உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கே ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்ட குடும்பத்தை சேர்ந்த நண்பர் அவர். அவருக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால், திருமணம் தள்ளிப் போய் கொண்டிருந்தது. சமீபத்தில், என்னை சந்தித்த, நண்பர், 'மணி... எனக்கு கல்யாணம்...' என்றார். 'என்னப்பா, திடுதிப்பென்று கல்யாணம்ன்னு சொல்ற... எப்போ பொண்ணு பார்த்த, எந்த ஊர்...' என, கேள்விகளை அடுக்க, 'பொண்ணு பேரு வாழைமரம்...' என்றார். அதிர்ந்தேன், நான். 'அது ஒண்ணுமில்லை, மணி... வாழை மரத்துக்கு தாலி கட்டி, பின் அதை வெட்டி போட்டால், கல்யாணமாகும் என, ஒரு ஜோசியர் சொன்னார், அதான்...' என்றார், நெளிந்தபடி. 'இப்படி ஒரு வழக்கமா?' என, நான் வாய் பிளக்க, அருகில் இருந்த, மூத்த செய்தியாளர் ஒருவர், 'நம்மூரில் சில பகுதிகளில் இப்படிப்பட்ட வழக்கம் இருப்பதை நானும் கேள்விப்பட்டுள்ளேன். 'இதுக்கே இப்படி அதிர்ச்சியானால் எப்படி? வெளிநாடுகள் சிலவற்றில், நம்ப முடியாத சில வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன...' என்றார். அதைப்பற்றி, அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், அவரிடம் கேட்க, கூற ஆரம்பித்தார், செய்தியாளர்: உலகெங்கிலுமுள்ள மக்கள், தங்களது மதம், கலாசாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து, விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். அதில், சில சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் நம்மை மிரள வைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துவதாகவும் இருக்கிறது. அழுகை சடங்கு: இ து, நீங்கள் நினைப்பது போல், ஆனந்த கண்ணீர் விடுவது அல்ல. சீனாவில், ஒரு சில பகுதிகளில் திருமணத்திற்கு முன், மணமகள் கண்ணீர் விட்டு அழுவது ஒரு சடங்காகவே பின்பற்றப்படுகிறது. இந்த சடங்கின்படி, திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக, சீன முறைப்படி, மணமகள், தினமும் ஒவ்வொரு மணி நேரம் அழ வேண்டும். முகம் மற்றும் உடலில் கருப்பு நிறம் பூசுவது: ஸ் காட்லாந்து நாட்டில், ஒரு பாரம்பரியம் உள்ளது. திருமணத்துக்கு முன், மணமகன் மற்றும் மணமகளின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் கருப்பு நிறம் பூசப்பட்டு, தெருக்களில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த சடங்கு மணமக்களை, தீய ஆவிகளிடம் இருந்து காக்கும் என, நம்பப்படுகிறது. எஞ்சிய உணவை சாப்பிடுவது: பி ரஞ்சு பழக்க வழக்கப்படி, புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது, மீதமான உணவு மற்றும் பானங்களை ஒரு பானையில் போட்டு, கலந்து கொடுப்பது வழக்கம். இதன் மூலம் முதலிரவை சிறப்பாக கொண்டாடுவதற்கான சக்தி கிடைக்கும் என, நம்பப்படுகிறது. தற்போது, இந்த வழக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மணமக்களுக்கு, சாக்லேட் மற்றும் ஷாம்பெயின் என்ற மதுவகை வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு குளிக்க தடை: ம லேஷியா, இந்தோனேஷியா மற்றும் போர்னியா நாட்டில் வசிக்கும், 'டிடாங்' இன மக்கள், தொடர்ந்து மூன்று நாட்கள் தம்பதியருக்கு குளிக்க தடை விதிக்கின்றனர். திருமணத்துக்கு பின், தம்பதிகள் இதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதால், காவல் ஏற்பாடுகள் வேறு தீவிரமாய் இருக்குமாம். இது, புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்டம் மற்றும் குழந்தைப்பேறு கொடுக்க உதவும் என, நம்பப்படுகிறது. மணமகளை முத்தமிடுதல்: ஸ்வீடன் நாட்டில், திருமணத்தில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும், திருமணமாகாத ஆண்களும், மணமகளை முத்தமிட அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண நாளில் சிரிக்க தடை: தி ருமணம் என்பது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். அன்றைய தினம் மணமகனும், மணமகளும் சிரித்த முகத்துடன் இருப்பதை தான் பார்த்திருப்போம். ஆனால், காங்கோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், திருமண நாளன்று புதுமண தம்பதி சிரிக்கக் கூடாது என்ற தடை உள்ளது. பீங்கான் தட்டுகளை உடைப்பது: கொ ண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள், தீய சக்திகளை ஈர்க்கும் என, நம்புகின்றனர், கிரீஸ் மக்கள். எனவே, திருமண நாளன்று புதுமண தம்பதிகளை, பீங்கான் தட்டுகளை ஆக்ரோஷமாக துாக்கிப்போட்டு உடைக்க வைப்பது வழக்கம். இதனால், தீய சக்திகள் திருமணத்தை கொண்டாட்டமாக நினைக்காது என, அவர்கள் நம்புகின்றனர். கிரீஸ் நாட்டு திருமணங்களில் நடக்கும் மிகவும் விளையாட்டான சடங்கு இது. மணமகள் மீது எச்சில் உமிழ்வது: ஆ ப்பரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின், 'மசாய்' இனத்தில், திருமணத்தின் போது மணப்பெண்ணின் தலை மற்றும் மார்பு பகுதியில், எச்சில் துப்பும் சடங்கு பின்பற்றப்படுகிறது. இது, பெண்ணின் சகிப்புத் தன்மையை சோதிக்க கூடியது. அதாவது, கணவன் வீட்டிற்கு செல்லும் பெண், எக்காரணம் கொண்டும், தாய் வீட்டிற்கு திரும்ப வரக்கூடாது என்பதற்காக செய்யப்படுகிறது. - என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். என்ன வாசகர்களே... நம்மூர் எவ்வளவோ தேவலாம் என்கிறீர்களா? 'நொண்டி நாடகம்' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கடந்த, 17, 18ம் நுாற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பாளையக்காரர்கள் ஆட்சியில், அவர்களை அண்டிப்பிழைத்த புலவர்களால் பாடப்பட்டு வந்த ஒரு நாடகம், நொண்டி நாடகம். இதில், நாடகக் கருவான பின்வரும் கற்பனை வரலாறு பலவிதங்களில் நடிக்க பெற்றன. திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் மகாத்திருடன் ஒருவன், ஒரு ஊரில் திருடச் சென்றபோது, ஒரு அழகான விலை மகளைச் சந்திக்கிறான். அவள் மேல் அவன் அளவுகடந்த ஆசை வைக்கிறான். அவளுடைய சூழ்ச்சி வலையில் சிக்கி, அவன் அதுவரை திருடிய அனைத்து பொருட்களையும் அவளிடம் இழந்து விடுகிறான். அவளுடைய இடைவிடாத துாண்டுதலினால் வேறு வழியின்றி அவளது காமப்பேச்சில் மயங்கி பல இடங்களில் தொடர்ந்து திருடுகிறான். ஒருநாள், பாளையம் என்னும் ஊரில் தங்கியிருந்த படைத்தலைவன் ஒருவனுடைய குதிரையை திருட, மாறுவேடம் போட்டு செல்கிறான். குதிரையை திருடிக்கொண்டு வருகையில் காவலர்களிடம் அகப்பட்டு கொள்கிறான், திருடன். படைத்தலைவனிடம் அழைத்து செல்லப்பட்டான். அவனை, இழிமொழிகளால் பேசியதோடு, விசாரணை முடிவில், அவனை மாறுகால், மாறுகை வாங்கும்படி ஆணையிடுகிறான், படைத்தலைவன். அப்படியே தண்டனையை நிறைவேற்றி, அவனை ரத்த வெள்ளத்தில் போட்டு சென்றனர், வீரர்கள். அவ்வழியாக வந்த ஆன்மிகவாதி ஒருவர், அவனுக்கு எண்ணெயும், மருந்தும் தருகிறார். சில நாட்களில் அவன் புண்கள் ஆறி முடமானவனாகவே அந்த, ஆன்மிகவாதியுடன் வாழ்கிறான். அவர் அறிவுரைகளைக் கேட்டு, ஒரு கோவிலில் சென்று தங்கி, இறைவனை வழிபட்டு வருகிறான். இதுவரை தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, இறைவனிடம் தினமும் கண்ணீர்விட்டு அழுகிறான். அவனுடைய பிழை, ஆண்டவனால் பொறுக்கப்படுகிறது. விளைவு, அவனுடைய குறைகாலும், குறைகையும் மீண்டும் பழையபடி ஆகிறது. இது தான் அந்த, நொண்டி நாடகத்தின் கதை. எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !