உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எம்.முகுந்த், கோவை: பகலில் குட்டித் துாக்கம் போடலாமா? பகலில் அரை மணி நேரம், குட்டித் துாக்கம் போட்டால், அதன் பின், ஐந்து மணி நேரம் வேலை செய்யும் திறன் அதிகரிக்கிறதாம். ஜப்பான் போன்ற நாடுகளில், 'சியஸ்டா' என, எல்லா அலுவலகங்களிலும் குட்டித் துாக்கத்திற்கு அனுமதியும் உண்டு; அதற்கான தனியறையும் உண்டு. நீங்களும் அதே போல், ஐந்து மணி நேரம் உழைக்கத் தயாராக இருந்தால், குட்டித் துாக்கம் போடலாம்! கமலக்கண்ணன், சித்தோடு: சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத எனக்கு, தாழ்வு மனப்பான்மையாக இருக்கிறது... என்ன செய்யலாம்? நாம் தைரியமாக பேச பேசத் தான், எந்த மொழியும் நமக்கு வசப்படும். அதனால், தைரியமாக பேசுங்கள். மற்றவர்களின் கிண்டலைக் கண்டு மனம் வருந்தாதீர்கள்! இந்த பதிலை எழுதிவிட்டு, லென்ஸ் மாமாவிடம் காட்டினேன்; 'கடகட'வென சிரித்தவர், 'உற்சாக பானம் சாப்பிட்டால் சரளமாக ஆங்கிலம் பேச வரும்...' என்றார்! பி.ஹிமயா, ஸ்ரீரங்கம்: காமராஜர் உயிர் விடும் போது, கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் ஜனநாயக காவலர்...' என, கூறியதாக, தி.மு.க.,வின் திருச்சி சிவா பேசியுள்ளாரே... இது ஒரு புது வியூகம். மறைந்த தலைவர்கள், இப்படி புகழ்ந்தனர், அப்படி கூறினர் என, 'புருடா' விடுகின்றனர், அரசியல்வாதிகள். இறந்தவர் வந்து மறுப்பா கூற முடியும்? * அப்துல், திருச்சி: வீடு தேடி வரும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் எப்படி? சாலையோரங்களில், 'தண்ணி' அடித்து விட்டு படுத்துக் கிடப்பவர்களைப் பார்த்தால், 'விடியல் அரசு, உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்கள், 'பிரமாதமாக செயல்படுவதாக' தோன்றுகிறது! * சு.அருண் பிரகாஷ், துாத்துக்குடி: அரசியலில், 'கூட்டணி தர்மம்' என்ற பதம் தான் பயன்படுத்தப்படுகிறதே தவிர, 'தர்ம கூட்டணி' என்ற பதம் பயன்படுத்தப்படுவது இல்லையே, ஏன்? எதுவுமே, 'தர்ம கூட்டணி' இல்லை... விட்டமின், 'ப'வும், பதவியும் தானே பிரதானம்!பொன் ராஜபாண்டி, மதுரை: எம்.ஜி.ஆர்., தனிக்கட்சி துவங்கிய போது, தி.மு.க.,விடம் இல்லாத பதற்றம், தற்போது, விஜய் கட்சி துவங்கும் போது ஏற்படுகிறதே... எம்.ஜி.ஆரின் அசுர வளர்ச்சியை, தி.மு.க.,வால் கணிக்க முடியவில்லை; சினிமாகாரர் தானே என, மெத்தனமாக இருந்தது. சூடு பட்ட பூனை அல்லவா... அதனால் தற்போது பதறுகின்றது! பி.எல்.பரமசிவம், மதுரை: தற்போது, 86 வயதாகிய நான், கை நடுங்கிய போதும், குறிப்பிட்ட சில வார இதழ்கள் படித்து, கடிதங்கள் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்து, உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்... உங்கள் விடாமுயற்சியை கண்டு, அசந்து போகிறேன், வாசக முதலாளியாரே! தொடர்ந்து எழுதி, எங்களை ஊக்கப்படுத்துவது கண்டு, பொறுப்பாசிரியரும், நானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்!எம்.பி.தினேஷ், கோவை: மாணவர்கள் தற்போது, இன்ஜினியரிங் படிப்பில், அதிக கவனம் செலுத்துகின்றனரே... விவசாயம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு கொள்ளாதது ஏன்? இல்லையே... இன்று வேளாண்மை படிப்பை அதிகம் பேர் தேர்ந்தெடுப்பதையும், ஐ.டி., துறை பணியிலிருந்து பலர், இயற்கை விவசாயம் செய்ய, கிராமத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளதையும் கவனிக்கவும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !