உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கே அன்று, மதிய உணவு இடைவேளைக்கு பின், வேலையை ஆரம்பிக்கும்போது, ஆஜரானார், குப்பண்ணா. அவரது வாயை கிளறினால், சுவையான விஷயம் ஏதாவது கிடைக்குமே... 'என்ன... போஜனம் ஆச்சா?' என, அவரது பாஷையிலேயே கேட்டேன். 'உபசரணையைப் பார்த்தா, எதுக்கோ அடிப்போடற மாதிரி தெரியுதே...' என்றார், குப்பண்ணா. 'புரிஞ்சிக்கிட்டீங்களே... ஏதாவது விஷயம் இருந்தால், சொல்லுங்களேன்...' என்றேன். 'அமெரிக்க நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளில், வழக்கறிஞர்களின் முட்டாள்தனமான குறுக்கு விசாரணை பற்றிய தொகுப்புகள், புத்தகமாக வெளிவந்துள்ளது. 'புத்தகத்தை நான் இன்னும் முழுசாக படித்து முடிக்கவில்லை. சிலவற்றை மட்டும் சொல்கிறேன்...' என ஆரம்பித்தார்: வழக்கு ஒன்றில், டாக்டர் ஒருவரிடம் குறுக்கு விசாரணை செய்கிறார், வக்கீல். எப்படி? வக்கீல்: 'டாக்டர், ஓர் ஆள், இரவு துாக்கத்திலேயே மரணமடைந்து விட்டால், அதைப்பற்றி, அவருக்கு மறுநாள் காலையில் தான் தெரியவரும் என்பது உண்மையா?' டாக்டர்: 'உங்களுக்கு எந்த முட்டாள், வக்கீல் பட்டத்தை கொடுத்தான் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா?' என்று கேட்க, கடுப்பான நீதிபதி, வழக்கை, வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து, வக்கீலுக்கு, 'டோஸ்' விட்டு அனுப்பி விட்டார். இன்னொரு வழக்கு... வக்கீல்: 'டாக்டர், நீங்கள், இதுவரைக்கும் எத்தனை பிரேதங்களை, 'போஸ்ட் மார்ட்டம்' செய்திருக்கிறீர்கள்?' டாக்டர்: 'இதுவரை நான், 'போஸ்ட் மார்ட்டம்' செய்திருப்பது எல்லாமே பிரேதங்களைத் தான். எந்த உயிருள்ள மனுஷனும், தன்னை 'போஸ்ட் மார்ட்டம்' செய்ய அனுமதிக்க மாட்டான்!' வக்கீல், 'ஙே' என்று விழித்தார். இன்னொன்று... வக்கீல், ஒரு பெண்ணை, குறுக்கு விசாரணை செய்கிறார்... 'மேடம், உங்கள் குழந்தை ஆகஸ்ட் 8ம் தேதி இரவு தான், உங்கள் கருப்பையில் உருவானது என்பதை நிச்சயமாக, உறுதியாக சொல்ல முடியுமா?' பெண்: 'முடியும்!' வக்கீல்: 'அப்படியென்றால், அந்த நேரத்தில் நீங்கள் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' சிடுசிடுத்த அப்பெண், நீதிபதியைப் பார்த்து, 'மை லார்டு, அன்னைக்கு இரவு நான், என் பெட்ரூமில், என் கணவரோடு தான் இருந்திருக்க முடியும். இந்த அற்ப விஷயம் கூட தெரியாத இந்த வக்கீலை, மேலும் என்னை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்...' என்றார். 'இதுபோல் இன்னும் ஏராளமான ருசிகரமான முட்டாள்தனங்கள் அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. படித்து முடித்ததும், கண்டிப்பாக சொல்கிறேன்...' என்று கூறி, எழுந்து சென்றார், குப்பண்ணா. அப்புத்தகத்தை வாங்கி படித்து விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது, எனக்கு. ப ஜ ப்பான் நா ட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர், ஹிடேகி வாடா என்பவர், 'தி 80 இயர் ஓல்ட் வால்' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார். புத்தகம், 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று, இந்த ஆண்டு ஜப்பானில் அதிகம் விற்பனையான புத்தகம் என்ற விருதை தட்டிச் சென்றது. இந்த புத்தகத்தில், 60 முதல் 90 வயது வரை உள்ளவர்கள், மகிழ்ச்சியாக வாழ, 44 விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை... 1. தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யவும் 2. கோபமாக இருக்கும் போது, மூச்சை ஆழ்ந்து இழுத்து விடுங்கள் 3. முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள் 4. 'ஏசி' பயன்படுத்தினால், நிறைய தண்ணீர் குடிக்கவும் 5. 'டயப்பர்களை' பயன்படுத்துவது, உடல் இய க்கங்களை எளிதாக்குகிறது 6. அடிக்கடி நடப்பது உடலையும், மூளையையும் அதிக சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7. மறதி என்பது வயது முதிர்ச்சியால் வருவதல்ல; மூளையை நீண்ட நேரம் பயன்படுத்தாததால் ஏற்படுகிறது 8. அதிக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை 9. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை செயற்கையாக குறைக்க வேண்டிய அவசியமில்லை 10. நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவது 11. சோம்பேறியாக இருப்பது வெட்கக்கேடானது அல்ல 12. வயதானவர்களுக்கு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது 13. நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், உங்களுக்கு பிடிக்காததை செய்யாதீர்கள் 14. வயதாகும் போதும் அனைத்து ஆசைகளும் அப்படியே இருக்கும். அதில் தவறில்லை 15. அதிக நேரம் வீட்டில் இருக்காதீர்கள் 16. நீங்கள் விரும்பியதை சாப்பிடுங்கள் 17. எல்லாவற்றையும் கவனமாக செய்யுங்கள் 18. உங்களுக்கு பிடிக்காதவர்களை தவிர்க்கவும் 19. எப்போதும், 'டிவி' அல்லது மொபைல் போன், சமூக ஊடகங்களை பார்க்காதீர்கள் 20. நோயுடன் இறுதிவரை போராடுவதை விட, அதனுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் 21. 'கார் மலையில் ஏறினாலும், பாதை கிடைக்கும்' என்ற மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள் 22. புதிய பழங்கள் மற்றும் சாலட்களை சாப்பிடுங்கள் 23. பத்து நிமிடங்களில் உங்கள் குளியலை முடிக்கவும் 24. துாக்கம் வரவில்லையா? வலுக்கட்டாயமாக துாங்குவதற்கு முயற்சிக்காதீர்கள் 25. மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது, உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 26. அதிகமாக யோசிக்காதீர்கள் 27. அவசியம் என்றால் மட்டும், குடும்ப மருத்துவரை அணுகுங்கள் 28. மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருக்காதீர்கள், கொஞ்சம் கெட்ட கிழவனாக, குறும்புக்காரனாக இருக்கலாம் 29. சில நேரங்களில், பிடிவாதத்தை கைவிடுவது நல்லது 30. வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், பழைய நினைவுகள் மறந்து போவது கடவுளின் ஆசீர்வாதம் 31. நீங்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தும் போது, நீங்கள் உண்மையில் வயதாகி விடுகிறீர்கள் 32. புகழுக்கான ஆசையை விட்டுவிடுங்கள், உங்களிடம் இருப்பதே போதுமானது 33. அப்பாவித்தனம் என்பது முதியவர்களின் பாக்கியம் 34. பிரச்னைகள் அதிகமாக இருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் 35. வெயிலில் அமர்ந்திருப்பதும், இயற்கையை ரசிப்பதும் மகிழ்ச்சியைத் தரும் 36. மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள் 37. இன்று அமைதியாக வாழணும் என்று நினையுங்கள் 38. ஆசையே நீண்ட ஆயுளுக்கு ஆதாரம் 39. எப்போதும் நேர்மறையாக இருங்கள் 40. சுதந்திரமாக இருக்க பாருங்கள் 41. வாழ்க்கையின் விதிகள் உங்கள் கைகளில் உள்ளன 42. எல்லாவற்றையும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள் 43. மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் நேசிக்கப்படுகின்றனர் 44. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியம் தரும். என்ன வாசகர்களே... வயதாகி விட்டதே என்ற கவலையை ஒதுக்கி, இனி மகிழ்ச்சியுடன் வாழ்வை எதிர்கொள்வீர்கள் தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
நவ 16, 2025 11:42

இது போன்ற புத்தகங்களை அதனை எழுதியவர்களை ஆங்கிலத்திலும் பிரசுரிக்கவும் . தமிழ் எழுத்தினை தேடுவது மிக கடினமாக உள்ளது