அந்துமணி பதில்கள்!
ஜி.இந்திரா, திண்டுக்கல்: காலநிலை மாற்றம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பராமரிப்பது காலத்தின் கட்டாயம் தானே...'இனி மழைக்காலம் கிடையாது; பெரும் புயல்காலம் மட்டும் தான்...' என, இயற்கை விவசாயிகள் கூறியது, உண்மை என, தோன்றுகிறது. எனவே, பருவமழை காலம் வரும் வரை காத்திருக்காமல், நீர்நிலைகளை ஆண்டு முழுதும் சரியாக பராமரிக்க வேண்டும்! கே.புனிதா, கோவை: ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம், நிறைய பேர் வேலை இழக்கப் போகின்றனர் என்பது உண்மையா?ஏ.ஐ., தொழில்நுட்பத்தை இயக்கப் போவது, மனிதர்கள் தானே; அத்துறையில் நிறைய படிப்புகளும், வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டர் 'சாப்ட்வேர்' உருவான போது, இதே பயம் தோன்றியது; வேலைவாய்ப்பு அதிகரிக்கத் தானே செய்தது!மகா, திருப்பூர்: அரசியல்வாதிகளின், 'ரோடு ஷோ'வால், மக்களுக்கு என்ன பயன்?தாங்கள் வசிக்கும் பகுதி சுத்தமாகும்; ரோடுகள் போடப்படும்; கால்வாய்கள் துார்வாரப்படும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்; ஆனால், அவை எதுவும் நடப்பதில்லை; யாருக்கும் பயனும் இல்லை. வெறும், 'ஷோக்கு' தான்!கல்லிடை சிவா, நெல்லை: மே.வங்க முதல்வர் மம்தா, கவிதைகள் எழுதி, மேடைகளில் பாட்டு பாடி வருகிறாரே...அ.தி.மு.க.,வில், ஜெயகுமார் இப்படித்தான், மேடைகளில் பாட்டு பாடுவார்; ஓட்டு வாங்கி, வெற்றி பெற்றாரா என்ன... புரிகிறதா?* கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: கிட்டத்தட்ட, 27 சதவீதமாக இருந்த நம் நாட்டின் வறுமை, கடந்த, 11 ஆண்டுகளில், அதாவது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், 5 சதவீதமாக குறைந்துள்ளதாமே...இந்த தகவல் உண்மையாக இருப்பின், நம் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல சான்றாகவும், உலக அளவில் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும் இருக்கும்! எம்.பி.தினேஷ், கோவை: 'அரசியல் செய்ய வயது தடை இல்லை...' என்கிறாரே, பா.ம.க., ராமதாஸ்! அவருக்கு பதவி ஆசை உள்ளதைத் தானே இது வெளிப்படுத்துகிறது?பதவி ஆசை என்பதை விட, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம் அல்லவா! 'அடுத்த ஆண்டு வரை, நான் தான் தலைவர்...' என்கிறாரே!ஜி.குப்புசுவாமி, சென்னை: மது வகைகளில், தரமான மது வகைகள் உள்ளதா, மணி சார்? உங்களுக்கு தெரியவில்லை எனில், லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லவும்...'தலையில் தொப்பியுடன், ஒரு கையில் தடியுடன், 'ஸ்டைல்' ஆக, நடந்து வரும், 'அங்கிள் ஜானி' என, நான் செல்லமாக அழைக்கும், 'ஜானி வாக்கர்' என்ற, இங்கிலாந்தில் தயாராகும் பானம் தான் சிறந்தது...' என, லென்ஸ் மாமா கூறுகிறார். அதை விட சிறந்த பானம் இருக்கலாம்... எனக்கு தெரியாதே!ஆனால், இவை எதுவுமே, நம் உடல் நலத்துக்கு உகந்தது அல்ல!* ஆர்.ஜெயலட்சுமி, நெல்லை: ஜம்மு-காஷ்மீரின், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத் திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்து வெற்றி பெற்றுள்ளது பற்றி...நம் நாட்டுப் பெண்களுக்கு, அருமையான முன் உதாரணம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அவரோ, அடக்கத்துடன், 'அநாவசியமான, 'பாப்புலாரிட்டி' எனக்கு வேண்டாம்...' என்கிறார்!