையவருக்கு கொடுக்கும் சம்பளத்தில், புதியவர் நால்வரை பணியமர்த்தி பயனடைகிறது பன்னாட்டு நிறுவனம். ஒரு விஷயத்துக்கு சந்தோஷப்படு சகோதரி. பணியில் இருக்கும் போதே உங்கள் மகன், தன் இரு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டான். இல்லையென்றால் பெரும்பாரம் உங்கள் மேல் தான். வேலை இழந்து இந்தியா திரும்பிய உன் மகனுக்கு வரன் தட்டிபோனதில் வருத்தப்படாதே. திருமணத்திற்கு பின் உன் மகன் அமெரிக்க வேலையை இழந்திருந்தால் மணமகள் வீட்டார் என்ன செய்திருப்பர்? ஒரு வாசல் கதவை மூடினால், பல வாசல் கதவுகளை திறந்து வைப்பான், இறைவன். எனக்குத்தெரிந்த குடும்பத்தின் ஆண் அமெரிக்காவில் பணிபுரிந்தார். வேலை இழந்து இந்தியா வந்து பெங்களூருவில் பணிபுரிந்தார். பின் முட்டிமோதி மெக்ஸிகோவுக்கு குடும்பத்துடன் போய் வேலை செய்கிறார். அமெரிக்க வேலையில் கிடைத்த சம்பளத்தில், 75 சதவீதம்தான் மெக்ஸிகோவில் இருந்தாலும் பணி திருப்தியில் திளைக்கிறார். தொடர்ந்து உங்கள் மகனை உள்நாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் வேலை தேடச் சொல்லுங்கள். வெளிநாட்டில் உங்கள் மகனுக்கு வேலை கிடைத்தாலும் அனுப்ப தயங்காதீர்கள். மனதளவில் எங்கும் பணிபுரிய உங்கள் மகன் தயாராக இருந்தால், 'சென்டிமென்ட்' என்ற தடுப்பு சுவரை கட்டக்கூடாது. உங்கள் மகனுக்கு புதிய வேலை கிடைத்தபின் அவனுக்கு வரன் பாருங்கள். உள்நாட்டில் வேலை கிடைத்தால் அவனுக்கு திருமணம் செய்துவைத்து அவனுடன் போய் செட்டிலாகுங்கள். உன் கணவர், பாசத்தை மகன் மீது மட்டும் வைக்காமல், இரு மகள்கள் மீதும் இரண்டு பங்கு பாசத்தை காட்டச் சொல். மகனின் வேலை மற்றும் திருமணம் அமைய இறைவனின் அனுகிரகத்தோடு முயற்சிகளை தொடருங்கள். சுயபச்சாதாபத்தை உதறித்தள்ளுங்கள். கணவருக்கு அனுசரனையான வார்த்தைகளை கூறி அமைதிப்படுத்தவும். எல்லாம் நல்லதே நடக்கும் சகோதரி. - என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Natarajan K V
நவ 10, 2025 08:54

not sure you could Read my msg.. proud family members. as parents you both should be confident to face the challenges. the way you behave, talk , support he supposed to come out from this hurdles. there multiple ways to make money and make a comfortable life. the way you narrated it looks he doesn't have job for 3-4 years. think differently. resart the life with open minded (take Japan comeback). if needed you can pickup good girl from orphanage. your stress will be out( don't worry about anyone who is not with you. resart and live the life happily.all the best


Anantharaman Srinivasan
நவ 09, 2025 19:09

சகோதரி உன் ஆதங்கம் புரிகிறது. தற்சமயம் உன் மகனின் கிரகநிலை கோசார ரீதியாக சரியில்லாமலிருக்கும். தை பிறந்தால் நிச்சயம் வழி கிடைக்கும். குல தெய்வத்தை வேண்டுக்கொள்.


Venkatesan Ramasamay
நவ 09, 2025 12:34

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு..எதுவும் நடக்குமா உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா..அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா.. கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்..வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்..நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்