அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு - நான், 38 வயது ஆண். அரசு வங்கியில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறேன். என் மனைவி வயது: 34. பள்ளி ஆசிரியையாக இருக்கிறாள். ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். நாங்கள் எவ்வளவு சம்பாதித்தும், சேமித்து வைக்க முடியவில்லை. காரணம், என் மனைவியின் ஊதாரித்தனம். அவள், என்னை, 'ஓட்டைக் கை' என்று மற்றவர்கள் முன் குற்றம் சாட்டுவாள். எனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. என்னுடன் பணிபுரிபவர்கள் அனைவரும் சொந்தமாக வீடு வாங்கி விட்டனர். நானும், சொந்தமாக ஒரு, 'பிளாட்' வாங்கணும் என்று நினைத்தாலும் முடியவில்லை. எனக்கு அம்மா மட்டும் தான். அம்மாவுக்கும், மனைவிக்கும் ஒத்து வராததால், அம்மா, கிராமத்தில், சொந்த வீட்டில் வசிக்கிறார். மாதம், 2 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைப்பேன். எனக்கு இரு சகோதரிகள். அவர்களுக்கு திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர். பொங்கல், தீபாவளி என்றால், புடவை வாங்கி அனுப்புவேன். அவ்வளவு தான், என் பக்கத்து செலவு. என் மனைவியின் பக்கம் சொந்தங்கள் அதிகம். நான்கு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், பெற்றோர், தாய் மாமன் குடும்பம் என்று பெரிய குடும்பம். இவர்களில், யாராவது குடும்பத்துடன், மாதத்தில் 15 நாட்கள் போல், எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி செல்வர். அப்போது, மட்டன், சிக்கன் என, வீடே அமர்க்களப்படும். இதுதவிர, வந்தவர்கள், ஊர் சுற்ற, 'ஷாப்பிங்' செல்ல, ஹோட்டலுக்கு என, கார் ஏற்பாடு செய்து அனுப்புவாள், என் மனைவி. அவளது பெரிய அண்ணனின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. அதற்கு, அத்தை சீர் என, மூன்று சவரன் செயின், பட்டுப்புடவை வாங்கி கொடுத்தாள். அடுத்தடுத்த அண்ணன்களுக்கு பெண் குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு எவ்வளவு செலவு வைக்கப்போகிறாளோ தெரியவில்லை. அவள் அப்பாவுக்கு சிறுநீரக கல் அகற்றும் அறுவை சிகிச்சை, அம்மாவுக்கு கண் ஆபரேஷன், அவளது கடைசி தங்கையின் பெண் பார்க்கும் படலம் எல்லாம் என் வீட்டில், என் செலவில் தான் நடந்தேறின. என் மைத்துனர் ஒருவர், பெரிய வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்தார். புதுமனை புகுவிழாவில், அத்தனை பேர் முன்னிலையில், 'என் வீட்டுக்காரர் வங்கியில் வேலை செய்கிறார் என்று தான் பேர். நாலு காசு சேர்த்து, இதுபோல் வீடு கட்டுவோம்ன்னு எண்ணமே கிடையாது. மாதம் தவறாமல், அவர் அம்மாவுக்கு பணம் அனுப்புவது மட்டும் நிற்காது...' என்றாள். உடனே அவளது அண்ணன்களும், 'என்ன மாப்பிள்ளை தங்கச்சி சொல்றதும் நியாயம் தானே...' என்று கேட்டு, குற்றம் சாட்டுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், அவர்களது தங்கை தான் என்று புரிகிறதா அல்லது புரியாதது போல் நடிக்கின்றனரா என்று தெரியவில்லை. இப்போது, நான்கு மாதங்களாக, மனைவியிடம் பேசுவதில்லை. என் மீது ஏதாவது தவறு இருக்கிறதா அம்மா. தவறு இருந்தால் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். - இப்படிக்கு, உங்கள் மகன். அன்பு மகனுக்கு - நீ பெற்ற தாய்க்கும், உடன் பிறந்த சகோதரிகளுக்கும் ஓர் ஆண் செய்ய வேண்டியவைகளை செய்கிறாய். ஆண்டுக்கு, 30 ஆயிரம் செலவு. ஆனால், உன் மனைவி ஓர் ஆடம்பரப் பிரியை. வீண்பெருமைக்காக அகலக்கால் வைக்கும் ரகம். பிறந்த வீட்டு பிரியை. அவளின், ஆண்டு செலவு லட்சங்களைத் தாண்டும். அவளின், 'நியூரான்' செல்களை, அறியாமை அப்பியிருக்கிறது. அவளுக்கு நீதான் வேப்பிலை அடித்து, அவளை பீடித்திருக்கும் ஆடம்பர மோகினியை விரட்ட வேண்டும். நீயும், உன் மனைவியும் தனியே பேசுங்கள். உங்கள் இருவரின் மாத சம்பளம் என்ன? மாத வீட்டுச் செலவு என்ன? சென்ற ஆண்டு செய்த ஆடம்பர செலவு என்ன? எல்லாவற்றுக்கும் கணக்கு எழுதுங்கள். ஆண்டுக்கு உன் தாய்க்கும், சகோதரிகளுக்கும் செலவு செய்ய, 30 ஆயிரம், 'பட்ஜெட்' ஒதுக்கு. உன் மனைவி அவளது குடும்பத்தாருக்கு செலவு செய்ய ஆண்டுக்கு, 60 ஆயிரம், 'பட்ஜெட்' ஒதுக்கு. இருதரப்பு உறவினர்கள் யார் வந்தாலும், மூன்று நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை. கார், 'ஷாப்பிங்,' தடபுடல் விருந்து எதுவும் கிடையாது. யாரிடமும் மொய் வாங்க வேண்டாம்; மொய்யும் கொடுக்காதீர்கள். மொய் கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால், ஆயிரம் ரூபாய் வைத்துக்கொடுங்கள். ஆரம்பத்தில், இழிவாக பேசுவர். சில நாட்களில் உங்கள் பழக்க வழக்கம் புரிந்து, உறவினர்கள் அமைதியாகி விடுவர். இருதரப்பு உறவினர்களிடம் நீ, உன் மனைவி பற்றியோ, உன் மனைவி, உன்னை பற்றியோ இழிவாக விமர்சிக்கக் கூடாது என, வாய்வழி ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். மாமனார் - மாமியாரின் மருந்து செலவை முழுவதும் ஏற்றுக்கொள்ளாமல் இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். தபால் அலுவலகத்தில் நீயும், உன் மனைவியும் தனித்தனி வங்கிக்கணக்கு ஆரம்பியுங்கள். சேமிப்பே முதல் செலவாக இருக்கட்டும். நீ மாதம், 10 ஆயிரம் ரூபாய், உன் மனைவி மாதம் 10 ஆயிரம் ரூபாய். ஆண்டுக்கு இருவரின் சேமிப்புத் தொகை, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். ஒரு மனையை கையில் இருக்கும் தொகையை கொடுத்து வாங்கி, மீதித்தொகையை வங்கியில் கடனை பெற்று செலுத்துங்கள். மனையை உங்களிருவர் பெயரில் வாங்குங்கள். இடையில் பெரிய தொகை கிடைத்தால் வங்கி கடனுக்கு பயன்படுத்தலாம். மனை கடனை அடைத்த பிறகு, மீண்டும் வங்கி கடனில், வீடு கட்டலாம். மனைவியிடம் பேசாமல் இருந்தால் பிரச்னை தீருமா? ஆடம்பரம் குடும்பத்தை பீடிக்கும் புற்றுநோய். உறவினர்களிடம் மிதமிஞ்சிய அன்பை, செலவு செய்வோம்; பணத்தை அல்ல. சிக்கனத்தின் ருசியை உன் மனைவிக்கு சொல்லிக் கொடு, பற்றிக் கொள்வாள். - -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.