உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு - நான், 45 வயது ஆண். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், மேனேஜராக உள்ளேன். எனக்கு இரண்டு தம்பிகள். எனக்கும், முதல் தம்பிக்கும், திருமணமாகி விட்டது. அப்பா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று விட்டார். நாங்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கிறோம். இரண்டாவது தம்பிக்கு வயது, 32. எம்.ஏ., பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தோம். நிச்சயதார்த்தம் வரை வரும், ஆனால், நிச்சயதார்த்தம் நடைபெறாது. பெண் வீட்டாரிடம் விசாரித்தால், மழுப்பலான பதில் வரும். கடைசியாக பார்த்த பெண் வீட்டினரும், இப்படியே பின் வாங்க, வலுக்கட்டாயமாக காரணத்தைக் கேட்டோம். என் தம்பிக்கு, ஏற்கனவே திருமணமாகி விட்டதாக, ஊரில் யாரோ புரளி கிளப்பிவிட்டுள்ளனர். அதை நம்பி தான் பெண் வீட்டினர், திருமணத்துக்கு மறுத்துள்ளனர். இதனால், மிகவும் விரக்தி அடைந்துள்ளான், தம்பி. நானும், அவனது நண்பர்களும் ஆறுதல் கூறி, சமாதானப்படுத்தி வருகிறோம். இந்நிலையில், தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை விரும்புவதாக கூறினான், தம்பி. அந்த பெண்ணும் இவனை விரும்புகிறாளாம். அப்பெண், வேறு ஜாதியை சேர்ந்தவள். திருமணத்துக்கு என்னிடம் சம்மதம் கேட்கிறான், தம்பி. எனக்கு சம்மதம் தான். அப்பாவும், என் முடிவுக்கே விட்டு விட்டார். ஆனால், அம்மாவும், முதல் தம்பியின் மனைவியும் மறுப்பு தெரிவிக்கின்றனர். 'வேறு ஜாதி பெண் வேண்டாம். அப்படி மீறி இக்கல்யாணம் நடந்தால், நான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன்...' என்கிறார், அம்மா. தம்பி மனைவியோ, 'இதனால், தன்னுடைய தங்கையின் திருமணம் தடைப்படும்...' என்று முட்டுக்கட்டை போடுகிறார். தம்பியும், 'நானும், வேறு வீட்டுக்கு சென்று விடுகிறேன்...' என்கிறான். தம்பிக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறேன். இவர்களை மீறி, திருமணம் செய்து வைத்தால், கூட்டுக் குடும்பம் பிரிந்து விடுமோ என்ற பயம். என்னை நம்பிய தம்பியை கைவிட்ட பழிக்கு ஆளாவேன். தம்பியோ, இன்னும் நாள் கடத்தினால், தனக்கு திருமணமே ஆகாது என்று கருதுகிறான். நான் என்ன செய்யட்டும், சகோதரி. - இப்படிக்கு, உங்கள் சகோதரன். அன்பு சகோதரருக்கு - கூட்டுக் குடும்பம் என்கிற கருத்துப்படிவம் வெற்றுப்புனைந்துரையாக போய், இரண்டு தலைமுறைகள் ஆகிவிட்டன. கூட்டுக் குடும்பத்தில் பத்தில் எட்டு நன்மைகளும், பத்தில் இரண்டு கெடுதிகளும் உள்ளன. கூட்டுக் குடும்பத்தில் பத்து அல்லது பனிரெண்டு அங்கத்தினர்கள் இருந்தால் அவர்களுக்குள், 'ஈகோ' அறவே இருக்கக்கூடாது. அவிழ்த்து விட்டால் திசைக்கு ஒன்றாய் ஓடும் நெல்லிக்காய் மூட்டையாய் கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமை இருந்திடக்கூடாது. இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமண வயதில் திருமணம் செய்து வைப்போம் என்கிற எண்ணம் அறவே இல்லை. திருமணம் செய்து வைக்க வேண்டிய பெற்றோரும் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஆணும், பெண்ணும் மனதளவில் திருமணத்திற்கு தயாராய் இருப்பதில்லை. தம்பிக்கு, 32 வயது வரை திருமணம் செய்து வைக்காமல் உங்கள் கூட்டுக் குடும்பம் என்ன மயக்கத்தில் இருந்தது? வாலிபம் என்பது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஐஸ்கட்டி போல. சிறிது நேரத்தில் உருகி குளிர்நீராய் விரல்களுக்கு இடையே ஓடிவிடும். இன்னும் சில ஆண்டுகளில், உன் இரண்டாம் தம்பிக்கு திருமணமாகா விட்டால், அரை வயோதிகத்தை நோக்கி நகர்ந்து விடுவான். கூட்டமாய் இருக்கிறது என, நகரப் பேருந்துகளை விட்டுவிட்டு, கடைசி பேருந்தை உன் தம்பி துரத்திக் கொண்டு ஓடின கதையாகி விடக்கூடாது நிலைமை. உன் தம்பிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என, வதந்தியை கிளப்பியவர்கள் உன் தம்பிக்கு வேண்டாதவர்கள் அல்ல, உங்கள் ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கு வேண்டாதவர்கள். அல்லது உன் தம்பிக்கு முன் வழுக்கையும், இளம்தொப்பையும் விழுந்து, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் போல காட்சியளிக்கிறானோ என்னவோ? உன் இரண்டாம் தம்பி கலப்புத் திருமணம் செய்து கொண்டால், முதல் தம்பியின் கொழுந்தியாளின் திருமணம் தடைப்படும் என்பது, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் கதைதான். ஒரு யோசனை... உன் முதல் தம்பியின் கொழுந்தியாளை உன் தம்பிக்கு ஏன் பேசி முடிக்கக்கூடாது? யோசி. உன் இரண்டாம் தம்பியின் காதல் திருமணம் கூட்டுக் குடும்பத்தை சிதறடித்து விடும் என்றால், ஒரு பலமில்லாத கூட்டணி பிரியட்டுமே! முதலில் வந்தவருக்கு முதலில் பரிமாறுங்கள் என்பர். உன் தம்பி காதலிக்கும் பெண்ணையும், பெண் வீட்டாரையும் தனித்தனியாக கூப்பிட்டு பேசு. முதலில் அவர்கள் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு தயாரா என கேட்டு உறுதி செய். அவர்கள் வறுமையில் இருந்தால், ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வர். கொஞ்சம் வசதியானவர்கள் என்றால், அவர்களும் வீம்பு பிடிப்பர். பொறுமையாக பேசி, அவர்களின் ஒத்துழைப்புடன் உன் இரண்டாவது தம்பியின் திருமணத்தை முடித்து வை. தம்பியின் திருமணத்திற்கு பின் உங்களின் கூட்டுக் குடும்பம் தொடர வாய்ப்பிருக்கிறது. முதல் தம்பி மனைவி சுயநலத்துடன் பம்மி விடுவாள்! -என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sriram Kannan
ஜன 16, 2026 02:34

வந்த சம்பதங்கள் ஒவ்வொன்றையும் யாரோ ஒரு உறவினர், தம்பியை பற்றி தவறாய் போட்டு குடுத்தனரா? எத்தனை தடவை அந்த மாதிரி ஆயிற்று? தொடர்ந்து வேறு வேறு சம்பதங்கள் தட்டி போனது என்றால் உள்ளுக்குளேயே இந்த வேலையை பார்த்திருக்க வேண்டும், அண்ணன் ரகசியமாய் விசாரித்தாரா? அப்படி என்றால் பெண் பார்க்கும் படலத்தை சிம்பிளாய் வைத்து குடும்பத்தினரோடு மட்டும் பார்த்துவிட்டு வந்திருக்கலாமே? வாசகர்கள் யாருமே இதை பற்றி எழுதாதது ஆச்சர்யம்


NeelaXanthum
ஜன 12, 2026 17:33

முதல் தம்பியின் கொழுந்தியாள்... சகுந்தலா அம்மா... என்ன சொல்லுகிறீர்கள்? இந்த வாசகர் சொல்லும் கரணம் ஒரு கோணல் என்றல் நீங்கள் சொல்லுவது இன்னும் பெரிய கோணல் 30 வயதுக்கு மேல் தன திருமணத்திற்கு உறவுகளின் சம்மதம் கேட்பது என்பது அசட்டுத்தனம். பெரிய அண்ணண் தந்தை இடத்தில் இருந்து வாழ்த்தட்டும். காதலிக்கும் தம்பி இவர் அனுமதி பெற்றா காதலித்தார்? இது போதாது என்று, என்னமோ இவளை செய்து கொள், அவளை செய்து கொள் என்று ஆலோசனை வேறு இவர் சாதி விட்டு மணம் செய்தால் கட்சிக்கு ஓட்டு வராது என்று சொல்வதை விட மோசமான காரணம் வேறு. தாங்கலையாடா சாமி இந்த இடத்தில ஒன்று யோசிக்க வேண்டும். இந்த கூட்டு குடும்பம் என்னும் அமைப்பு எப்படி நீடிக்க முடியும்? எல்லோரும் என்ன 100 acre அரண்மனையில் இருக்கிறார்களா? அட, ஒரேய வீட்டில் இல்லை நாங்கள் தனியாக இருந்தாலும் கூட்டு குடும்பம் போல் hierarchy இல் இருக்கிறோம் என்றாலும், கொஞ்சம் கூட நடைமுறைக்கு ஒத்துவராது. இந்த சமுதாயத்தில் திருமணம் ஆன உடனேயே பிள்ளைகள் தனியாக தலை தூக்கி வாழ ஆரம்பிக்கவிட்டால், எப்போதுதான் நடக்கும்? படித்து, வேலை ஒன்று செய்து கொண்டு, திருணம் முடித்த, அமைதியான குடும்பம் அமைந்தால்தான் நாம் எல்லோரும் நலமாக இங்கு வாழ முடியும். வயதாகி கொண்டு வரும் பெற்றோர்களை கவனித்து கொள்வது என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தனியாக திட்டமிட வேண்டுவது. There is no one size fits all. தனியாக தலை தூக்க கற்றுக்கொள்ளாதவர்களால் யாருக்கும் நன்மை இருக்காது.


Anand
ஜன 12, 2026 14:10

உங்கள் தம்பிக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது, பேசாமல் அந்த பெண்ணையே உங்கள் தம்பிக்கு மனம் முடித்துவிடுங்கள். அதுதான் உங்கள் தம்பியின் எதிர்காலத்திற்கு நல்லது. உங்கள் தாயும், மற்றொரு தம்பி மனைவியும் அப்பெண்ணுடனான கூட்டுக்குடும்பத்திற்கு ஒத்து வரவில்லையென்றால் அந்த கடேசி தம்பியை மட்டும் தனிக்குடித்தனம் செய்துவிடுங்கள். இது தான் உத்தமம்.


Sundar Pas
ஜன 12, 2026 10:35

ஏன்டா... இப்படி ஒரு கூட்டு குடும்பம் தேவையா?


Ganesun Iyer
ஜன 11, 2026 20:30

தந்தையும் தாயும் இருக்கும் போது.. இது அவர்களின் கடமை.. அவர்கள் தன் கடமையை உங்கள் தலையில் கட்டுவது தவறு.. தங்கை என்றால் கூட இது தான் என் கேள்வி?


Anantharaman Srinivasan
ஜன 11, 2026 13:07

பருவத்தே பயிர் செய். இது பழமொழி மட்டுமல்ல. வாழ்க்கை தத்துவம். உன் தம்பியின் நடவடிக்கை சரியில்லையென்று பெண் கொடுக்க வந்தவர்கள் விசாரித்த பின் பின்வாங்கி விட்டார்களா..? ஒரு அண்ணனாக கவனி..