வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Natarajan Ramanathan
ஜன 18, 2026 18:20
விஷயம் ஒன்றும் இல்லாவிட்டால் நீங்களே கடிதம் எழுதி போடுவீங்களோ?
ப 'பா. கே.ப., பகுதி எங்களுக்கு பல பயனுள்ள தகவல்களே தருகிறது; மறுப்பதற்கில்லை. இருப்பினும், என்னத்தான் உபயோகமான தகவல்களாக இருந்தாலும், 'அவ்வப்போது, கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்துக்கிற மாதிரியான, 'லைட் சப்ஜெக்ட்' மேட்டர்களையும் தரலாமே...' என்று கடிதம் எழுதியிருந்தார், வாசகர் ஒருவர். வாசகர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை அல்லவா? இதோ, இந்த வாரம், சின்ன சின்ன நகைச்சுவை துணுக்குகள் இடம் பெற்றுள்ளன. படித்து, ரசித்து, சிரித்து மகிழுங்களேன். இந்நகைச்சுவை துணுக்குகள், பிரபல பேச்சாளர்களான தென்கச்சி கோ.சுவாமிநாதன் மற்றும் இளசை சுந்தரம் எழுதியவைகளிலிருந்து திரட்டப்பட்டவை. இதை ஏற்கனவே கேட்டும், படித்தவர்களும் மீண்டும் படித்து ரசிக்கலாம்; புதிதாக படிப்பவர்கள் படித்து, 'என்ஜாய்' செய்யலாம். ஒ ரே தெருவில் குடியிருக்கும் இருவர் பேசிக் கொண்டனர்... 'என்ன உங்க வீட்டுல எப்பவும் கலகலன்னு சிரிப்பு சத்தமா கேட்குதே. அது எப்படி?' என்றார், ஒருத்தர். அதற்கு, 'என் மனைவி கோபத்துலே என் மேலே பாத்திரத்தை துாக்கி வீசுவா. கரெக்டா என் மேலே விழுந்துட்டதுன்னா அவ சிரிப்பா. குறி தவறிட்டா நான் கைதட்டி சிரிப்பேன். இப்படித்தான் எப்பவுமே கலகலப்பா இருப்போம்...' என்றார், மற்றவர். ******நண்பர்கள் கூட்டத்தில், ஒருத்தர் ரொம்ப பெருமை அடிச்சுக்கிட்டார்... 'நானும், என் மனைவியும் சேர்ந்து தான் எல்லா வேலைகளையும் செய்வோம்...' என்றார். 'எப்படி?' என்று கேட்டோம். 'நான் சமைப்பேன், அவ சாப்பிடுவா. நான் துவைப்பேன், அவ உடுத்திக்குவா. நான் சம்பாதிப்பேன், அவ செலவழிப்பா...' என்றார், அவர். அடுத்தவர் சொன்னார். 'என் மனைவி தினமும் காலையில், 5:00 மணிக்கெல்லாம் எழுந்திடுவா...' என்றார். 'பரவாயில்லையே, அப்பவே எழுந்து வேலையைத் துவங்கிடுவாங்களா...' என கேட்டார், மற்றவர். 'இல்லைங்க சார், என்னை எழுப்பி விட்டுட்டு அவ படுத்துடுவா...' என்றார், அவர். ********* ஒரு டாக்டர் கோபத்துல கன்னாபின்னான்னு கத்திக்கிட்டு இருந்தாரு. ஏன்னா, ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல, 'சூசைட் பாயின்ட்'ன்னு யாரோ எழுதி வச்சிட்டாங்களாம். ********கோர்ட்டுக்கு போனான், ஒருத்தன். அவனை கூண்டுல ஏத்தினாங்க, ஏறி நின்னான். முதல்ல ஒருவர் வந்து, அவன்கிட்ட, 'நான் சொல்றதெல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறே எதுவும் இல்லைன்னு சொல்லு...' என்றார். மெதுவா அவரை நிமிர்ந்து பார்த்து, 'ஆரம்பத்துலேயே என்னை பொய் சொல்லச் சொல்றீங்களே...' என்றான், அவன். ******* ஒரு அப்பா, ஒரு சின்ன பையனை அடிச்சிக்கிட்டிருந்தார். 'ஏன் அடிக்கிறீங்க?' என, கேட்டாங்க, பையனின் அம்மா. 'பரீட்சையிலே எருமைக்கும், பசுவுக்கும் என்ன வித்தியாசம்ன்னு கேட்டிருக்காங்க. அதுக்குக்கூட பதில் எழுதத் தெரியல இவனுக்கு...' என்றார், அப்பா. 'அவனுக்கு அந்த வித்தியாசம் தெரியலே. உங்களுக்கு இன்னொரு வித்தியாசம் தெரியலே...' என்று சொன்னாங்க, அம்மா. 'என்ன சொல்றே?' என்றார். 'இது நம்ம பையன் இல்ல. பக்கத்து வீட்டுப் பையன்...' என்றாள், அந்த அம்மா. ******** ஒருத்தரோட குதிரை காணாம போயிட்டுதாம். அதுக்காக, அவரு கவலைப்படாம நிம்மதியா, சந்தோஷமா இருந்தார். 'என்ன சார் இது, உங்க குதிரை திருட்டுப் போயிடுச்சு. நீங்க கவலைப்படாம இருக்கீங்களே...' என்று கேட்டாங்க. அதற்கு, 'நல்ல வேளை சார், கட்டியிருந்த குதிரை காணாம போயிருக்கு. நான் அதுமேல உட்கார்ந்திருக்கிற சமயத்துல அது திருட்டு போயிருந்தா, நானும் சேர்ந்துல்லே காணாம போயிருப்பேன்...' அப்படின்னு சொன்னாராம். ரொம்ப நிதானம் தவறாத அந்த ஆள். ******** ஒரு அம்மா, அடுப்பங்கரையிலேயிருந்து சத்தம் போட்டாங்க... 'டேய் ராமு, தயவு பண்ணி அந்த, 'டிவி'யை நிறுத்துடா. அந்த பெண்ணோட குரல் மகா மோசம். அடுப்பங்கரையிலே இருக்கிற என்னாலேயே அதை சகிச்சிக்க முடியல...' அப்படின்னு சொன்னாங்க. உடனே கொஞ்சம் கூட தயங்காமல், 'அம்மா, இந்த குரல், 'டிவி'யிலேயிருந்து வரல. எதிர்த்த வீட்டு மாமி இங்க வந்திருக்காங்க. அவங்க தான் இப்ப என்னோட பேசிக்கிட்டிருந்தாங்க...' என்றான், ராமு. ********* இரு பெண்கள் தங்களுடைய கணவர்களை பற்றி, ரொம்ப பெருமையா பேசிக்கிட்டிருந்தாங்க. 'என் வீட்டுக்காரர்கிட்ட எந்த, 'சப்ஜெக்ட்'டைக் கொடுத்தாலும் சரி, அந்த விஷயத்தை பத்தி அழகா ஒரு மணிநேரம் பேசுவார்...' என்றாள், ஒரு பெண். உடனே, 'அது என்ன பிரமாதம். என் வீட்டுக்காரருக்கு, 'சப்ஜெக்ட்'டே வேண்டாம். விஷயமில்லாமலே நாள் முழுவதும் பேசிக்கிட்டிருப்பார்...' என்று கூறினாள், இன்னொரு பெண். ***** சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே போனான், திருடன் ஒருவன். கொஞ்ச நாள்ல மறுபடியும் திரும்பி, சிறைக்கு வந்துட்டான். அப்போ சிறை அதிகாரி அவனுக்கு, 'அட்வைஸ்' பண்ணினார். 'ஏம்ப்பா, இப்படி அடிக்கடி தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்துடறியே... உனக்கு சொந்த பந்தம் ஏதும் இல்லையா? உன் அப்பா, அண்ணன், தம்பிகள் கூட சேர்ந்து வாழணும்ங்கற ஆசை இல்லையா?' என்றார். 'அவர்களோட சேர்ந்து வாழணும்ங்கற ஆசை எனக்கு நிறைய உண்டுங்க சார்...' என்றான், அவன். 'அப்புறம் எதுக்கு இப்படி அடிக்கடி ஜெயிலுக்கு வந்துடறே?' என்றார், சிறை அதிகாரி. 'அவங்க எல்லாருமே இங்கே தான இருக்காங்க...' என்றான். ******* 'ஏங்க நான் புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பினேனே, அது உங்களுக்கு கிடைச்சுதா?' என்று, ஒருவர், இன்னொருவரை பார்த்து கேட்டார். 'ஓ, கிடைச்சுதே. நானும், நன்றி கார்டு அனுப்பினேனே...' என்றார், இவர். 'ஏன் சார் பொய் சொல்றீங்க? நான் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பவே இலையே. சும்மா சொல்லிப் பார்த்தேன். உடனே கிடைச்சுதுன்னு அடிச்சு விடுறீங்களே...' என்றார், அவர். 'ஏன் சார், வாழ்த்து அட்டை அனுப்பினதா நீங்க பொய் சொல்றீங்க. அப்படி இருக்கறப்போ, அது கிடைச்சதா நான் பொய் சொல்லக்கூடாதா...' என்றார், இவர். **********சிறையில் இருந்த போது, புத்தகம் ஒன்றை எழுதினார் ஒருவர். அவரை சந்தித்த நண்பர், 'என்னங்க, ஜெயில்ல இருந்தப்போ ஏதோ புத்தகம் எழுதினீங்களாமே?' என்று கேட்டார். 'எழுதினேன் சார். அதுக்கப்புறம் தான் வெறுங்காவல் தண்டனையிலிருந்த நான், கடுங்காவல் தண்டனையை அனுபவிக்கறாப்போல ஆகிடுச்சு...' என்றார், வருத்தத்துடன். 'என்ன புத்தகம் எழுதினீங்க?' என்று கேட்டார், நண்பர். 'ஜெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி? அப்படிங்கறது புத்தகத்தோட தலைப்பு...' என்றார். **********ஒரே தண்டவாளத்துல, இரண்டு பக்கமும் எதிரும் புதிருமா, ரெண்டு ரயில் வேகமா வந்துகிட்டிருக்கு. இன்னும் அரைமணி நேரத்துல அது ரெண்டும் மோதிக்கும். இந்த சூழ்நிலையில நீ என்ன செய்வே...' என்று கேட்டார், அதிகாரி ஒருவர். இந்த ஆள் யோசித்தான். அப்புறம், 'உடனே ஓடிப்போய் என் தம்பியை கூட்டிக்கிட்டு வருவேன்...' என்றான், அவன். 'ஏன்?' என்று கேட்டார், அதிகாரி. 'ஏன்னா, அவன் இதுவரைக்கும் ரயில் விபத்தே பார்த்ததில்லே சார்...' என்றான், அவன். - கடிதம் எழுதிய வாசகரே... இப்போது திருப்தியா?
விஷயம் ஒன்றும் இல்லாவிட்டால் நீங்களே கடிதம் எழுதி போடுவீங்களோ?