வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Natarajan Ramanathan
அக் 02, 2025 21:19
எங்கோ எதிலோ எப்போதோ படித்தது எல்லாம் இல்லை, இதே வாரமலரில் சில மாதம் முன்பு வந்த செய்திதான்.
பா - கே 'பீ ச் மீட்டிங்!' நண்பர்கள் அனைவரும் கூடியிருந்தோம். வானம் மப்பும், மந்தாரமாக இருந்தது. குப்பண்ணா, தான் கொண்டு வந்திருந்த, 'பிளாஸ்க்'ல் இருந்து, மூலிகை கஷாயத்தை, சின்ன சின்ன காகித டம்ளர்களில் ஊற்றி, அனைவருக்கும் தந்தார். சூடாக, லேசான காரத்துடன் இருந்த கஷாயம் தொண்டைக்கு இதமாக இருந்தது. 'ஒரு வழியாக, புதிய, துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரே!' என்று ஆரம்பித்தார், 'திண்ணை' நாராயணன். 'இது முன்பே எதிர்பார்த்தது தானே!' என்றார், லென்ஸ் மாமா. 'ஏம்பா லெஞ்சு, ஜனாதிபதி பதவியே, ஆறாம் விரல் போன்றது என்று சொல்வாங்களே... துணை ஜனாதிபதிக்கு என்ன பொறுப்புகள் இருந்துவிடப் போகிறது?' என்று கேட்டார், ராமசாமி அண்ணாச்சி. 'ஓய் பெரிசு, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்குரிய பொறுப்புகளை சொன்னால் அசந்து போய்விடுவீர். 'பவர்' அடக்கி வாசிக்கப்படுகிறது, அவ்வளவே!' என்றார், லென்ஸ் மாமா. 'நம் நாட்டில், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வானவர்களின் வரலாற்றை புரட்டி பார்த்தால், பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய உண்டு...' என்றார், குப்பண்ணா. 'அது இருக்கட்டும். துணை ஜனாதிபதிக்குரிய பொறுப்புகள் என்னென்ன?' என்று கேட்டேன், நான். 'அதுவா...' என்று ஆரம்பித்தார், குப்பண்ணா: * துணை ஜனாதிபதியாக இருப்பவர், ராஜ்ய சபாவின் அலுவலக தலைவராகவும் இருப்பார். அதற்காக, மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் ஆனால், துணை ஜனாதிபதி பதவிக்கு தனியாக சம்பளம் தரப்படுவதில்லை. * துணை ஜனாதிபதியாக இருப்பவர், டில்லி, பஞ்சாப் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியும் வகிப்பார் * மத்திய பிரதேசம் போபால் மற்றும் ரேவா ஆகிய இடங்களில் அமைந்துள்ள, தேசிய இதழியல் மற்றும் தொடர்பியல் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பாளர் பொறுப்பும் துணை ஜனாதிபதிக்கு உண்டு * இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவராகவும் இருப்பார். என்றார், குப்பண்ணா. 'இன்னும் இரண்டு மூன்று கூடுதல் தகவல்களை தந்து விடுகிறேன்...' என்று தொடர்ந்தார், லென்ஸ் மாமா: * ஜனாதிபதி சார்ந்த விதிமுறைகள் அனைத்தும் அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்டவை * இதுவரை உதவி ஜனாதிபதியாக எந்த பெண்ணும் தேர்ந்தெடுக்கப் பட்டதில்லை * இதற்கு முன், துணை ஜனாதிபதியாக இருந்து, ஜனாதிபதியாக உயர்ந்தவர்களில், வி.வி.கிரியும் ஒருவர் * ஹமித் அன்சாரி, இருமுறை உதவி ஜனாதிபதியாக பதவி வகித்தார். இதுபோல் இருமுறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர், டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். - இப்படி, லென்ஸ் மாமா கூறியதும், 'ஏலே லெஞ்சு, இது போன்ற விஷயங்களை எப்படி தெரிஞ்சுக்கிற! ஏதோ குல்லோ, கூகளோன்னு சொல்றாங்களே... அதில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்குதாமே. மொபைல் போனிலே அதை பார்க்க முடியுமா? எனக்கு சொல்லி கொடேன்...' என்றார், ராமசாமி அண்ணாச்சி. 'உம்ம வெச்சிக்கிட்டு, அறிவுபூர்வமான ஒரு விஷயம் பேச முடியாதே. ஏதாவது ஏடாகூடமா கேள்வி கேட்டு, 'அப்செட்' ஆக்கிடுவீரே...' என்ற லென்ஸ் மாமா, காருக்குள் சென்று அமர்ந்து, ஏதோ ஒரு பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டார். ப உளவியல் உண்மைகள்! 1.அதிகம் சிரிப்பவர்கள் - தனிமையில் வாடுபவர்கள் 2.அதிகம் துாங்குபவர்கள் - சோகத்தில் இருப்பவர்கள் 3.வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள் - அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள் 4.அழுகையை அடக்குபவர்கள் - மனதால் பலவீனமானவர்கள் 5.முரட்டுத்தனமாக உண்பவர்கள் - மன அழுத்தத்தில் இருப்பவர்கள் 6.சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் - அப்பாவிகள்; மனத்தால் மென்மையானவர்கள் 7.சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் - அன்புக்காக ஏங்குபவர்கள். உளவியல் ஆலோசனைகள்! 1.மற்றவர்களிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது, உங்களை பலவீனமானவராக காட்டும் 2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது, உங்களை நேர்மையானவராக காட்டும் 3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்தி பேசாதீர்கள் 4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தை பார்த்து பேசவும் 5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேறி என, நினைக்கக்கூடும் 6.பேசும்போது முடியைக் கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது, உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும் 7.நகத்தையோ, பென்சில் - பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது, உங்களை பயந்தவராக காட்டக்கூடும் 8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்க வைக்கும் 9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும் 10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும் 11.நீங்கள் அழகு என்பதை முதலில், நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 12.எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்து சொல்லுங்கள், இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாக பேசத் தெரியாதென்று 13.உங்களால் எதுவும் முடியாது. உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக்கொண்டு முடித்துக்காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள் 14.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை 15.உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றமின்றி சொல்லி முடிக்க முடியாது 16.கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர். உலகில் சராசரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறைய பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள் 17.அழும்போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை. கண்ணீரில் துக்கத்தை கரைத்து துார எறிந்து விட்டு முன் செல்லுங்கள் 18.உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கு இல்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
எங்கோ எதிலோ எப்போதோ படித்தது எல்லாம் இல்லை, இதே வாரமலரில் சில மாதம் முன்பு வந்த செய்திதான்.