உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே எழுத்தாளர் நண்பர் ஒருவரது மகனுக்கு, சமீபத்தில் திருமணமானது. ஆசிரியரிடம், ஆசி வாங்க அன்று அலுவலகம் வந்தவனிடம், உ.ஆசிரியைகள் சூழ்ந்து நின்று, 'மனைவி சொல்லே மந்திரம். மனைவியே, மதி மந்திரி. மனைவி சொல்லை கேட்டால், முன்னுக்கு வந்து விடலாம்...' என, 'அட்வைஸ்' செய்து கொண்டிருந்தனர். அருகில் இருந்த லென்ஸ் மாமா, 'அப்பப்பா... தாங்க முடியல...' என, முணுமுணுத்தவர், 'இவங்க சொல்றதைக் கேட்டு, ரொம்ப குனிந்து விடாதே... அப்புறம் நிமிரவே முடியாது. மனைவி சொல்றதைக் கேட்டுக்க. அப்படியே நடந்துக்கணும்ன்னு அவசியம் இல்லை. சுயபுத்தி இல்லாமல் போய் விடும்...' என்றார். 'ஓய், லென்ஸ், ஆளாளுக்கு, 'அட்வைஸ்' செய்தா, அவன் எதை, 'பாலோ' செய்வான். 'எந்த முக்கிய விஷயமானலும், மனைவியிடம் கலந்து பேசி முடிவெடு. அதற்கு மேலும், குழப்பம் வந்தால், வீட்டு பெரியவர்களிடம் கலந்தாலோசிக்கலாம். பிரச்னை குறையும்; வாழ்வு இனிக்கும். 'இப்படித்தான்...' என , ' திண்ணை ' நாராயணன் கூறி முடிப்பதற்குள் , 'வந்துட்டாருயா, தகவல் களஞ்சியம். பழங்கதைகள் கூறி, மூளையை மழுங்க செஞ்சுடுங்க. காலம் மாறிடுச்சு, பெரிசு. சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்ளணும்...' என, கடுகடுத்தார், லென்ஸ் மாமா. 'சொல்ல வந்ததை சொல்ல விடுங்க மாமா...' என்றேன், நான். தயக்கத்துடன் ஆரம்பித்தார், நாராயணன்: மனைவி, 'அட்வைஸ்' பண்றாங்கன்னா அதுல ஓர் அர்த்தம் இருக்கும். அவங்க சொல்ற ஆலோசனைகளை உற்றுப் பாருங்க. அதுல இருந்து நமக்கு ஒரு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கலாம். ஏன்னா, உலக அரங்குல சிறந்த சாதனை படைச்ச பல பேரு, மனைவியோட ஆலோசனைகள் கேட்டவங்களாக, ஆதரவை நாடுறவங்களா இருக்காங்க. பெரும் புகழ் வாய்ந்த, அமெரிக்க நாவலாசிரியர் நத்தானியல் ஹார்த்தான், அவர் பார்த்து வந்த உத்தியோகம் திடீர்ன்னு போயிடுச்சு. அதனால, ரொம்ப கவலையோட இருந்தாரு. அவரோட மனைவி காரணம் கேட்டாங்க. அவரும் காரணத்தை சொன்னாரு. உடனே, அந்த மனைவி அதிர்ந்து போகல. 'கவலைப்படாதீங்க. இதைவிட அற்புதமான ஆற்றல் உங்ககிட்ட இருக்கு. நீங்க அப்பப்போ என்கிட்ட கதை சொல்வீங்க. அற்புதமான கற்பனை திறன் உள்ளதா அது இருக்கும். 'இனிமே அதை என்கிட்ட சொல்றது மட்டுமில்ல, இதோ பேப்பரும், பேனாவும் எடுத்து வெச்சிருக்கேன். நீங்க, என்ன எழுதணும்ன்னு நினைக்கிறீங்களோ அதை எல்லாத்தையும் இதுல எழுதுங்க. அதை புத்தகங்களா போடுவோம்...' அப்படின்னு ஆலோசனை சொன்னாங்களாம். அவருக்கு உடனே உற்சாகம் வந்துட்டுது. உடனே, மனச்சோர்வு நீங்கி, எழுத ஆரம்பிச்சாராம். முதல்ல அவர் எழுதினது, 'கருஞ்சிவப்பு எழுத்து' எனும் நாவல். அது, மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆக, மனைவியோட ஆலோசனை அவரை உற்சாகப்படுத்தி இருக்கு. அமெரிக்க ஜனாதிபதி ஆன்டோன் ஜான்சனின் மனைவி, அவருக்கு செஞ்ச உதவி ரொம்ப மகத்தானது. திருமணத்துக்கு முன், ஜான்சன் எழுத, படிக்கத் தெரியாதவரா இருந்தாராம். அவருக்கு கல்வியை போதிச்சு, அறிவை வளர வச்சு, அவருடைய சிந்தனையை துாண்டி, கடைசியில அவரு அமெரிக்க ஜனாதிபதியாகுற அளவுக்கு, அவருடைய மனைவி துணையாக இருந்தாங்கன்னு சொல்வாங்க. அதேபோல, மோட்டார் மன்னன், ஹென்றி போர்டு, ஆரம்பத்தில், அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தோல்விகளே கிடைச்சிட்டு இருந்தது. இதை கண்டுபிடிக்கிறேன், அதைக் கண்டுபிடிக்கிறேன்னு அவர் முயற்சித்தது எல்லாம் கடைசியில தோல்வியில் தான் போய் முடியுமாம். அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க, நண்பர்கள் எல்லாம் அவரை, அரை பைத்தியம்ன்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அவருக்கும் சோர்வு வந்துட்டது. இதையெல்லாம் பார்த்த அவரது மனைவி, அவருடைய சோர்வை அகற்றுவதற்கு நம்பிக்கையான ஆலோசனையெல்லாம் சொன்னாங்களாம். 'சோர்வடையாதீங்க. நிச்சயமா உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க'ன்னு அவரை துாண்டிக்கிட்டே இருந்தாங்க. அந்த உற்சாகம் தான் அவருக்கு கடைசியில் வெற்றிக்கு வழி பண்ணியிருக்கு. அந்த உற்சாகத்தின் அடிப்படையில் தான் கடைசியில், காரை கண்டுபிடிச்சாராம், ஹென்றி. இதுமாதிரி கணவனும், மனைவியும் தகுந்த நேரத்துல ஆலோசனை சொல்லி, உற்சாகத்தை மூட்டுகிற சூழ்நிலை இருந்துச்சுன்னா, இரண்டு பேருமே வாழ்க்கையில சாதனைகளை படைக்கலாம். ஒருவேளை மனைவிக்கிட்ட ஒரு குறிப்பிட்ட துறையில திறமை இருந்துச்சுன்னா, அதை ஊக்குவிக்கும் மனப்பான்மை, கணவனுக்கு இருக்கணும். அந்த ஊக்கத்தை இழக்க செய்வதாக இருக்க கூடாது. - என்று கூறி முடித்தார், நாராயணன். இதை கேட்டதும், அந்த இளைஞரின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டதை பார்க்க முடிந்தது. ம னம் ஒரு செழிப்பான தோட்டம் போன்றது. அது, நன்கு வளர வேண்டுமானால், அதை தினமும் நன்கு பேண வேண்டும். துாய்மையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்களாகிய களைகள், மனம் என்னும் தோட்டத்தில் வேரூன்றுமாறு ஒரு போதும் விட்டு விடக்கூடாது. நல்ல எண்ணங்கள் நுழைய, தீய எண்ணங்கள் துாரப் போகும். மனம் துாய்மை அடையும். இத்தகைய வலுவான துாய மனதைப் பெற எளிமையான வழி முறைகள்: * எதிர்பாராமல் ஒரு நெருங்கிய நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள் * நல்ல புத்தகம் ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள் * உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடுங்கள் அல்லது நீண்ட துாரம் நடைபயிற்சி செய்யுங்கள் * உங்களுக்கு பிடித்த இசைக்கருவியை இயக்கி பாருங்கள் * உங்களுடைய அறையெங்கும் மெல்லிய இசையை பரவச் செய்து ரசியுங்கள் * இதுவரைக்கும் போகாத ஒரு ஹோட்டலுக்கு சென்று, உணவை ருசித்து சாப்பிடுங்கள் * கஷ்டப்படும் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதுங்கள் * நோயுற்றிருக்கும் நண்பரை நேரில் சந்தித்து, நலம் விசாரியுங்கள் * மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள் * உங்களுக்கு கிடைத்த புகழ் மாலைகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள் இந்த பயிற்சிகளெல்லாம் உங்கள் மனச்சோர்வை போக்கி, மனதை புதிய பாதையில் புத்துணர்வுடன் நடக்க செய்யும். திறந்த மனம் தான் வளர்ச்சியின் அறிகுறி. எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !