அந்துமணி பா.கே.ப.,
பா கே அலுவலகம். அனைவரும் தத்தம் வேலையில் ஈடு பட்டிருக்க, உள்ளே நுழைந்தார், லென்ஸ் மாமா. 'மணி... மலையாள தேசத்திலிருந்து, தமிழுக்கு புதுசா ஒரு நடிகை வந்திருக்கிறார். இரண்டு, மூன்று தமிழ் படத்தில் தான் நடித்துள்ளாராம். சினிமா பொன்னையா, அவரது படத்தை காட்டியபோதே, ஒரு, 'போட்டோ ஷூட்' எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். சாயந்திரம் 3:00 மணிக்கு, 'அப்பாயின்மென்ட்!' நீயும் வாயேன்...' என்றார், லென்ஸ் மாமா. 'ஐயோ, மாமா... நிறைய வேலை இருக்கிறது...' என்று கழன்று கொண்டேன், நான். தன் உதவியாளரை அழைத்து, 'தம்பி, கேமரா, லென்ஸ் எல்லாவற்றையும் சரியா எடுத்து வைத்துவிடு...' என்றார், லென்ஸ் மாமா. பெண் உதவி ஆசிரியை ஒருவர், காலை டிபன் சாப்பிடாமல் வந்து விட்டார் போலிருக்கிறது. ஒரு உணவு பார்சலை எடுத்து, மேஜை மீது வைத்தார். உடனே, அவர் மேஜை அருகே சென்ற, லென்ஸ் மாமா, 'வீட்டில் சாப்பிட நேரமில்லை என்று கையோடு எடுத்து வந்துவிட்டீர்களா?' என்று கேட்டு, உரிமையோடு பார்சலை பிரித்தார். 'என்ன அம்மணி... இன்று உன் வீட்டுக்காரர் சமைக்கலையா? வெறும், 'பிரட் சாண்ட்விச்' தானா?' என்று கேட்டு, ஒரு, 'சாண்ட்விச்'சை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். 'பிச்சை எடுக்குமாம் பெருமாள், அதை பிடுங்கித்தின்னுமாம் அனுமார். உங்களுக்கு என்னை கலாய்க்கலேன்னா பொழுது போகாதே! இன்று லேட்டா எழுந்துட்டேன். அதான், டிபன் செய்யலை. வர்ற வழியில் பேக்கரியில், 'பிரட் சாண்ட்விச்' வாங்கி வந்துட்டேன்...' என்றார், உ.ஆ., 'சரி, சரி... புலம்பாதே. பதிலுக்கு சாயந்திரம், சமோசாவும், கட்லெட்டும் வாங்கி தந்து விடுகிறேன்...' என்றார், மாமா.அப்போது, 'திண்ணை' நாராயணன் உள்ளே வர, 'வாய்யா, நாணா... 'பிரட் சாண்ட்விச்' சாப்பிடுறீயா?' என்றார். மொத்தத்துக்கே மோசமா போயிடும் போலிருக்கே, என்று, 'டக்'கென்று, 'சாண்ட்விச்' பொட்டலத்தை எடுத்துக்கொண்டு, வேறு இடத்துக்கு சென்றுவிட்டார், உ.ஆ., 'வேணாம்ப்பா...' என்று மறுத்தவர், 'இந்த வாரத்துக்கான, 'திண்ணை' மேட்டர் எழுதணும். உன் கேபினில் உட்கார்ந்து கொள்ளட்டுமா?' என்றார், நாராயணன். 'பிரட் சாண்ட்விச் எங்கு, எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று முதலில் சொல்லும்வே...' என்றார், மாமா. 'நான், உன் கேபினுக்கே வரலைப்பா...' என்றார், நாராயணன். 'ஹூம்... வெறும் புத்தக புழு...' என்ற, லென்ஸ் மாமா, 'நானே சொல்கிறேன் கேட்டுக்க...' என்று கூற ஆரம்பித்தார்: இன்று, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் விருப்பமான துரித உணவு வகைகளில் ஒன்றாக இருக்கிறது, 'பிரட் சாண்ட்விச்!' அது, எப்படி அறிமுகமானது தெரியுமா? கடந்த, 18ம் நுாற்றாண்டில், இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த, ஜான் மாண்டேகு -4வது ஏர்ல் ஆப் சாண்ட்விச் என்பவர், பிரபு பட்டம் பெற்றவர். சாண்ட்விச் என்பது, இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரின் பெயர். அந்த நகரின் பிரபுவாக இருந்ததால், அவர் பெயருடன், 'சாண்ட்விச்' ஒட்டிக்கொண்டது. ஜான் மாண்டேகு திறமையான கடற்படை நிர்வாகியாக இருந்தாலும், அதைவிட சூதாட்டத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டவர். கடந்த, 1762ல், லண்டனில் உள்ள ஒரு, 'கிளப்'புக்கு சென்றவர், தொடர்ந்து பலமணி நேரம் சீட்டாட்டத்தில் மூழ்கிவிட்டார். பசி அதிகரித்தாலும், கைகளில் இருந்த சீட்டுகள், உணவு உண்ண தடையாக இருந்தன. உடனே, 'கிளப்' சமையல்காரரை அழைத்து, இரண்டு ரொட்டி துண்டுகளுக்கு இடையே வேகவைத்த, இறைச்சி துண்டுகளை வைத்து எடுத்து வருமாறு கூறினார். சமையல்காரரும், அப்படியே தயாரித்து எடுத்து வந்து கொடுத்தார். அதை ஒரு கையில் பிடித்து சாப்பிட்டபடி, மற்றொரு கையால் சீட்டுகளை பிடித்து விளையாட்டை தொடர்ந்தார், அந்த பிரபு. கைகள் அழுக்காகாமலும், விளையாட்டை நிறுத்தாமலும் சாப்பிடும் இந்த முறை, அங்கிருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. அதன்பின், இதே முறையை பலரும் பின்பற்ற துவங்கினர். வெகுவிரைவிலேயே, அது லண்டன் முழுவதும் பரவியது. அந்த உணவு வகைக்கு, அதை அறிமுகப்படுத்திய, ஜான் மாண்டேகுவின் பட்டப்பெயரான, 'சாண்ட்விச்' என்ற பெயரே சூட்டப்பட்டது. அடுத்து, 19ம் நுாற்றாண்டில், தொழிற்புரட்சி ஏற்பட்டபோது, தொழிலாளர்களுக்கு விரைவாக சாப்பிடக்கூடிய மலிவான உணவாக, 'சாண்ட்விச்' பெரும் வரவேற்பை பெற்றது. இறைச்சி துண்டுகள் மட்டுமல்லாமல், பாலாடைக்கட்டி, முட்டை மற்றும் காய்கறிகளை வைத்தும் பல்வேறு வகை, 'சாண்ட்விச்'கள் தயாரிக்கப்பட்டன. கடந்த, 20ம் நுாற்றாண்டில், 'சாண்ட்விச்'சை உலகளாவிய துரித உணவாக மாற்றியது, அமெரிக்கா. குறிப்பாக, 1928ல், ரொட்டியை, சம அளவில் வெட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும், அதன் தயாரிப்பு வேகம் அதிகரித்தது. பின், 'சப்-வே' போன்ற உணவு நிறுவனங்கள், 'சாண்ட்விச்'சை ஆரோக்கியமான, துரித உணவாக, உலகம் முழுவதும் பரப்பியது. 'சாண்ட்விச்' வரலாற்றில், இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. அதாவது, புது நாடுகளுக்கு கடல்வழி கண்டுப்பிடிப்பாளரும், மாலுமியுமான, ஜேம்ஸ் குக், தன் பயணங்களுக்கு நிதியுதவி அளித்த, ஜான் மாண்டேகுவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜேம்ஸ் குக் கண்டுபிடித்த தீவுகளுக்கு, 'சாண்ட்விச்' தீவுகள் என்று பெயர் சூட்டினார். அத்தீவுகளே இன்று உலகப் புகழ்பெற்ற, ஹவாய் தீவுகள் என்றழைக்கப்படுகின்றன. சூதாட்ட மேஜையில் பிறந்த எளிய உணவு, இன்று உலகம் முழுவதும் மக்கள் விரும்பும் உணவாக மாறியதோடு, உலக வரைபடத்தில், தீவு கூட்டமாகவும் நிலைத்திருக்கிறது. கடைசியாக, ஒரு குட்டி செய்தி கூறி முடித்து விடுகிறேன்... ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான, ஸ்பெயின் நாட்டில், மாட்ரிட் நகரில் உள்ள, 'ரோப்ரி-டி-போட்டின்' என்ற உணவகம், உலகிலேயே மிகவும் பழமையானது. இது, 'கின்னஸ்' சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. கடந்த, 1725ல், துவங்கப்பட்ட இந்த உணவகம், அன்று முதல் இன்று வரை பழமை மாறாமல், விறகு அடுப்பில், பாரம்பரிய முறையிலேயே உணவு சமைத்து வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக, உலகம் முழுவதிலிருந்து சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். - என்று கூறி முடித்தார், லென்ஸ் மாமா. 'காஸ் தட்டுப்பாட்டால், நம்மூரிலும் இப்போது பல ஹோட்டல்கள், விறகு அடுப்புக்கு மாறிவிட்டன. பொங்கல் பண்டிகையின் போது, வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அழைத்து வந்து, விறகு அடுப்பில், பானை வைத்து பொங்கல் செய்து கொண்டாடுவது போல், விறகு அடுப்பில் சமைக்கும் ஹோட்டல்களுக்கு, சுற்றுலா பயணியரை அழைத்து வந்து சாப்பிட வைக்குமா சுற்றுலா துறை...' என்று கேட்டார், நாராயணன். 'உமக்கு குசும்பு அதிகமா போச்சு... என் கேபினில் உட்கார அனுமதிக்கலைன்னு, நக்கல் பண்றீரா?' என்று கேட்டு, அங்கிருந்து எழுந்து சென்றார், லென்ஸ் மாமா.